

கதிரவனின் எழுதலுக்கும் விழுதலுக்கும் இடைப்பட்ட ஓர் அன்றாடமானது இடைவிடாமல் நம்மிடம் வரும்போது, அதுவே ஒரு தேய்நாளாகிவிடுகிறது. சலிப்பும் சோர்வும் மனிதனை அலைக்கழிக்கின்றன. நம்மிடம் அன்றாடம் இருந்து வரும் உடல் நலம், மன நலம், பொருள் நலம் உள்ளிட்ட வாழ்க்கைப் பேறுகளை ஏதாவது கெடு நிகழ்வோ விபத்தோ சிதைத்துவிடும் வரைக்கும் சராசரி நாளின் அருமை பெருமையை நாம் உணர்வதில்லை.
தேய்நாட்களின் சலிப்பைப் போக்க, பெரும் இடர்களற்ற சராசரியான வாழ்க்கை கிட்டுவதென்பதே ஓர் அருட்கொடைதான் என்பதை அதிரடிகளின் வழியாக அல்லாமல் இயல்பாக உணர்ந்திட நோன்பு மாதமும் அதன் நிறைவாக ஈகைத் திருநாளும் நம்மிடம் வந்து சொல்கின்றன. ஆனால், ஈகைத் திருநாளை இதற்குள் மட்டும் குறுக்கிட இயலாத அளவிற்கு அது கொள்ளும் விரிவு பெரியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மானிடத்திற்கு மிக அத்தியாவசியமான உண்ணுதல், பருகுதல், உடலின்பம் ஆகியவை நோன்பு காலத்தில், ஒரு நாளின் பாதியில் துறக்கப்படுகின்றன. அதுவே அந்த நாளின் பிற்பகுதியான இரவில் அனுமதிக்கப்படுகின்றன.
நமக்கு மட்டுமே முழு உடைமையான, பிறர் எவராலும் மறுக்கப்பட முடியாத, இன்றியமையாத அந்த வளங்களின் மீதான உடைமைத்துவமும் உடைமை துறத்தலும் ஒரே நாளிற்குள்ளாகவே சடுதியாக நடந்தேறுகின்றன. மாறிமாறி நடத்தப்பெறும் இந்த நிகழ்வுகளுக்குள் அழுத்தமான உணர்த்தல்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.
நமக்கு வழங்கப்பெற்ற வளங்கள் அடங்கலாக இவ்வுலகின் நிலையாமையும், நாம் துய்க்கும் வளங்களின் உண்மையான உடைமையாளனும் மிக நெருக்கமான இடத்திலிருந்து நமக்கு நினைவூட்டப்படுகின்றன. மனிதனுக்கு வழங்கப்பெற்றுள்ள செயல்பாட்டுத் தேர்வு சுதந்திரமும் இறை ஏவல் விலக்கல்களுக்கு மனிதனின் அடிபணிதலும் அருகருகே வைக்கப்பட்டு அவன் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றான்.
ஒரு மாத காலம் நீடிக்கும் தடுப்பதும் கொடுப்பதுமான சுதந்திரத்துக்கும் அடிபணித லுக்குமான இந்தத் தினசரி தீவிர பயிற்சி நிறைவடையும் நாளில் உரிமை யாளனுக்கும் பணியாளனுக்கும் இடையிலான இனிய தேர்வின் பெறுபேறாக நோன்புப் பெருநாள் வந்தடைகிறது. தேக்கப்பட்ட நீரின் மௌனம் மதகுகள் வழியாகத் தகர்ந்துபோவது போல, ஒரு மாத காலப் பயிற்சியானது ஒருநாள் கொண் டாட்டத்தில் கரைந்தழிந்து விடாமலிருக்க அந்தப் பெருநாளும், வளங்களைப் பகிர்ந்தளிக்கும் ஈகைப் பெரு நாளாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே நாம் காணும் பண்டிகை களிலும், திருநாட்களிலும் விளம்பரங்களின் வழியாக மக்களின் நுகர்வுணர்வானது வெறியாக மாற்றப்படுகிறது. இறுதியில் இதன் மொத்த ஆதாயத்தையும் சந்தையின் ஒரு சில பெரு முதலாளிகளே அள்ளிக்கொள்கின்றனர். ஆனால், பெருநாளுக்குரிய ஈகையை வழங்கிய பின்னரே பெருநாள் கொண்டாட்டங்களைத் தொடங்க இயலும் என்கிற விதியானது நோன்புப் பெருநாளை என்றென்றைக்கும் மக்கள் திரள் அனைவருக்குமான திருநாளாகவே உறுதிப்படுத்துகிறது.
ஒரு மனிதனின் வாழ்விற்கும் கொண்டாட்டத் திற்கும் தேவையான எல்லா நலன்களும் அவனுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. அதில் பிறருக்கும் உள்ள பங்கை வலியுறுத்தி நடைமுறைச் சாத்திய மாக்குவது ஈகைப் பெருநாள்.
