நூற்றாண்டு விழா தொகுப்பு: காற்றில் கலந்திருக்கும் காருகுறிச்சி

நூற்றாண்டு விழா தொகுப்பு: காற்றில் கலந்திருக்கும் காருகுறிச்சி
Updated on
2 min read

குருவருள் திருவருள் என்பார்கள். பக்தி மார்க்கமாக இருந்தாலும் ஞான மார்க்கமாக இருந்தாலும் ஒரு சீடன் தன் குருவைக் கண்டடைவதில் இருக்கும் சிறப்பை அருளாளர்களின் வரலாற்றைப் படிக்கும்போது அறிந்திருப்போம். இதற்குச் சற்றும் குறைந்ததல்ல, ஒரு குரு தனித்தன்மையான தன்னுடைய சீடனை அடையாளம் காண்பது. ‘இதோ என்னுடைய அத்யந்த சீடன்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சரால் அடையாளம் காணப்பட்ட சுவாமி விவேகானந்தரால் உலக அரங்கில் நம்முடைய ஆன்மிக தர்மம் செழித்ததுபோல், நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட காருகுறிச்சி அருணாசலத்தால் இசை தழைத்துக் கொண்டிருக்கிறது.

ஐம்பது, அறுபது அருணாசலங்கள் சீடர்களாக என்னிடம் இருந்தாலும்.. இதோ இந்த அருணாசலம்தான் என்னுடைய புகழ் பரப்பும் அருணாசலமாக இருக்கிறார் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் பேசியிருக்கிறார் டி.என்.ஆர்.

தன்னுடைய குருவுக்கு மரியாதை குறைவான தருணம் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் காருகுறிச்சி அருணாசலம்.

ஊர்கள்தோறும் திருவிழாக்கள் செழித்து நடந்த காலத்தில் பிரபலமான புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்களைக் கச்சேரிகளுக்கு அழைப்பார்கள். அப்படி வெளியூரிலிருந்து வாசிக்கவரும் கலைஞர் களை அந்த ஊரில் இருக்கும் கலைஞர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து மேடைக்கு அழைத்துவருவது மரபு. அப்படிப்பட்ட ஒரு மரபார்ந்த விஷயத்தை டி.என்.ஆர்-க்கு ஓர் ஊரில் வழங்குவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் மறந்துவிட்டார்கள். தன்னுடைய குருவோடு வாசிக்கச் சென்றிருந்த காருகுறிச்சியாருக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல், எந்தவிதமான சஞ்சலத்துக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய நாகசுரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார். டி.என்.ஆர்., தங்கியிருந்த இடத்திலிருந்து விழா மேடை வரை, தன்னுடைய சீடன் காருகுறிச்சி அருணாசலம் லயிப்போடு வாசித்து வரவேற்பு வழங்கியதைக் கண்டு டி.என்.ஆர்., நெகிழ்ந்துவிட்டார்.

காருகுறிச்சியின் அந்த நாகசுர வாசிப்பு, ‘தன்னுடைய குருவான நாகசுர மேதை டி.என்.ஆர்-க்குத் தர வேண்டிய மரியாதை இது’ என்று அந்த ஊர் மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இருந்தது.

“வரவேற்பு வாத்தியமா நீ வாசிச்சிட்டே. இனிமே உனக்குச் சமமா நான் வாசிக்கலேன்னா, எனக்கு கவுரவம் கம்மி, என்னை நல்லா வேலை வாங்குறியேப்பா.." என்று அன்பாய் அன்றைக்கு காருகுறிச்சியாரைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார் டி.என்.ஆர். அவர்களின் குரு, சிஷ்ய உறவுக்கு இது ஒரு சோறு பதம்!

காருகுறிச்சியின் நூற்றாண்டு தொடங்கியது முதல் பல நிகழ்வுகளைத் தன்னுடைய பரிவாதினி அமைப்பின் சார்பாக லலிதாராமும், சுவாமிமலை சரவணனும் முன்னெடுத்தனர்.

காருகுறிச்சியின் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக, காருகுறிச்சி குறித்த அரிய தகவல்களைக் கொண்ட நாள் காட்டி வெளியிடப்பட்டது. இசைக் கருவி வாங்குவதற்கே முடியாமல் உள்ள நூறு மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு நூறு நாகசுரங்களை அளித்திருக்கின்றனர். புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நரசிங்கம்பேட்டை நாகசுரங்கள் அவை. நரசிங்கம்பேட்டை சிற்பிகளைக் கொண்டு அத்தகைய நாகசுரத்தை உருவாக்கி, அதனைக் கைதேர்ந்த நாகசுரக் கலைஞர்களை வாசிக்க வைத்து தரத்தை உறுதிசெய்து நாகசுரத்தை அளித்தற்குப் பின்னால் எவ்வளவு பேரின் உடல் உழைப்பு, நேரம், பணம், தியாகம் இருக்கிறது என்பதில்தான் காருகுறிச்சி என்றென்றைக்கும் நம்முள் இசையாய் இருந்து கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. இதில் பெண் நாகசுரக் கலைஞர்களும் உண்டு என்பது கூடுதல் சிறப்பு.

காருகுறிச்சி அருணாசலத்தின் படத்துடன்கூடிய சிறப்பு அஞ்சல் உறையை, தமிழகத் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு சிறப்பித்தார்.

காருகுறிச்சியின் நூற்றாண்டு தொடங்கியது முதல் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் நாகசுரக் கலைஞர்கள் காருகுறிச்சியாருக்கு இசை அஞ்சலியாக வாசித்த காணொலிகளை தனது ‘யூடுபே’ யூடியூப் வலைதளத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இளம் கலைஞர்களின் திறமையையும் காருகுறிச்சியாரின் பெருமைகளையும் கொண்டு சேர்த்திருக்கிறார் சுவாமிமலை சரவணன்.

முத்தாய்ப்பாக, என்.ஏ.எஸ்.சிவகுமார் தொகுத்திருக்கும் ‘நின்றொளிரும் மின்னல் காருகுறிச்சி ப.அருணாசலம்' என்னும் நூலை இசையுலகின் மூத்த வயலின் மேதை சந்திரசேகரன் சென்னையில் வெளியிட்டு, காருகுறிச்சியின் பெருமைகளைப் பேசினார். அவரது நாகசுர இசையைப் பின்பற்றியே ‘தாமரை பூத்த தடாகமடி' பாடலைத் தாம் வாசிப்பதாக நெகிழ்வோடு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இசையுலகமே காருகுறிச்சியைப் போற்றிப் பாராட்டிய தருணமாக இவ்விழா மிளிர்ந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in