நரசிம்மர் ஜெயந்தி: எளியவனுக்கு உதவிய அவதாரம்!

நரசிம்மர் ஜெயந்தி: எளியவனுக்கு உதவிய அவதாரம்!
Updated on
1 min read

அசுர வதங்கள் எல்லாமே சாமான்ய மனிதர்களுக்குப் பிரச்சினை என்பதால் ஏற்பட்டதாகப் புராணங்களில் பெரும்பாலும் சொல்லப்பட்டதில்லை. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிரச்சினைகள் எழும்போதும், அவர்களாலேயே எதிர்க்க முடியாத மிகப் பெரிய சக்திகளையும் வரங்களையும் தங்களின் தவ வலிமைகளால் அசுரர்கள் பெறும்போதும், வரம் கொடுத்தவர்களுக்கே தலைவலியாய் மாறிவிடுபவர்களை அழிப்பதற்கும் மும்மூர்த்திகளும் அவதாரங்கள் எடுத்து சம்ஹாரம் செய்த கதைகளைப் புராணங்கள் எங்கிலும் கண்டிருக்கிறோம். ஆனால், தன்னுடைய பக்தனுக்காக ஓர் அசுர வதம் நிகழ்ந்தது என்றால், அது ஹிரண்யகசிபுவை மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்ததுதான்.

வரமே சாபம்

தன்னுடைய தவ வலிமையால் ஹிரண்யன் மிகவும் நுட்பமான வரங்களைக் கேட்டுப் பெற்றிருந்தான். தனக்கு மண்ணிலோ ஆகாயத்திலோ மரணம் நிகழக் கூடாது; ஆயுதங்களாலோ, தெய்வ அஸ்திரங்களாலோ மரணம் நிகழக் கூடாது; காலை, மாலை, இரவு நேரங்களில் மரணம் நிகழக் கூடாது; தேவர்களாலோ, அசுரர்களாலோ, மனிதர்களாலோ, விலங்காலோ மரணம் நிகழக் கூடாது. இப்படி மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் யோசித்து வரங்களைப் பெற்றதில் தனக்கு இணையாக மூவுலகத்திலும் ஒருவரும் இல்லை என்கிற ஆணவத்தோடு இருந்தான். அனைவரும் தன்னையே துதிக்க வேண்டும் என்று விரும்பினான். உலகமே அவனை வணங்கி துதித்தாலும் அவனுடைய மகன் பிரகலாதனோ, நாராயணனையே துதித்தான். ஹிரண்யனின் பொறுமை எல்லை மீறியது. தன் உத்தரவை மதிக்காதவன் தன்னுடைய மகனாகவே இருந்தாலும் அவனையும் கொல்வதற்குத் துணிந்தான். ‘உன் நாராயணன் எங்கிருப்பான்...’ என்று கோபத்தில் மகனிடம் கேட்டான் ஹிரண்யன்.
பிரகலாதன், “நாராயணன் இந்தத் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்” என்றான்.
“அப்படியா..” என்று கர்ஜித்த ஹிரண்யன், தன்னுடைய கதாயுதத்தால் தூணைப் பிளந்தான். தூணின் உள்ளிருந்து பக்தன் பிரகலாதனைக் காக்க மகா விஷ்ணுவின் அவதாரமாக வெளிப்பட்டது நரசிம்மம். அவன் வாங்கிய வரங்களே அவனுக்குச் சாபமாகும் தருணம் வந்தது. மனிதனாகவும் இல்லாமல் விலங்காகவும் இல்லாமல், ஆயுதங்கள் ஏதுமின்றி, தன்னுடைய கூறிய நகங்களாலேயே ஹிரண்யனின் வயிற்றைக் கிழித்தது நரசிம்மம். ஹிரண்யனின் மரணம் பகலும் அல்லாத இரவும் அல்லாத அந்திசாயும் நேரத்தில், மண்ணிலும் நிகழாமல் விண்ணிலும் நிகழாமல் நரசிம்மத்தின் மடியில் ஹிரண்யனின் மரணம் சம்பவித்தது. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது பிரகலாதன் என்னும் பக்தனின்வழி இறைவன் உலகுக்குப் புரிய வைத்த நீதி.

நரசிம்மர் துதி

துர் எண்ணங்கள், துர்கனவுகள், துர்சக்திகளிலிருந்து மீள்வதற்கு நரசிம்மர் துதியைப் பாராயணம் செய்வது நலம்.


உக்ரம் வீரம் மகாவிஷ்ணு ஜலந்தம் சர்வோதோமுகம்
வாராதிருந்தார் வயிற்றிலிருந்தார் மண் கண்ட போதே
மறைந்தார் பிராணன் சீராய் இருந்தார் நடந்தார் தவழ்ந்தார்
அளவற்ற நாமம் காலங்கள் முற்சங்கம் முன்வந்து நிற்பாய்
அப்போது நீயுள்ள தாயே நமஸ்து
பச்சைப் பசுமையுள்ள பரந்தாமனே முகுந்தா
நச்சப் படிக்கும் நரசிம்ம ரூபா நமஸ்தே நமஸ்து.



Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in