அண்ட சராசரங்களின் நிரந்தரமான உடைமை யாளனான ஏக இறைவன் மானிடத்தைத் தன் ஒற்றை சொல்லிலிருந்து படைத்து இந்த நிலவுலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறான். தவணை முடியும்போது அவன் நம்மை இறப்பின் வழியாகத் தன்னிடமே மீட்டுக்கொள்கிறான். முதலுக்கும் முடிவுக்கும் இடையில் எண்ணி அளிக்கப்பட்ட நாட்கள்தான் இவ்வுலகில் மனிதன் வாழும் வாழ்க்கை. இந்தக் காலகட்டத்தில் அல்லாஹ் தனது உடைமைகளிலிருந்து சிலவற்றை நம்மிடம் இரவலாக அளித்து அதில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பரிசோதிக்கிறான். அந்தப் பரிசோதனையை நிறைவாகக் கடப்பவர்களுக்குக் கண்குளிர் வெகுமதியும் காத்திருக்கிறது.
வாழ்க்கையின் இந்த அரிய பெறுமானத்தைக் குறியீடாக்கி உணர்த்திடத்தான் பசியும் தாகமும் களைப்பும் ஓய்வின்மையும் கொண்ட ரமலான் மாதத்தையும் அதன் இறுதியில் களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த பெருநாளையும் இணைத்துள்ளான் இறைவன். இவ்வுலக வாழ்க்கைக்கும், தீர்ப்பும் கூலியும் வழங்கப்படும் மறுவுலக வாழ்க்கைக்குமான உயிர் செறிந்த படிமங்களாக நோன்பும் பெருநாளும் ஆக்கப்பட்டுள்ளன.
ஓர் ஆண்டின் எல்லாப் பருவக் காலங்களிலும் சுழன்று வரும் இத்தகைய பயிற்சிகள்தான் கீழ்க்கண்ட மாமனிதர் களை எவ்விதத் தனி யத்தனமுமின்றி சமூகத்திற்குள் முளைப்பித்துக் கொண்டே இருக்கின்றன.
பசித்த வறுமையால் தன்னுடைய இளம் பருவத்தில் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த ஹாஜியார் அண்டையிலுள்ள சிறிய தீவு நாட்டை சேர்ந்தவர். நேர்மை, திறன், கடும் உழைப்பு, அனைவருக்கும் தொழில் வழிகாட்டுதல் போன்ற நற்பண்புகளால் பின்னாட்களில் புகழ்பெற்ற மாணிக்க வணிகராகி நிலை நின்றவர்.
தன்னுடைய உழைப்பின் சேமிப்பிலி ருந்து முதல் சொத்தாக அவர் ஒரு வணிகக் கட்டிடத்தை வாங்குகிறார். அக்கட்டிடம் இருக்கும் இடமோ அந்நாட்டினுடைய ஆட்சித்தலைவரின் அதிகாரப் பூர்வ மாளிகைக்கு எதிரில். அந்தச் சொத்தை ஆவணப்பதிவு பண்ணுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது ஒரு ரமலான் காலம். ஏதிலியர் இல்லமொன்றிற்கான நன்கொடை கேட்டு அதன் நிர்வாகிகள் இருவர் மாணிக்க ஹாஜியாரை அணுகுகின்றனர். வந்தவர்களை இரண்டு நாட்கள் காத்திருக்கச் சொன்னார் அவர்.
நல்ல தொகையுடன் வருவார் எனக் காத்திருந்தவர்களிடம் தனது முதல் சொத்திற்கான ஆவணத்தை நீட்டினார் மாணிக்க ஹாஜியார். குழம்பி நின்றவர்களிடம் அதை வாசிக்கச் சொன்னார். ஏதிலியர் இல்லத்தின் பெயரில் சொத்து எழுதப்பட்டிருந்தது. எதிர்த்த உற்றார் சுற்றோரிடம் “கொடுத்தது மட்டும்தான் எனக்கு” என ஒற்றை வரியில் கடந்துவிட்டார் மாணிக்க ஹாஜியார்.
இதைத்தான், ‘நீ கடலில் எறிந்தால் அதைப் பாலைவனத்தில் காண்பாய்’ என்கிறார் மௌலானா ரூமி. பள்ளிக்கூடம் சென்றிராத மாணிக்க ஹாஜியாரும் அறிஞரும் ஞானியுமான மௌலானா ரூமியும் ஒளியினாலான தங்கள் தடங்களைப் பெறுவது கீழ்க்கண்ட மூலத்திலிருந்துதான்.
“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமை யாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப் பிக்கும் ஒரு வித்தை போன்றது; அல்லாஹ் தன்னை நாடியவர்களுக்கு இதை மேலும் இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் தாராளமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல் குர்ஆன் 2:261).”
இத்தகைய நம்பிக்கை வழிப் பயிற்சிகளின் மூலமாக பொதுக் கொண்டாட்டங்களிலிருந்து தனி மனிதனுக்குள் வளர்த்தெடுக்கப்படும் பகிர்தல்களும் ஈகைகளும் நிறுவனத்தின், அரசின் நலக்கடமையாகப் பெருந்திரள் கடமையாக வடிவெடுக்கின்றன. ஒருவேளை அரசோ நிறுவனமோ வலையமைப்போ உதிர்ந்து செயலிழக்கும்பட்சத்தில் இந்த ஈகை தடைபட்டு விடாது.
இறை நம்பிக்கையும் ரமலானும் நம்பிக்கையாளர்களும் நீடித்திடும் காலமெல்லாம் இந்த அறங்களும் நீடித்திடும். ஏக இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதரிடமும் தங்கி நிற்கும் அந்த ஈகையின் ஆணி வேரானது, அவர்கள் பற்றி வாழ்ந்திடும் இறை நம்பிக்கைக்குள் ஆழமும் அகலமுமாக வேரூன்றியுள்ளது.