

சித்திரை மாதம் வசந்த காலம் எனப்படும். வசந்த காலத்தின் அதி தேவதை காதல் கடவுள் மன்மதன். இவன் மலர் அம்பு எய்தி காதல் விளைவிப்பவன் என்பது அனைவரும் அறிந்ததே. மன்மதன் எனத் தொடங்கி காமதேவன் வரையிலான மொத்தம் இருபது பெயர்களால் அழைக்கப்படும் காதல் கடவுள் இவன்.
தன்னால் எரிக்கப்பட்டு உயிரிழந்த மன்மதனை, அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்ப்பித்து ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என அருளினார் சிவபெருமான். அதனால்தான் கோவில்களில் ரதி மன்மதன் சிற்பங்களை எதிர் ஏதிராகத் தூண்களில் வடிவமைத்தனர். இந்தக் காதல் கடவுளைப் பாருங்களேன், தனது வாகனமாகிய கிளியின் மீது அமர்ந்து யார் மீதோ மலர் அம்பு எய்ய ஆயத்தமானவன்போல் அமைக்கப்பட்டுள்ளான்.
அழகான மணி மகுடம், காதோரங்களில் வித்தியாசமான அணிமணிகள், தோள்களிலும், மார்பிலும் அழகிய முத்து மணியாரங்கள் அழகுபடுத்துகின்றன. கையில் உள்ள கரும்பு வில்லில் நாணாகத் தாமரை மொட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு கிளியின் வாயில் கடிவாளம் போட்டு, சேணம் அமைத்து அதன் மீது அமர்ந்து, கால்களில் குதிரை மேல் இருப்பதுபோல் அங்கப்படி அமைத்து இருப்பது சிறப்பு. இந்தச் சிலையில் சிறப்பான வேலைப்பாடுகள் இல்லை எனினும், கிளியின் அங்கலாவண்யங்கள் இயற்கையாக உள்ளன.
இந்தச் சிற்பம் சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் வெளியே தெற்கு வாசல் அருகே உள்ளது. பொ.ஆ. பத்தாம் நூற்றாண்டில் தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டில் கெட்டி முதலி அரசப் பரம்பரையினரால் நிர்மாணிக்கப்பட்டது இந்தத் திருக்கோவில். மேலும், இக்கோவிலில் வித்தியாசமான சிற்பங்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்று சிங்கச் சிற்பம். அந்தச் சிங்கத்தின் வாயில் இருக்கும் கல் உருண்டையை உருட்டலாமே தவிர வெளியே எடுக்க முடியாதபடி உருவாக்கியிருக்கும் அன்றைய சிற்பிகளின் கலைத்திறனை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!