

உயிர்ப்புப் பெருவிழா. இயேசுவின் புத்துயிர்ப்புப் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடப்படு கிறது. புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்படும் இயேசுநாதர், மூன்றே நாள்களில் உயிர்த் தெழுவதாகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த உயிர்ப்புப் பெருவிழாவை ஒட்டிய வாரம் முழுமையுமே ஜபம், தவம் என கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர்; மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்து பிறரன்பு, கருணை, கொடை என மறுமைக்கு புண்ணியம் தேடிக்கொள்கின்றனர். ‘பெரிய வாரம்’, ‘கனத்த நாள்கள்’ என வழங்கப்படும் இந்த வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செய்யப்படும் தவ முயற்சிகள் இங்கே பல்லாண்டு காலம் நிலைநின்றிருப்பவை.
கைப்பிடி அரிசி காணிக்கை
‘தவசு காலம்’ எனப்படும் ‘லென்ட் நாள்களில்’, அரிசி உலையில் இடுமுன் ஒரு கைப்பிடி எடுத்து தனியே பானையில் போட்டுவைக்கும் வழக்கம் இன்றளவும் கிறிஸ்தவ வீடுகளில் உண்டு. ரோமன் கத்தோலிக்க வீடுகளில் இந்தப் பிடி அரிசி சேமிக்கப்பட்டு, பெரிய வியாழன் அன்று நடைபெறும் திருப்பலியில் ‘பிடி அரிசிக் காணிக்கையாகக்’ கொணர்ந்து குருவிடம் தரப்படுகிறது. இந்தப் பிடி அரிசி அந்தந்தப் பங்கிலுள்ள கருணை இல்லங்கள், ஏழைக் குடும்பங்கள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பங்கு குருவால் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. தவசு காலத் தொடக்கத்தில் வீடுகளுக்குத் தரப்படும் உண்டியல்களில் மக்கள் ‘ஒறுத்து’ சேமிக்கும் பணத்தைப் போடுகின்றனர்; பெரிய வெள்ளியன்று ஆராதனையில் உண்டியல்கள் குருவிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
பாதம் கழுவும் சடங்கு
சீர்திருத்தக் கிறிஸ்தவர்களுக்கோ தனி பைகள், உண்டியல்கள் திருநீற்றுப் புதனுக்கு முந்தைய ஞாயிறு அன்றே வீடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. பிடி அரிசி காணிக்கை சேமிக்கப்பட்டு, பெரிய வெள்ளி அன்று ‘கிறிஸ்துவின் பாடுகள்’ அனுசரிக்கப்படும் போது ‘சுய வெறுப்பு காணிக்கை’ பெறப்படுகிறது. அப்போது பைகளில் அரிசியும், காணிக்கை உண்டியல்களும், பணமும் மக்கள் தருகின்றனர். அங்கும் ஏழைகளுக்குப் பகிரவும், இல்லாதவர்களுக்கு உதவவும் இந்தப் பணமும் அரிசியும் பயன்படுத்தப்படுகின்றன.
பெரிய வியாழன் அன்று கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் ‘பாதம் கழுவும் சடங்கு’ உலகம் தழுவிய சடங்காகும். இயேசு பன்னிரு சீடர்களை அமர்த்தி, அவர்களின் பாதங்களைக் கழுவித் துடைத்து, நறுமண தைலம் பூசியதாக விவிலியம் குறிப்பிடுகிறது. கடவுளின் மகனானாலும் தாழ்மையுடன் அவர் இருப்பதை இந்த சடங்கு குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வயதுமுதிர்ந்த பெரியவர்களை இந்த சடங்குக்கு அழைத்து ஆலய பீடத்தில் அமரவைத்து, பங்கு குரு பாதம் கழுவித்துடைக்கிறார். பல இடங்களில் அவர்களுக்கு துண்டும், பன்னும் அளிக்கப்படுகிறது. மேற்கு தமிழகத்தின் வாலிப்பாளையம் பங்கில் அன்று இரவு ஊர் மக்கள் ஒன்றுகூடி சைவ உணவு சமைத்து, பன்னிருவர் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கி உண்கின்றனர்.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பங்கில் இந்த சடங்கு ‘கால் கழுவும் சடங்கு’ என வீடுகளில் அனுசரிக்கப்படுகிறது. தவசு கால வியாழக்கிழமைகளில் வீடுகளுக்கு பள்ளிச் சிறாரை அழைத்து, கால் கழுவித் துடைத்து, முத்தமிட்டு உணவு தருகின்றனர். “முத்தம் செய்யப்போறோம் வாங்க” என்றே சடங்குக்கு அண்டைவீட்டாரை அழைக்கும் வழக்கம் அங்கு உண்டு. இயேசுவை யூதாஸ் முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததையும், அவரையும் இயேசு அறிந்துகொண்டு, கால் கழுவித் துடைத்து முத்தமிட்டதையும் இந்தச் சடங்கு நினைவூட்டலாம். அறிந்தோர் அறியாதோர் மேலான அன்பை ‘முத்தம் செய்யப்போறோம் வாங்க’ என அழைத்துச் செய்வது கிறிஸ்தவத்தின் பண்பு. தவசு கால ஒறுத்தலை பெரும் சிரத்தையுடன் செய்வோருண்டு. திருநீற்றுப் புதன் தொடங்கி உயிர்ப்புப் பெருவிழாவரை ‘ஒருசந்தி’ இருப்போருண்டு. உணவை நாளுக்கு ஒரு முறை ‘காண்பது’ – சந்திப்பதே இந்த ஒருசந்தி. தவசு கால வெள்ளிக்கிழமைகளிலேனும் கட்டாய ஒருசந்தி இருப்போருண்டு. பாஸ்கு விழாவை (Passover) முன்னிட்டு மத்திய தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் 40 நாள்களும் ஒருசந்தி அனுசரிக்கிறார்கள்.
