

இறைவன் நம்மைப் பற்றி நம்முடைய துயர்களைப் பற்றி ஒரு நொடி நினைந்தாலும் போதுமே.. அந்த ஒரு நொடி கரிசனம் நம்முடைய ஆயுளுக்கும் போதுமே! அதைப் படிப்படியாக உயர்ந்த ரசனையுடன் கூடிய தமிழ் வார்த்தைகளில் பெரியசாமி தூரன் வடித்திருக்கும் பாடல்தான் `நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ' என்னும் பாடல். தமிழுக்கும் அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமை பெரியசாமி தூரன்.
பாரதியாரின் பன்முக அறிவு விசாலத்தை ஆய்வுபூர்வமாக அவரின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதியிருக்கும் தூரனின் நூல்கள், பாரதியைப் பற்றிய புதிய தரிசனத்தை நமக்கு அளிக்கக் கூடியவை. அறிவியல் கலைக் களஞ்சியத்தையும் குழந்தைகள் கலைக் களஞ்சியத்தையும் தமிழ் இலக்கிய உலகுக்கு தூரனின் கொடை என்றே சொல்லலாம். தூரனின் பாடல்களைப் பாடாமல் கர்னாடக இசை நிகழ்ச்சிகளை அந்தத் துறையில் கோலோச்சிய இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பலரும் முடித்ததில்லை என்பதே தூரனின் சாகித்ய வளமைக்கு பெரும் சான்று.
முரளிதர கோபாலா, கலியுக வரதன், தாயே திரிபுரசுந்தரி பாடல்களின் வரிசையில் போற்றத்தக்க தூரனின் இன்னொரு பாடல் `நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ'. இந்தப் பாடலுக்கு பிரபல கிளாரிநெட் கலைஞர் ஷங்கர் துக்கர் இசை அமைத்து, வித்யா வாக்ஸும் வந்தனாவும் பாடியிருக்கும் இந்தக் காணொலி, செவிக்கும் கண்களுக்கும் ஒரே சமயத்தில் இன்பத்தை அளிக்கக்கூடிய ஓர் `ஆடியோ விஷுவல் ட்ரீட்' என்றே சொல்லலாம்.
நரம்பு வாத்தியங்கள், கிளாரிநெட், தபேலா, கஞ்சிரா, டிரம்ஸ் எனப் பல வகையான வாத்தியங்களின் சேர்ந்திசையோடு பாடகிகளின் குரலிசையும் சேர்ந்து ஜுகல் பந்தி அனுபவத்தை தருகிறது இந்தப் பாடல்.
சரஸ்வதியின் துணையோடு மகாலட்சுமிக்கு விண்ணப்பம்
பாடலுக்கு மேற்குலகைச் சேர்ந்த பிரபல கிளாரினெட் கலைஞரான ஷங்கர் துக்கர், அந்தப் பாடல் அமைந்திருக்கும் தர்பாரி கானடா ராகத்திலேயே, அந்த ராகத்தின் ஆதாரமான பிடிகளை பற்றிக்கொண்டு வித்யா வாக்ஸும் வந்தனா அய்யரும் பாடியிருக்கின்றனர். கிளாரினெட்டில் ராகத்தின் ஆதார ஸ்ருதிகளை குறிப்பால் உணர்த்திவிட்டு பாடும் குரலோடு உறுத்தாமல் தொடர்கிறது இசை. தாளத்துக்கு மெலிதாக டிரம்ஸ், தபேலா, இடையிடையே கஞ்சிராவையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
`சாதனைகளும் சோதனைகளும் வாழ்க்கையில் மாறி மாறி வந்தாலும் உன் அருள் இல்லாமல் வாழ்வதற்கு வழி ஏது?' என்று அன்னை மகாலஷ்மியிடம் கேள்வியாலேயே ஒரு அருள் கோரிக்கையை முன்வைக்கும் இந்தப் பாடலைப் பாடிய இரண்டு பெண்களின் குரலும், பெ.தூரனின் தமிழ்த் தூறலும் கேட்பவர்களின் காதுகளுக்கு இனிமை சேர்க்கிறது. மகாலட்சுமியின் கருணையைப் பெறுவதற்கும் சரஸ்வதியின் கடாட்சம் தேவைதானே!
நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=ky9SatRoyCY&list=PLaSbrmJ_v-8q048GoexL78CneTlQ3N91x&index=10