எழுபது ஆண்டுகளாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் நூல்! - அப்துற் றஹீம் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை

எழுபது ஆண்டுகளாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் நூல்! - அப்துற் றஹீம் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை
Updated on
3 min read

வறுமையில் வாடிக்கொண்டிருந்தவனை வானத்தை நோக்கியும், தோல்வியில் துவண்டு கிடந்தவனை வெற்றியை நோக்கியும் திருப்பிய மனிதர் அப்துற்-றஹீம். எதை வைத்து அப்படிச் செய்தார் அப்துற்-றஹீம்? அதற்கு முன், ‘யார் அந்த அப்துற்-றஹீம்?’ என்று இந்தத் தலைமுறையில் சிலர் கேட்கலாம். அப்துற்-றஹீம் ஓர் எழுத்தாளர். தன்னுடைய எழுத்துகளாலேயே பலவற்றைச் சாதித்தவர்.

நூறு ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்த அவருடைய நூற்றாண்டு இது என்பது மட்டுமே அதற்கான காரணம் இல்லை. தமிழகம் மறந்துபோன ஓர் ஆளுமை அவர்; அபாரமான பல காரியங்களை ஆற்றியவர் அவர் என்பதும்கூட அதற்கான காரணங்கள்.

இளம்பருவம்

மு.றா.மு.முகம்மது காசிம் - கதீஜா பீவி தம்பதிக்கு 1922 ஏப்ரல் 27 அன்று பிறந்தவர் அப்துற்-றஹீம். அப்பா முகம்மது காசிம், வாணிபத்திலும் விவசாயத்திலும் கொடிகட்டிப் பறந்தார். எல்லோரிடத்திலும் அன்பும் ஈகையும் கொண்ட கொடையாளர். ராமநாதபுரம் பகுதியில் பிரபலமான மனிதர். ஜில்லா போர்டு உறுப்பினராக இருந்தவர்.

அப்துற்-றஹீமுக்கு அப்போது ஐந்து வயது. அரபி மதரஸாவில் சேர்க்கப்பட்டார். அங்கு அரபு மொழியையும் குர் ஆன் வசனங்களை ஓதவும் கற்றுத் தேர்ந்தார் றஹீம். மதரஸாவில் எழுத்தாணி கொண்டு எழுதவும் கற்றுக்கொண்டார்.

தொடர்ச்சியாக தொண்டியில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்த றஹீம், காரைக்குடி எஸ்.எம்.எஸ். பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். புதுக்கோட்டை கல்லூரியில் இன்டர்மீடியேட் படித்தவர், சென்னை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. முடித்தார். படிப்பில் துடியானவராக விளங்கிய அப்துற் றஹீமின் எழுத்துகளும் வீரியமாக இருந்தன.

வந்தது ‘அரேபியாவின் அதிபதி’

அப்துற் ரஹீமை எப்படியாவது அரசுப் பணியில் சேர்த்துவிட வேண்டும் என நினைத்தார் அப்பா காசிம். றஹீமின் பெரிய மாமா சையது முகம்மது சாஹிப்பிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்தார் காசிம். சாஹிப்பும் தீவிரமாக முயன்றார். முயற்சி ஈடேறவில்லை. பின்னர், சொந்த ஊரான தொண்டியிலேயே நூலகப் பணியில் சேர்ந்தார் அப்துற் ரஹீம். அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘லார்ட் ஆஃப் அரேபியா’ நூலைப் படித்தார். அந்த நூல் அவரை வாரிச் சுருட்டியது.

தமிழில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அப்துற் றஹீம் கருதினார். தனது தந்தையிடமும் இது குறித்துப் பேசினார். காசிமும் அந்த நூலை வாசித்திருந்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில் ‘அரேபியாவின் அதிபதி’ என்கிற பெயரில் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்தார் அப்துற் றஹீம். தந்தை காசிம் மகனுடைய பிரதியைச் செம்மையாக்கினார்.

புகழ்பெற்ற வரலாற்று நூலாசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்த வெ.சாமிநாத சர்மாவிடம் பிரதியைக் கொண்டுசென்றனர் தந்தையும் தனையனும். நூலை வாசித்த அவர் அதன் சுவையில் லயித்துப்போனார். ஒரு நல்ல பிரதி தரமான நூல் வடிவமும் பெற வேண்டும் என்று எண்ணியவர் அன்றைக்குத் தமிழின் சிறந்த பதிப்புகளுக்குப் பேர்போன ‘சக்தி காரியாலயம்’ வை.கோவிந்தனிடம் இதைக் கொண்டுசென்றார். கோவிந்தனுக்கும் பிரதி பிடித்துப்போக, ‘சக்தி காரியாலயம்’ பிரசுரமாக வெளிவந்தது ‘அரேபியாவின் அதிபதி’.

இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனை

இதற்குப் பின் சொந்தமாக நிறைய எழுதலானார் அப்துற் றஹீம். ‘வாழ்க்கையில் வெற்றி’ நூலை எழுதியவர், அதைச் சொந்தமாக வெளியிட்டார். அந்தச் சமயத்தில், ‘சுதந்திர நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகவும் அப்துற் றஹீம் இருந்தார். தொடர்ந்து, ‘யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்’ பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர், அடுத்து ‘யுனிவர்ஸல் பிரின்டிங் ஹவுஸ்’ அச்சகத்தையும் நிறுவினார்.

றஹீமின் ‘வாழ்க்கையில் வெற்றி’ நூல்தான் ‘யுனிவர்ஸல் பதிப்பக’த்தின் முதல் நூல். றஹீம் எழுதிய முதல் வாழ்வியல் நூலும் அதுதான். அந்தச் சமயத்தில் றஹீமுக்கு 26 வயது. இந்த நூலின் பெரும் சிறப்பு என்னவென்றால், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து விற்பனையில் உள்ள நூல் இது. இதுவரை இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளது. இதன் பின், எழுத்தே றஹீமின் முழுநேரப் பணியானது. வாழ்க்கை முறை சார்ந்த இலக்கியம், சிறுவர் இலக்கியம், தமிழாக்க நூல்கள், சமய இலக்கியம் எனப் பன்முக எழுத்தாளராக மிளிர்ந்தார் றஹீம்.

ஆங்கிலத்தில் நூல்கள்

1954-ல் மிக முக்கியப் பணி ஒன்றை மேற்கொண்டார். முகம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘நபிகள் நாயகம்’ என்கிற தலைப்பில் எழுதி நூலாக வெளியிட்டார். பின், ‘நபிமார்கள் வரலாறு’ என்கிற நூலை இரு பாகங்களாக எழுதி வெளியிட்டார். ஒருகட்டத்தில் ‘வலிமார்கள் வரலாறு’ என்கிற நூலை ஐந்து பாகங்களாக வெளியிட்டவர், அரபி மொழியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து ‘அல்ஹதீஸ்’ நூலை வெளியிட்டார். அடுத்து, ‘முஹம்மது தி ஃப்ராஃபட்’ (MOHAMMED THE PROPHET) என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதினார் றஹீம்.

தன்னம்பிக்கை நூல்கள், தன்னம்பிக்கை மொழிபெயர்ப்பு நூல்கள், வரலாற்று நூல்கள், காவியம், நாவல், மொழிபெயர்ப்பு நாவல், ஆங்கில நூல் என மொத்தமாக 69 படைப்புகளைத் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறார் றஹீம்.

இந்த எழுத்துப் பணியின் உச்சமாக ‘நபிகள் நாயக காவியம்’ நூலை எழுதி முடித்தார். அதன் சுருக்கத்தை 1993 ஜூன் 1-ல் வெளியிட்டார். அவர் எழுதிய கடைசி நூல் அது. அந்தக் காவியத்தை எழுதி முடித்தவர், தன் வாழ்வின் நிறைவை உணர்ந்தவராக விரைவிலேயே இறந்துபோனார். இறக்கும் முன்பு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த றஹீம், “என்னுடைய நூல்கள் சாகா வரம் பெற்றவை. மக்கள் உயர்வுக்காக எழுதப்பட்டவை. இந்த நூல்கள் அனைத்தும் தொடர்ந்து வெளிவர வேண்டும்; மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும்” என்று அவருடைய மருமகன் எஸ்.எஸ். ஷாஜஹானிடம் சொன்னார். அப்துற் றஹீம் தொடங்கிய ‘யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்’ நிறுவனம் இன்றும் அந்த வார்த்தைகளைத் தாங்கியபடி செயல்படுகிறது. தொடர்ந்து றஹீமின் நூல்கள், அந்நிறுவனத்தின் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

மகளே வாரிசு

அப்துற் றஹீமுக்கு ஆண் – பெண் என்று மூன்று பிள்ளைகள் இருந்தாலும், தன்னுடைய எழுத்துலக வாரிசாக இரண்டாவது மகள் பாத்திமாவையே அவர் அடையாளம் கண்டார். இதற்காகவே, அவரை பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கவைத்தார். அவருடைய எண்ணம்போலவே, பாத்திமாவும் பல நூல்களை எழுதுபவராகவும், தன்னுடைய கணவருடன் இணைந்து தந்தை உருவாக்கிய பதிப்பகத்தை வளர்த்தெடுப்பவராகவும் உருவெடுத்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில், றஹீமின் சிறப்புகளைப் போற்றும் வகையில், இந்த ஆண்டில் நூற்றாண்டு விழா எடுக்கின்றனர். பிறந்த ஊரான தொண்டியில் தொடங்கி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் ஆய்வரங்கம் நடத்தப்பட்டு, சென்னையில் நிறைவு விழா நடத்தவுள்ளனர். இந்தத் தருணத்தில், தமிழ் அறிவுலகமும் அப்துற் றஹீம் நினைவைப் போற்றுவது அவசியம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in