

பக்தி இசை, செவ்வியல் இசை, திரை இசை எனப் பல பரிமாணங்களிலும் யேசுதாஸின் இசைப் பங்களிப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
இசைக் கலைஞரும் நாடக நடிகருமான அகஸ்டின் ஜோசப்தான், யேசுதாஸின் பாடும் திறமையை உணர்ந்து அவருக்கு ஆரம்ப இசைப் பயிற்சிகளை வழங்கிய முதல் குரு. அதன்பின், யேசுதாஸை முறையாக இசை கற்றுக் கொள்வதற்காக அவரின் தந்தை திருப்புனித்துராவிலிருக்கும் ராதாலஷ்மி விலாசம் இசைப் பள்ளியில் சேர்த்தார். அங்குதான் யேசுதாஸுக்கு இசையின் பால பாடங்கள் முறையாகத் தொடங்கின.
மதநல்லிணக்கப் பாடல்
யேசுதாஸ் பாடிய முதல் பாடலே மதநல்லிணக்கப் பாடலாக அமைந்தது. மலையாள திரைப்படம் `கால்ப்பாடுகள்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் எம்.பி.ஸ்ரீனிவாஸின் இசையமைப்பில் ஸ்ரீ நாராயண குருவின் `ஜாதி பேதம் மததுவேசம்’ என்று தொடங்கும் நான்குவரி ஸ்லோகமே திரையில் ஒலித்த யேசுதாஸின் முதல் குரல் பிரவேசம். அதே படத்தில் ஒரு டூயட் பாடலையும் யேசுதாஸ் பாடுவதற்கு வாய்ப்பளித்தார் எம்.பி.ஸ்ரீனிவாஸ். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் வந்தன.
குருவின் வழியில் பக்தி
திரையில் ஒருபக்கம் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் தன்னை ஒரு செவ்வியல் இசைக் கலைஞராகவும் செம்பை வைத்யநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாசய்யர், `பல்லவி’ நரசிம்மசார்யா ஆகிய மேதைகளிடம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டே இருந்தார். அதனால் அவரால் பாரம்பரியமான கர்னாடக இசை மேடைகளிலும் திரை இசையைத் தாண்டி புகழ் பரப்ப முடிந்தது. நரசிம்மசார்யாவின் இறுதிக் காலம் வரை தன்னுடைய வீட்டிலேயே வைத்து அவரை பராமரித்துக் கொண்டார் யேசுதாஸ். செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவைப் போற்றும் வகையில் செம்பையில் ஆண்டுதோறும் செம்பை ஆராதனை இசை நிகழ்ச்சிகளை நடத்திவருவதோடு அவரின் குரு செம்பை கச்சேரி செய்த சென்னை, கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கச்சேரி செய்தும் வருபவர் யேசுதாஸ்.
சமரசம் உலாவும் சங்கீதம்
“நான் சோர்ந்திருக்கும் சமயங்களில் எல்லாம் மூன்று இடங்களுக்குச் சென்றால் தெம்பாகிவிடுவேன். அவை, திருவையாறு, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், கொச்சினில் இருக்கும் புனிதர் ஜோசப் ஆலயம்” என்பார் யேசுதாஸ்.
அண்மையில் தரங்கிணி இசை நிறுவனத்துக்காக யேசுதாஸ் பாடி வெளியிட்டிருக்கும் `நீலவர்ணன்' என்று தொடங்கும் மலையாளப் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பாடி வெளிவந்திருப்பது. முத்துசுவாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனையைப் பாடி வறட்சியான பிரதேசத்தில் பெருமழை தருவித்ததை அவரின் வரலாற்றின் மூலம் அறியமுடியும். இதோ `அமிர்தவர்ஷினி ராகம் போலே அமிர்தமாய் பொழியும் கண்ணனின் காருண்யம்' கருணை மழையை பொழிகிறது. சனல்குமார் கானப்ரியாவின் இதமான இசையில் பரணிகாவு பிரேம்குமாரின் பாடல் வரிகள் சுகமாக நெய்யப்பட்டிருக்கின்றன.
சிலரின் தோற்றத்தில் வயதும் அனுபவமும் கூடகூட தேஜஸ் கூடும் என்பார்கள். யேசுதாஸின் தோற்றத்தில் மட்டுமல்ல, இத்தனை வயதிலும் எத்தனை இனிமையோடும் குழைவோடும் அவரின் குரல் இந்தப் பாடலில் ஒலிக்கிறது என்பதைக் கேளுங்கள். கொச்சின் துறைமுக நகரத்திலிருக்கும் கட்டச்சேரியும் அகஸ்டின் ஜோசப்பும் யேசுதாஸின் முதல் எழுத்துகளின் விரிவாக்கம். யேசுதாஸோ இசையின் விரிவாக்கம்!
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=mcx2tyQEs3o