அரங்கனின் ‘விருப்பன் திருநாள்’ வைபவங்கள்

அரங்கனின் ‘விருப்பன் திருநாள்’ வைபவங்கள்
Updated on
2 min read

“ரங்கா ரங்கா” என்று அழைக்கப்படும் திருவரங்க ரங்கநாதர் கோவில் பிரதான கோபுரத்தை ஒட்டியுள்ள உத்தர வீதியும் அதைச் சுற்றி அமைந்துள்ள, சித்திர வீதியும் நீண்ட சாலைகளைக் கொண்டவை. அவ்வாலயத்தின் நான்கு புறங்களிலும் அதே சாலைகள் வளைந்து வளைந்து வருவதால் ஒவ்வொரு திசையின் பெயரையும் சேர்த்துத் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வீதிகளிலிருக்கும் ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறமும் நன்றாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டுச் சாலைகளின் மத்தியில் கோலங்கள் போடப்பட்டு, பெருமாளை வரவேற்கக் காத்திருந்தன. பெருமாள் அவ் வழியே எழுந்தருளப் போகிறார் என்பதாலும் அவரைப் பின்பற்றி வேதமும், திவ்யப் பிரபந்தமும் இசைத்துக்கொண்டு வரும் பண்டி தர்களையும் வரவேற்று ஆசிபெற வேண்டும் என்பதும் பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது.

சித்திரை மாதத்தில் நடைபெறும் ‘விருப்பம் திருநாள்’ என்று அழைக்கப்படும் சித்திரைத் தேர்த் திருநாள் மிக முக்கியமானது. இந்தத் திருநாள் நடைபெறவிருக்கும் நாளுக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் சித்திரை வீதிவழி வரத் தொடங்குகிறார். வயதானவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்திருப்பவர்களும் அரங்கனைக் காண்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு காலம்காலமாக அனுசரிக்கப்படுகிறது.

அரங்கன் சுற்றியிருக்கும் இவ்வீதிவழி வந்து அனைவருக்கும் அருள்பாலிக்க ஏற்படுத்தப்பட்டதே இந்தச் சித்திரைத் திருநாள் என்பதை ஊகிக்க முடிகிறது.

ஒரு நாள் ஒரு வாகனம்

இந்த ஆண்டு இந்தத் திருநாள் சித்திரை 8ஆம் தேதியிலிருந்து (21-04-2022) தொடங்கி பதினெட்டாம் தேதி (01-05-2022) வரை நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடு ஆகி, பெருமாள், திரும்பி கோவிலுக்கு வரும்போது, வேறொரு வாகனத்தில் வருகிறார். இரண்டாம் நாள் பல்லக்கிலும், மூன்றாம் நாள் சிம்ம வாகனத்திலும், நான்காம் நாள் இரட்டை பிரபையிலும், ஐந்தாம் நாள் சேஷ வாகனத்திலும், ஆறாம் நாள் தங்க ஹம்ச வாகனத்திலும், ஏழாம் நாள் திருச்சிவிகையிலும், எட்டாம் நாள் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் புறப்பட்டு வீதிவழி வலம் வந்து ஒவ்வொரு திசையிலிருக்கும் ஒவ்வொரு மண்டபத்தையும் வெவ்வேறு நாளில் அடைந்து பொதுமக்களுக்குத் தரிசனம் தந்து திரும்ப கோவிலை வந்தடைதல் பக்திப் பரவசமான காட்சியாக இருக்கும். பெருமாள் திரும்பி வரும்போது வேறு வாகனத்தில் கோவிலில் இருக்கும் கண்ணாடி அறையை வந்து அடைகிறார்.

பெருமாளின் பல்லக்கோ மற்ற வாகனங்களோ தேர் போன்று ஊர்கூடி இழுக்க முடியாதவை. அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருக்கும் பெருமாளின் வாகனத்தைத் தோளில் சுமந்துகொண்டு வழியிலிருக்கும் பக்தர்களுக்குத் தரிசிக்க நேரம் தந்து நின்றுநின்று செல்ல வேண்டும். பெருமாளின் வாகனம் கட்டப்பட்டு இருக்கும் வாரை எனப்படும் பெரிய மூங்கில் கட்டையைத் தூக்குவது அவ்வளவு எளிதல்ல. அதன் மேல் பெருமாள் அமர்ந்திருக்கும் வாகனம் இன்னும் அதன் எடையை கூட்டிவிடும். இதனைத் தூக்கிச் செல்ல பலமும் பயிற்சியும் வேண்டும். பெருமாளின் வாகனம் வைக்கப்பட்டிருக்கும் வாரைகளைத் தூக்க ஒவ்வொரு பக்கத்துக்கும் குறைந்தது பத்துப் பதினைந்து பேர் தேவைப்படுவார்கள். தூக்குபவர்கள் தன்னிச்சையாக தூக்கிச் செல்ல முடியாது.

ஒன்பதாம் நாள் திருத்தேர் வைபவம்

ஒரு பழுத்த பட்டாச்சாரியார் முன் செல்ல பெருமாளின் வாகனத்தைப் பின்னால் தூக்கிவர வேண்டும். வழிநடத்திச் செல்பவர் “ஏலப் பண்ணு” என்று சொன்னால்தான் மேற்கொண்டு தூக்கிச்செல்ல முடியும். பத்து நாட்கள் நடக்கும் இந்த விருப்பம் திருநாளிற்கு மகுடம் வைப்பது போன்று இருப்பது ஒன்பதாம் நாள் நடக்கும் திருத்தேர் நாளாகும். தேருக்கான வேலைப்பாடுகள் முதல் திருநாளாம் கொடியேற்றத் திருநாளில் இருந்து தொடங்கிவிடும்.

அழகாக நிலையில் கண்ணாடி அடைப்பில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் தேரை அன்று முதலே தூசு தட்டி, சுத்தம் செய்து, வண்ணம் பூசி, அலங்கார வளைவுகள் அமைக்க தொடங்கி விடுவர். சித்திரைத் தேரின் பீடமே அகலமான ஒன்று என்பதால் அதன் சக்கரங்களும் பெரிதாகவே இருக்கின்றன. அதன் பீடத்தில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுக் காண்பவர் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. தேர்த் திருவிழாவிற்கு அருகிலிருக்கும் அனைத்துக் கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தேர் இழுத்து அரங்கனின் ஆசி பெற்று ஆனந்தம் அடைகிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in