

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், `பாம்பாட்டிச் சித்தர் யார்?' என்ற அவை முன்னவரின் குறுக்குக் கேள்வியும், அதற்கு அறநிலையத் துறை அமைச்சர் அளித்த பதிலும் கவனம் பெற்ற செய்தியானது. சர்ப்பமாக மாறி முருகனை வழிபட்டவர், தென்காசியில் ஜீவசமாதி அடைந்தவர் என்று பாம்பாட்டிச் சித்தர் குறித்த தகவல்களை அறநிலையத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.
‘தெளிந்து தெளிந்து தெளிந்து...’ என்ற முதலடியோடு தொடங்குகிறது பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள். தெளிந்து அதனினும் தெளிந்து எனத் தொடரும் இந்த வரி உண்மையறிவே உய்விக்கும் என்ற உன்னதப் பொருளை உணர்த்துவது. அவரது 129 பாடல்கள் கிடைத்துள்ளன. 111 கண்ணிகள், எஞ்சியவை எண்சீர் விருத்தங்கள். தமிழ்நாட்டுச் சித்தர்களின் புரட்சிக் குரலை பாம்பாட்டிச் சித்தர் பாடல்களில் தெளிவாகக் கேட்க முடிகிறது. பொய்களைச் சொல்லும் குருமார்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், உண்மையான விடுதலைக்கு வழிகாட்டும் ஞானிகளை நம்புங்கள் என்பது அவரது உபதேசங்களில் முக்கியமான ஒன்று. உலக இன்பங்கள் நிலையற்றவை, அவற்றில் உள்ளத்தைச் செலுத்துவோர் மூடர்கள் என்று சாடியவர் அவர்; உடல் நிலையற்றது என்பதை எண்ணத்தில் இருத்தி எல்லோரும் பயனுற வாழ்ந்திட வலியுறுத்தியவர்.
“காடு மலை நதி பதி காசி முதலாய்
கால்கடுக்க ஓடிப் பலன் காணல் ஆகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக் கொள்ளவே
வேதாந்தத் துறையினின்று ஆடாய் பாம்பே!”
என்று பாடியவர் பாம்பாட்டிச் சித்தர். தீர்த்த யாத்திரை என்ற பெயரில் காடு, மலை, நதிகள் என்று அலைந்து திரிவதால் வீடுபேற்றை அடைந்துவிட முடியாது. உண்மை ஞானமே அதை அடைவதற்கான வழியென்று உரைத்தவர். பாம்பாட்டிச் சித்தர் வேதாந்தம் என உரைப்பது வேதத்தின் அந்தமான அத்வைதத்தை அன்று. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்வது, ஐம்புலன்களை அடக்கி ஆளுவது, ஆசைகளை அறுத்தெறிவது என்பதே அவர் சுட்டும் வேதாந்தம்.
“எள்ளளவும் அன்பு அகத்திலில்லார் முத்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை”
என்று அன்பையே மார்க்கமாக முன்னிறுத்தியவர். அதன் தொடர்ச்சியாக உருவ வழிபாட்டையும்கூட அவர் கேள்விக்கு உட்படுத்தினார். ‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி’ என்ற அவரது கேள்வி, நாதன் உள்ளிருப்பதைச் சொல்லும் சிவவாக்கியரின் வார்த்தைகளை நினைவூட்டக் கூடியது. உருவ வழிபாட்டை மட்டுமல்ல சதுர்வேதம் தொடங்கி சாத்திரம், தந்திரம், ஆகமம் என்று ‘விதம்விதம்’ ஆன நூல்களும் தம்முள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பதைச் சொல்லி உண்மை அறிவே மிகும் என்று வழிநடத்தியவர் பாம்பாட்டிச் சித்தர். சாதி, சமய பேதங்கள் ஞானிகளுக்கு இல்லை என்பதையும் உரத்துச் சொன்னவர் அவர். ‘சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்’ என்பது அவரது கனல் பொங்கும் வரிகளில் ஒன்று.
உருவகமான பாம்பு
குதம்பாய் என்று விளித்துப் பாடியதால், குதம்பைச் சித்தர் என்று பெயர்பெற்றதுபோல பாம்பை விளித்துப் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றொரு பார்வையும் உண்டு. தமிழில் வெகு மக்களிடம் அதிகம் சென்றடைந்த பாடல்கள் இவருடையதே. ‘நாதர்முடி மேலிருக்கும்’ எனத் தொடங்கும் பாடல் அதற்கு ஓர் உதாரணம்.
ஆன்மாவின் உருவகமே பாம்பு என்பது சித்தர் பரிபாஷை விளக்கம். சீறுவதும் ஆடுவதுமான பாம்பின் இயல்புகள் மூச்சுக்கு உருவகமாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், பாம்புக்குக் கண்ணே செவி. கட்செவி என்ற அச்சொல் பார்வையும் கேள்வியும் ஒன்றிய தவநிலையை நினைவுபடுத்துகிறது. முதுகுத் தண்டின் வடிவம் கருதி குண்டலினியை பாம்பின் சக்தி என்று அழைக்கும் வழக்கம் ஒன்றும் இருக்கிறது. எனவே, பாம்பென்று அழைத்து அவர் பாடியவற்றைக் குண்டலினியை நோக்கிப் பாடியதாகவே கொள்வது மரபு.
தெளிந்து ஆடும் பாம்பு
மனிதப் பிறப்பையே பாம்புக் கடியென்று ஒரு பாடலில் வர்ணித்திருக்கிறார் பாம்பாட்டிச் சித்தர். பாம்புகளைப் பற்றிய புராணக் கதைகள் மட்டுமின்றி பாம்பின் இயல்புகள் பற்றிய தகவல்களும் அவரது பாடல்களில் இடம்பெற்றிருப்பதால் அவர் பாம்பாட்டியாகவோ அல்லது அவர்களுடன் நெருங்கிப் பழகியவராகவோ இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நாகரத்தினம் தேடி கானகத்துக்குள் அலைந்த வேளையில் எதிர்ப்பட்ட சட்டைமுனியால் ஆன்மஞானம் அருளப்பெற்றவர், மரணமுற்ற மன்னனொருவன் உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தார், அரசியோடு இருந்தபோது இறந்துகிடந்த பாம்பொன்றை உயிர்ப்பித்தார் என்று அவர் குறித்த கதைகள் ஏராளம்.
பதினெண் சித்தர்கள் பற்றிய பட்டியல்களில் மாறுபாடுகள் இருப்பினும் அனைத்திலும் தவறாது இடம்பெற்றிருப்பவர் பாம்பாட்டிச் சித்தர். மருதமலையடிவாரத்தில் அவர் தவமியற்றிய குகை வழிபாட்டுத் தலமாக விளங்கிவருகிறது. அவரைப் பற்றிய உறுதியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை. அதனாலென்ன? சித்தர்களின் செய்திகள் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களில் இல்லை, மொழிப் புலமையை ஒதுக்கித் தள்ளி மக்களின் மொழியிலேயே அவர்கள் பாடிச் சென்ற பாடல்களிலேயே பொதிந்து கிடக்கின்றன. ஆடு பாம்பே! ‘தெளிந்து’ ஆடு பாம்பே!
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in