

காதல் கடவுள் மன்மதனின் பத்தினியான ரதிதேவியின் சிற்பம்தான் இது. சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில்தான் இந்தச் சிற்பம் உள்ளது. மன்மதன் தனது கிளி வாகனத்தில் அமர்ந்தபடி அம்பராத்தூளியில் இருந்து மலர் அம்பை எடுக்கும் பாவனையில் இருக்கிறார்.
ஆனால், ரதிதேவியோ தனது அன்ன வாகனத்தில் அமர்ந்தபடி, கரும்பு வில்லில் நாண் பூட்டி மலர் அம்பை யார் மீதோ விடும் கோலத்தில் காணப்படுகிறார். அம்பு விடுவதற்காக கால்களை நிலத்தில் அழுத்திக்கொண்டு, ஆசனத்தில் இருந்து சற்று எழுந்தபடி, வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு. தலையில் நெற்றிச்சுட்டியும், சூரியபிரபை போன்ற அணிகலன்களையும், காதில் அழகிய தோடும், மார்பிலும் தோளிலும் மற்றும் கைகளிலும் முத்துக்களை கோத்த அணிமணிகளை பூண்டுள்ளாள். மற்ற தலங்களில் ரதிதேவியின் சிகை அலங்காரம் கொண்டையுடன் அமைந்திருக்கும். இத் தலத்தில் ரதியின் சிகையலங்காரம் சடை பின்னி கூந்தலை தொங்கவிட்டபடி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்த அமைப்பே அவரை மேலும் சௌந்தர்ய சுந்தரியாக காட்டுகிறது. தலையில் தாழம்பூ மடல் சூடி இருப்பதும், கூந்தலின் அடியில் குஞ்சலம் சூடியிருப்பதும் தனி சிறப்பு.
இங்கு அன்னத்தின் வாயில் கடிவாளமும், முதுகில் சேணமும், மற்றும் கால்களுக்கு அங்கபடியும் இருப்பது அழகோ அழகு. சிறப்பான வேலைப்பாடுகள் இல்லை எனினும் அழகாக இருக்கிறது அன்ன வாகனம்.
ரதிதேவியின் சிலையில் இருந்து பார்த்தால் மன்மதன் சிலை தெரியும். மன்மதன் சிலையில் இருந்து பார்த்தால் ரதிதேவியின் சிலை தெரியாது. அதுபோல் வாலி வதம் சிற்பத்திலும் ஒரு சிறப்பு பொதிந்திருக்கிறது. ராமர் சிலையில் இருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும், வாலியின் பக்கம் இருந்து பார்த்தால் ராமரின் உருவம் தெரியாது. தமிழர்களின் கலைத் திறனை உலகுக்குப் பறை சாற்றும் இது போன்ற அற்புதமான படைப்புகள் இக் கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
- வேதா