

# அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை. கைபேசி: 94440 47790.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோர் அருளிய திருமுறைப் பாடல்களை ‘மூவர் தேவாரம் மூலம் முழுவதும்’ என்னும் நூலில் மிகவும் நேர்த்தியாக அருணா பதிப்பகத்தார் தொகுத்திருக்கின்றனர். திருஞானசம்பந்தரின் மூன்று திருமுறைகளின் முடிவில் திருவிடைவாய், திருக்கிளியன்னவூர், திருமறைக்காடு பதிகங்கள் பிற்சேர்க்கையாகத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
மூன்று அருளாளர்களின் திருமுறைகளுக்கும் பாட்டு முதற்குறிப்பு அகரவரிசைப் பட்டியலையும் இணைத்திருக்கின்றனர். இதன் மூலம் குறித்த பாடலை நொடிப்பொழுதில் இந்தப் பதிகக் கருவூலத்திலிருந்து எளிதில் கண்டெடுக்க முடியும். திருமுறைகளை ஆய்வு நோக்கில் அணுகும் மாணவர்களும் பக்தியில் தோய்ந்து மனமுவந்து பதிகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பக்தர்களும் ஒருங்கே பயன்பெறும் வகையில் வெளிவந்துள்ளது இந்த ஏழு திருமுறைகளின் தொகுப்பு.
உத்தவ கீதை (எளிய உரைநடையில்)
# தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், டாக்டர் வி.மோகன்
வெளியீடு: சி.பி.ஆர்.பப்ளிகேஷன்ஸ், சென்னை. தொலைபேசி: 044-48529990.
பாகவதத்தின் 11வது ஸ்கந்தத்தின் உள்ளடக்கமாக விரிவது உத்தவ கீதை. பகவான் கிருஷ்ணர், உத்தவருக்கு உபதேசமாக அருளியதே உத்தவ கீதை. அவதார நோக்கம் நிறைவேறியவுடன் வைகுண்டத்துக்குப் போகும் முனைப்பில் இருக்கிறார் கிருஷ்ணர். அவரின் பிரிவைத் தாங்க முடியாத உத்தவர், தன்னையும் உடன் அழைத்துச் செல்ல கிருஷ்ணரிடம் வேண்டுகிறார். அப்போது கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் நீண்ட உரையாடல் நடக்கிறது. பல தத்துவங்களையும், யோகங்களையும் பற்றி உத்தவருக்கு விரிவாக எடுத்துச் சொல்கிறார் கிருஷ்ணர். கர்ம, பக்தி, ஞான யோகங்களில் உத்தவருக்கு இருந்த கேள்விகளுக்கான விடைகளை கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார்.இதை அனைவரும் எளிமையாக உணரும் வகையில் தொகுப்பாசிரியர்கள் இந்த நூலைத் தொகுத்திருக்கின்றனர்.
திருவாசகக் கனிகள்
# பூங்குன்றம் நாக.இராமசாமி அலமு புத்தக நிலையம், சென்னை.
கைபேசி: 94449 09194.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திலி ருந்து 74 பாடல்களுக்கு நூலாசிரியர் வழங்கி யிருக்கும் நயமான உரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ‘திருப்புலம்பல்’ என்னும் பதிகத்துக்கு நூலாசிரியரின் விளக்கம் இது: அடியேன் உற்றாரை விரும்பேன். அடியவனது ஊரிது, பேரிது என்பவனவற்றையும் விரும்பேன், கற்றாரையும் எளியேன் விரும்பேன், கற்பனவும் இனிப்போதும், கன்றை எண்ணிக் கசிந்துருகும் பசுபோல, இடைவிடாது ஒலிக்கும் கழலணிந்த நின் திருவடியையே எண்ணிக் கசிந்துருக வேண்டுவன் யான்.
ஸ்ரீரங்க மகாத்மியம்
- ஸ்ரீரங்கத்தின் அளவிட முடியாத பெருமையும் மகிமையும்
# வேணு சீனிவாசன், ஸ்ரீ பாரதி பப்ளிகேஷன்ஸ், சென்னை. கைபேசி: 99523 35505.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்களில் திருவரங்கம் எனப்படும் ரங்கத்தின் மகிமைகளை, அதன் தொன்மையை, ரங்கா என இறைவனை அழைப்பதில் நாம் பெறும் நன்மைகளைப் பற்றியும், ரங்கபுர விமானம், கோபுர தரிசனம், அங்கு நடைபெறும் திருவிழாக்கள், ரங்கம் கோவிலின் மகத்துவத்தைப் பேசும் ஆழ்வார்களின் பாசுரங்கள், ரங்கத்து நம்பெருமாள் நமக்கு அருளும் ஆறு குணங்களின் சிறப்புகள் போன்றவற்றை இந்நூலில் மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
சாயி சரிதம்
# கவிஞர் நீலம். மதுமயன்
பாபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
கைபேசி: 73972 38827.
சீரடி பாபாவின் அமுத மொழிகள், வறிய மக்களுக்கு அவர் புரிந்த நன்மைகள், அருளாசிகள், அற்புதங்கள் போன்றவற்றை விவரிக்கும் நூல். இந்நூலில் பாபாவின் பகவத் கீதை விளக்கம், பந்தத்திலிருந்து விடுபட பாபா சொல்லும் உபாயம், பாபாவின் பக்திக்கும் அருளுக்கும் பாத்திரமாகி அவரின் அன்பைப் பெற்ற பக்தர்கள் என்பது போன்ற 52 தலைப்புகளில் சாயி பக்தர்களுக்காகக் கட்டுரைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர்.