

எல்லைப் புறத்தில் காவல் தெய்வம் நின்று அங்கு வாழும் மக்களைப் பாதுகாக்கும். உற்ற துணையாக இருக்கும். நம் புராண இதிகாசத்தில்கூட எல்லைத் தெய்வ வழிபாடுகள் உள்ளன. அறம் வெல்லும் மறம் தோற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை விளக்கும் புராணச் சித்திரம் இது.
ராம காவியத்தில் இலங்கை வேந்தன் ராவணன், தன் தங்கை சூர்ப்பனகையின் சொல் கேட்டு, சீதாப் பிராட்டியைக் கவர்ந்து வந்தான். அசோக வனத்தில் சிறை வைத்தான். அசுர சேனைகளைக் காவலுக்கு நிறுத்தினான். தம்பி விபீஷ்ணன் மகள் திரிசடையை சீதைக்குத் துணையாக வைத்தான்.
அனுமன் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குப் புறப்பட்டான். மகேந்திரமலை உச்சியிலிருந்து இலங்கைக்குத் தாவிப் பறந்தான். இலங்கை நகரத்தை ஓர் அரக்கி காவல் காத்திருந்தாள். அவளை மீறி யாரும் மாநகரத்திற்குள் அடியெடுத்து வைக்க இயலாது. இலங்கை மக்கள் அவளைத் தேவதையாக நினைத்தனர்.
அவளின் தோற்றம் அச்சம் தரத்தக்கதாக இருந்தது. வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, தடி, ஈட்டி ஆகிய எண்வகை ஆயுதங்களை ஏந்தி இருந்தாள். திங்களை இரண்டாகப் பிளந்ததுபோல வெண்மையான கொடிய கோரைப் பற்கள் இரு பக்கமும் அமைந்திருந்தன. வாயில் இருந்து புகை வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இத்துடன் ஐந்து வகையான வண்ண ஆடைகளை அணிந்து, பார்ப்பவர்கள் நடுங்கும் தோற்றத்துடன் காட்சி தந்தாள்.
அப்போது இலங்கை மதிற்சுவரைக் கடப்பது எப்படி என்று சிந்தனை வயப்பட்டு நின்ற அனுமனைக் கண்டாள்.
“ஏய்! ஏய்! நில்… நில்” எனக் கூறி அதட்டினாள். அவளின் கூச்சல் அனுமனின் செவியில் ஏறவில்லை. திரும்பிப் பார்த்த அனுமன், அவளைக் கண்டு சிறிதும் பயம் கொள்ளவில்லை.
“திரிபுரம் எரித்த சிவபெருமானே உள்ளே செல்லத் தயங்குவார்.
அப்படி இருக்க நீ யார்? எதற்காக வந்தாய்?” என்று அந்த அரக்கி கூச்சலிட்டாள்.
“நான் குரங்கு. ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்பினேன். அதனால், வந்தேன். போதுமா விளக்கம்?” என அனுமன் மிடுக்காகக் கூறினான்.
“அடே குரங்கே! நீ விரும்பினால் மட்டும் போதுமா? என் அனுமதி வேண்டாமா? ஏதோ இலங்கைக்கே நீ அதிபதி என்கிற எண்ணமா?”
அனுமனும் ஓர் ஏளனப் பார்வையை வீசினான்.
“வானர குரங்கே! நீ யாராக இருந்தாலும், இலங்கைக்குள் செல்ல இயலாது” எனக் கடுகடுத்தாள்.
அனுமன் ஒரு தந்திரம் செய்தான். “காவல் தெய்வமே! இந்த ஊரின் அழகைக் கண்ணாற கண்டு ரசிக்காமல் என் ஊருக்குத் திரும்பிச் செல்ல மாட்டேன். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை” என்று வேடிக்கையாகப் பேசுவது போல பதில் உரைத்தான்.
இவனைக் கொன்றொழிக்க வேண்டும். இல்லையென்றால், இலங்காபுரிக்குக் கேடு விளையக்கூடும் என்பதை உணர்ந்த அரக்கி, சட்டென மின்னல் போன்று தன் கையில் வைத்திருந்த முத்தலை சூலாயுதத்தால் அனுமனைத் தாக்க முற்பட்டாள். அவளின் உள்ளத்தை ஊகித்து அறிந்த அனுமன், கண் இமைக்கும் நொடிக்குள் விரைந்து சென்று அவளிடம் இருந்த சூலாயுதத்தைப் பிடுங்கி முறித்து எறிந்தான். தொடர்ந்து இருவரும் சலிக்காமல் போர் புரிந்தனர். அனுமன், அவளிடம் இருந்த அனைத்துப் படைக்கருவிகளையும் பிடுங்கி அழித்ததைக் கண்டவள், நிராயுதபாணியாக நின்றாள்.
அந்த அரக்கியைக் கொல்ல அனுமனுக்கு மனம் வரவில்லை. காரணம், பெண்ணைக் கொன்றால் பழி ஏற்படுமே என்று எண்ணினான்.
அவளோ அனுமனை வெறுங்கையாலேயே சினங்கொண்டு பாய்ந்து தாக்கினாள். விளையாட்டு காட்டி வளைந்து நகர்ந்தவன் பொறுமையின் எல்லை கடந்தபோது, அவளின் கைகளைத் தன் கையால் இறுக்கப் பிடித்தான், ஓங்கி உதைத்தான். பேரிடி தாக்கியதுபோல் அந்த அரக்கி தரையில் வீழ்ந்தாள்.
அக்கணம் முதல் அவளுக்குப் பழங்கால நினைவு உண்டாயிற்று. ‘ஆ... ஆ’ என எழுந்தவள், அனுமனைப் பார்த்து “ஐயனே! என்னை மன்னித்து அருள வேண்டும். இலங்கை நகரத்திற்குக் கொடிய உருவம் தாங்கி காவல் தெய்வமாக எவ்வாறு வந்தேன் தெரியுமா? என் பெயர் இலங்கா தேவி. நான் பிரம்ம லோகத்தில் வசித்தவள். ஒரு நாள் பிரம்ம தேவன் என்னை அழைத்து, நீ இலங்கைக்குச் சென்று அந்நகரத்துக் காவல் தெய்வமாக நின்று மக்களைப் பாதுகாத்து வர வேண்டுமெனக் கட்டளை இட்டார். நானும் அக்கட்டளையை ஏற்று இதுவரை காவல் காத்தேன்” என்றாள்.
“தாயே இப்பொழுது உன் உதவியால் நான் இலங்கைக்குச் செல்லலாமா?” என்றான் அனுமன்.
“பிரபு! தாராளமாகச் செல்லலாம். உன் உதவியால் நானும் பிரம்ம தேவனிடம் செல்லப் போகிறேன்” என்றாள் இலங்கா தேவி.
“தாயே பிரம்மனின் கட்டளையை மீறலாமா?” என்றான் அனுமன்.
மென்மையாகக் சிரித்தாள் தேவி. “எவ்வளவு காலம் இலங்கையை பாதுகாப்பது என்று கேட்டேன். ‘சிறிய குரங்கு உன்னை வதைத்துத் துன்புறுத்தி உன்னைத் தீண்டி உதைத்த அக்கணமே விண்ணுலகம் திரும்பிவிடு. ஏனெனில், அந்நகரம் அழிந்துவிடும்' என்று கூறினார். பேராற்றல் உடையவனே, நீ உன்னுடைய விருப்பப்படியே இலங்கை நகருக்குச் செல்வாயாக!” எனக் கூறிவிட்டு, விர்ரென விண்ணுலகம் நோக்கிப் பறந்தாள் இலங்கா தேவி.