

இறைவனை விட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான் இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது நாமசங்கீர்த்தனம். ராமா, கிருஷ்ணா என்னும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையவை என்கின்றனர் நாமசங்கீர்த்தனத்தில் கரைகண்ட பெரியவர்கள்.
இரண்டு கைகளிலும் சப்ளாகட்டையை ஒலித்தபடி தன்னை மறந்து மந்திர ஸ்தாயியிலும் உச்ச ஸ்தாயியிலும் பாடும் ஸ்ரீமாத்மிகாவின் குரலும் அவரோடு இணைந்துபாடும் குழந்தைகளின் குரலும் மெலிதாகப் பின்னணயில் ஒலிக்கும் ஹார்மோனியம் மிருதங்கத்தின் தாளமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்களோடு சேர்ந்து நம்மையும் பாடவைக்கிறது. இதுதான் பஜனை பத்ததியின் சிறப்பு.
`சாதுளரா மீரு ரண்டி
பக்துளரா மீரு ரண்டி
பாண்டுரங்கன சேவித்தமோ.. பாண்டுரங்கா பாண்டுரங்கா...
ரண்டி பாண்டுரங்கா..’
`ரா..ரா... நா வெண்ணமுத்து கோபாலா...
கோபாலா கோபாலா கோவிந்த கோபாலா...’
விட்டல் ஸ்ரீமாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களை, ஸ்ரீ வேங்டேஸ்வர பக்தி சேனல் `நாமம் திவ்ய நாமம்’ என்னும் தலைப்பின்கீழ் யூடியூபில் பதிவேற்றியிருக்கின்றனர்.
நாராயண நாமத்தைச் சொல்லி பக்தன் ஒரு அடி எடுத்துவைத்தால் நாராயணன் பத்து அடிகள் பக்தனை நோக்கி எடுத்துவைப்பான் என்பார்கள். ஆனால் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீமாத்மிகாவுடன் இணைந்து பாடுவதை அந்த நாராயணனே பக்தர்களோடு பக்தராக சேர்ந்து கேட்டிருப்பான் என்று தோன்றுகிறது.
பக்தியைப் பாடிப் பரப்பும் குழந்தைகள்
சென்னையைச் சேர்ந்த விட்டல் ஸ்ரீமாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களுக்கு மொழிகளைக் கடந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இவர்களின் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மிருதங்கம் வாசிக்கும் சாய்ராம், ஸ்ரீமாத்மிகாவின் அண்ணன். இவர்களின் இசையில் அன்னமாச்சார்யா, புரந்தரதாசர், ராமதாசர் போன்ற பலரின் பாடல்களும் செவிக்கு விருந்தாகின்றன. கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, நாமசங்கீர்த்தனம் சேர்ந்த புதிய பாணியை தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் இந்தக் குழந்தைகள்.
`தானுஜயே கா… தானுஜயே கா…’ என்னும் உருதுப் பாடலாக இருந்தாலும் சரி, `கின்கின் தாரே லங்குதியராத்தா’ என்னும் பர்ரி நிஸாமியின் கஸலாக இருக்கட்டும், சாகர் ஸித்திக்கின் உருது கஸல்களாகட்டும் மாத்மிகாவின் குரல் அவ்வளவு உருக்கமாக ஒலிக்கிறது.
ரங்கம்மா மாஜி ரங்கம்மா பாடலைக் காண:
https://www.youtube.com/watch?v=eJoTf_2MHdQ