

தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்புமிக்க ஊர்களுள் மன்னார்குடியும் ஒன்று. இங்கே கிறித்தவம் வந்து 355 ஆண்டுகள் ஆகிறது. ஆன்ரூ ப்ரையர் என்ற பிரெஞ்சு பாதிரியார்தான் மன்னார்குடிக்கு கிறித்தவத்தைக் கொண்டுவந்தார். இந்த ஊரின் பழமையான தேவாலயமான ‘புனித சூசையப்பர் ஆலயம்’ பாமணி ஆற்றின் வடகரையில் உள்ள கர்த்தநாதபுரம் எனும் மாதா கோவில் தெருவில் இருக்கிறது. 180 ஆண்டுகள் பழமையைக் கொண்டது இந்த தேவாலயம். இந்த தேவாலயத்தை விஸ்தரித்துக் கட்டியவர் கிளாடியஸ் பெடின் என்ற பாதிரியார். இவரை கர்த்தநாதர் என்று இந்தப் பிரதேச கிறித்தவர்கள் அழைக்கிறார்கள். அவரின் பெயராலேயே இந்தத் தெருவும் கர்த்தநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் தெருவின் இன்னொரு சிறப்பு ‘பாஸ்கா’ எனும் ஏசுவின் திருவாழ்க்கை நாடகம். தமிழ்நாட்டில் ஆவூர், இடைக்காட்டூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் இந்த நாடகம் நடத்தப்பட்டாலும் மன்னார்குடி பாஸ்காதான் இவற்றில் பழமையானது. 156 ஆண்டுகளாக இந்த நாடகம் மன்னார்குடியில் நடத்தப்படுகிறது. தவக்காலத்தின் முடிவில் இந்த நாடகம் நடத்தப்படும். மேலுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த நாடகம் நடத்தப்படும் தெரு, ஊர் மக்கள்தான் நாடகத்தின் அனைத்துப் பாத்திரங்களையும் பங்கேற்று நடிப்பார்கள்.
இதற்காக வாரக் கணக்கில் அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒத்திகைபார்ப்பார்கள். ‘த லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீஸஸ் க்றைஸ்ட்’, ‘ஸோர்பா த கிரீக்’ போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதிய கிரேக்க எழுத்தாளர் நீகாஸ் கசந்த்சாகீஸின் ‘க்றைஸ்ட் ரீக்ரூஸிஃபைடு’ நாவல் முழுக்கவும் ஓர் ஊர் மக்கள் பாஸ்கா நாடகத்தில் நடிப்பதற்குத் தயாராவதைப் பற்றியது. அவரவர் பாத்திரத்தின் தன்மை அவர்களுக்குள் ஊறி அப்படியே உண்மை வாழ்க்கையிலும் ஆகிவிடுவார்கள். அந்த நாவலைப் படித்தபோது கிடைத்த அனுபவம் மன்னார்குடி பாஸ்காவைப் பார்த்தபோதும் கிடைத்தது.
கரோனா போட்ட முட்டுக்கட்டையால் கடந்த இரண்டு ஆண்டுகள் பாஸ்கா நடைபெறவில்லை. ஆகவே, இந்த ஆண்டு பாஸ்கா ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சி அறுந்துவிடாதவண்ணம் நிகழ்த்தப்பட்டது. கூடவே, இந்த ஆண்டின் பாஸ்காவுக்கு இளைஞர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டது இந்தக் கலையை, அது கூறும் செய்தியை எதிர்காலத்துக்கும் கொண்டுசெல்லும்படி அமைந்தது. வழக்கமாக, இந்த நாடகத்தில் பல பாத்திரங்களிலும் நடிப்பவர்கள் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருப்பார்கள். வயது முதிர்வு, மரணம் போன்ற காரணங்களால் மூத்த தலைமுறையினரின் இடத்தை சமீபத்தில் இளம் தலைமுறையினர் எடுத்துக்கொண்டிருக்கி றார்கள். இவர்கள் முந்தைய தலைமுறையினரின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தங்களுக்கென்று ஒரு பாணியையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இறுதிப் பகுதி ஏசுவாக 40 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துக்கொண்டிருந்த அந்தோணி வயது முதிர்வு காரணமாக விலகிக்கொள்ள அந்த இடத்துக்கு ராபர்ட் வந்திருக்கிறார். முக்கால்வாசிப் பகுதி வரைக்குமான ஏசு பாத்திரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாலு நடித்துவருகிறார். ஏனைய பாத்திரங்களைத் தற்போது இளையவர்கள் ஏற்றிருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இயக்கம், பொறுப்பு, தற்போது வழிகாட்டல் என்று சகாயம் துணைநின்றுகொண்டிருக்கிறார்.
ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதானே என்று மக்கள் யாரும் வராமல் இருப்ப தில்லை. திருமணமானது, வேலை கிடைத்தது என்றெல்லாம் வெளியூர் சென்றுவிட்டவர்கள் பாஸ்காவை முன்னிட்டு ஊர்திரும்பி விடுகிறார்கள். தினமும் விவிலியத்தின் வழியாகவும் பிரார்த்தனை வழியாகவும் சொரூபங் களின் வழியாகவும் அவர்கள் உரையாடிக் கொண்டி ருக்கும் ஏசுவை உயிரோடு பார்ப்பது போன்ற ஓர் உணர்வுக்காகத்தான் ஒரே பாஸ்காவைத் திரும்பத் திரும்ப மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏசு பிறக்கும் தருணத்தில் மீட்பர் பிறந்துவிட்டார் என்று பரவசப்படுவதில் ஆரம்பித்து, லாசரஸை உயிர்ப்பிக்கும்போது அதிசயப்படுதல், ஏசு காட்டிக் கொடுக்கப்படும் காட்சியில் யூதாஸைத் திட்டுதல், ஏசு சிலுவை சுமக்கும்போதும் கசையடிகள் வாங்கும்போதும் கண்ணீர் விடுதல் என்று நாடகத்தைக் காண்பவர்கள் அனைவருள்ளும் ஏசு இறங்கியிருந்தார்.
யூதாஸால் காட்டிக்கொடுக்கப்படுவதற்கு முன்பு, மரியன்னையிடம் சென்று, “நான் சாவை நோக்கிப் போகிறேன் அம்மா” என்று ஏசு கூறும் காட்சி இந்த நாடகத்திலேயே மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அதுவரை மிகவும் அடங்கிய தொனியில் நடித்த பாலு அந்த இடத்தில் கதறி அழ ஆரம்பித்துவிட, பார்வையாளர்களில் பலரும் கதறினார்கள். அதற்கேற்றாற்போல, பின்னணியில் ‘அன்பான என் மகனே/ உயிரான என் செல்வமே/ சாவை நோக்கிப் போகின்றாயே/ எவ்வாறு உன்னைப் பிரிவேன்’ என்று மரியாள் பாடும் பாடல் நாடகத்தை உணர்ச்சிகரமாக ஆக்கியது.
ஏசுவைக் காட்டிக்கொடுத்தபின் குற்ற உணர்ச்சியால் யூதாஸ் தவிப்பதும் தூக்கில் தொங்குவதும் இந்த நாடகத்தின் முக்கியமான கட்டங்கள். நல்லவர்-கெட்டவர் என்ற இருமை நிலையில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாது என்பதை யூதாஸுக்கும் இந்த நாடகம் பொருத்திப் பார்க்கிறது. யூதாஸாகவும் சாத்தா னாகவும் நடித்த அல்போன்ஸ் மிக இளையவராக இருந்தாலும் அற்புதமாக நடித்திருந்தார்.
இந்த நாடகத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று இசை. முழு நாடகமுமே கிட்டத்தட்ட இசைநாடகம் போன்று படைக்கப்பட்டிருப்பதில் பாடகர்கள் சைமன், ரோஸ்லினுடன் கிறிஸ்டோபர் மங்கள்ராஜ் (கீபோர்டு), ஆல்பெர்ட் (ரிதம் பேட்), ஜேம்ஸ் (தபேலா) ஆகியோர் கைகோத்திருக்கிறார்கள். சுமார் 20 பாடல்கள் நாடகத்தை மேலானதொரு அனுபவமாக ஆக்குகின்றன. குறிப்பாக, ‘ஓசானா... தாவிதின் புதல்வா’ என்று கம்பீரமான குரலில் சைமன் பாடியபோது, அந்த வளாகம் முழுவதும் குருத்தோலைகள் காற்றிலாடி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. வசனமும் பல இடங்களில் கவிதை போல இருந்தது (பல இடங்களில் விவிலியம் பயன்படுத்தப்பட்டிருந்தது). ‘நான் உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் தருகிறேன். எனக்குப் பின் ஒருவர் வருவார். அவர் உங்களுக்கு நெருப்பால் ஞானஸ்நானம் தருவார்’ என்று அருளப்பர் சொல்லும் வசனம் மிகவும் அற்புதமானது.
156-வது ஆண்டைத் தொட்டிருக்கும் மன்னார்குடியின் பாஸ்கா இன்னும் பல நூற் றாண்டுகள் தாண்டி, பழமையும் புதுமையும் கலந்து ஏசுவின் வாழ்க்கைச் செய்தியைக் கூறிக்கொண்டிருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். பாரம்பரியக் கலைவடிவங்கள், நாட்டார் கலைவடிவங்கள் போன்றே பாஸ்காவையும் ஆவணமாக்க வேண்டியது அவசியம். அதுவும் நடக்கும் என்று நம்புவோம்.
தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in