

சீக்கியக் குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்தநாள் ஆண்டு இது. இவர் சீக்கியக் குருக்களில் ஒன்பதாம் குரு. குரு ஹரி ராயின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான குரு ஹரி கிருஷ்ணன் அடுத்த குருவானார். ஆனால், நோய் கண்டு சில ஆண்டுகளில் அவர் இறக்கவே, குரு தேஜ் பகதூர் அடுத்த குருவாக அறிவிக்கப்பட்டார். குரு தேஜ் பகதூர் சீக்கிய குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், தன் ஆன்மிகச் சேவைக்கான ஒரு வழியாகவே தேஜ் பகதூர் இந்த வாய்ப்பைக் கருதினார்.
அவர் குருவாகப் பதவியேற்ற பிறகு பல இடங்களுக்குப் பயணம் செய்து சீக்கிய மதத்தின் பெருமைகளைப் பரப்பினார். சீக்கியக் குருமார்களில் அதிக அளவில் பயணம் செய்தவர் இவர்தான். ஆக்ரா, அலகாபாத், காசி, பாட்னா, அசாம், இன்றைய வங்கதேசம் போன்ற பல இடங்களுக்குப் பயணித்து சீக்கிய தர்மத்தைப் போதித்தார். தன் போதனைகளைக் கவிதையாகவும் எழுதினார். இவர் பயணம் செய்த இடங்களில் பிரார்த்தனைக் கூடங்களை எழுப்பினார். அசாமில் ஒரு குருத்வாராவை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுப்பட்டார்.
அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய அரசர்களின் நெருக்கடி அதிகமாக இருந்தது. மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதப் பிரச்சாரங்கள் ஆகியவற்றைத் தடைசெய்யும் போக்கும் தொடங்கியிருந்தது. அதற்கு எதிராக மதச் சுதந்திரம் பற்றியும் குரு கருத்துத் தெரிவித்துப் பேசினார். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இந்துக்களுக்கு மத வரியை அன்றைய அரசு அறிவித்திருந்தது. மதம் மாற்றும் முயற்சியும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அதற்கு எதிராகப் பேசிவந்த குருவின் உதவியை காஷ்மீர் இந்துக்கள் நாடியுள்ளனர்.
குருவும் “முடிந்தால் என்னை மதம் மாற்றிப் பாருங்கள், மாற்ற முடிந்தால் அவர்களும் மாறுவார்கள்” என அரசர்களுக்கு எதிராகச் சவால்விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சவால் ஒளரங்கசீப்புக்குத் தெரியவர, மாலிக்பூர் ரங்கரன் என்கிற இடத்தில் 1675-ம்ஆண்டு நவம்பரில் குரு கைது செய்யப்பட்டார் எனச் சொல்லப் படுகிறது. அவரை டெல்லிக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு அவரின் தெய்விகச் சக்தியைச் சில சித்து வேலைகள் காண்பித்து நிரூபிக்கும்படி நிர்பந்தித்தனர். அவரை மதம்மாற்றவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்து வேலைகள் செய்துகாட்டச் சொன்னபோது, ஒரு காகிதத்தில் எழுதித் தன் கழுத்தில் நூலால் கட்டிக்கொண்டார்.
“இப்போது வாளால் என் கழுத்தில் வெட்டினால் அது துண்டாகாது” என அரசு அதிகாரிகளிடம் குரு சொல்லியுள்ளார். அவர்களும் வாளால் வெட்ட தலை துண்டானது. ‘என் மதச் சுதந்திரத்தைக் காக்க நான் அளித்தது மந்திரத்தை அல்ல; தலையை’ என்னும் பொருள் தரும் வகையில் அந்தக் காகிதத்தில் குரு எழுதியிருக்கிறார். இந்தச் சம்பவம் கைதுசெய்யப்பட்ட ஐந்தாம் நாள் நவம்பர் 11-ல் நடந்தது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து மதச் சுதந்திரத்துக்காக தன் உயிரை அர்ப்பணித்தார் குரு தேஜ் பகதூர்.