பெரிய வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆராதனையின்போது தேவாலயங் களில் ஒருசந்தி இருந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள், கஞ்சி என வசதிக்குத் தகுந்தாற்போல தயாரித்து வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் சீர்திருத்த தேவாலயத்தில் கஞ்சியும், துவையலும் மக்களுக்கு அளிக்கின்றனர். அடையாறு சீர்திருத்த தேவாலயத்திலோ ‘ஹாட் கிராஸ் பன்’, குளிர் பானம் வழங்கப்படுகிறது. பெரிய வெள்ளிக்கிழமையன்று தரப்படும் ‘பன்’ இங்கு மட்டும் விநியோகிக்கப்படுவதல்ல. உக்ரைன் உள்ளிட்ட கீழைக் கிறிஸ்தவத்தை அனுசரிக்கும் நாடுகளில் ‘பாஸ்கா’ என்ற பெயர் கொண்ட பன் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. பாஸ்கா என்ற பெயர் கிறிஸ்துவுக்கும் முந்தையது. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை மோயீசன் காப்பாற்றி அழைத்துச் சென்றதை இந்த ‘பாஸ்கு’ (Pesach) குறிக்கிறது. யூத இனச்சடங்குகளில் இன்றும் புளியாத அப்பம் முக்கிய இடம் வகிக்கிறது. பாஸ்கு விழாவை ஈஸ்டருடன் சேர்த்தே ஒரு காலத்தில் இங்கு கொண்டாடியிருக்கின்றனர்.
பாஸ்கு நாடகங்கள்
யூதர் கொண்டாடும் சடங்கில் பெருவிருந்து உண்டென்றால், தமிழகக் கிறிஸ்தவர்களிடம் ‘பாஸ்கு நாடகங்கள்’ உண்டு. பாஸ்கு நாடகங்கள் (Passion Plays) இடைக்காலத்தில் ஐரோப்பாவில் தோன்றியவை. அங்கிருந்து போர்த்துகீசிய, பிரெஞ்சு, இத்தாலிய குருக்கள் மூலம் தமிழகம் வந்தன. உயிர்ப்புப் பெருவிழாவின் அங்கமாக ஒரு காலத்தில் இரவுகளில் இவை நடத்தப்பட்டன. ஐரோப்பா போலவே தொடக்க காலத்தில் இங்கு நடந்த பாஸ்கு நாடகங்களிலும் பாடல்களே இடம்பெற்றன. கிறிஸ்துவின் பாடுகளை மூன்று முதல் ஐந்து இரவுகளில் முழு இரவு நாடகங்களாக இவை அரங்கேற்றம் கண்டன.
பெரும்பாலும் இந்நாடகங்களின் பாடல்கள் பண்டைய தமிழ் மரபில் அமைந்தன. புதுக்கோட்டையை அடுத்த ஆவூரின் புகழ்பெற்ற பாஸ்கா நாடகத்தில் முதல் நாள் இரவு பாடப்படும் மரிய மதலேனாள் பாடலான ‘சுவாமி நீர் எங்கே போறீர்’ அவ்வூரின் மிகப்பழமையான பாடலாகிறது. மனிதர்களைக் கொண்டு பாஸ்கு நாடகங்கள் நடத்தப்படுவதற்கு முன்பாக 1688-1700 காலகட்டத்தில் பொம்மைகளைக் கொண்டு ‘பொம்மை பாஸ்கா’ இங்கே நடத்தப்பட்டது. ஐரோப்பாவில் ‘மாரியனட் டால்ஸ்’ (மரியாயின் பொம்மைகள்) கொண்டு நடத்தப்பட்ட நாடகம், ஆவூரிலும் அதே வடிவில் நடத்தப்பட்டதில் ஐரோப்பிய மிஷனரிகளின் பங்களிப்பை உணரலாம்.
தவம் என்ற சொல்லுக்கு பொருள் கிறிஸ்தவத்தில் ஒருவாறு சொல்லப்பட்டாலும், மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு, தங்கள் புரிதலுக்கு ஏற்றாற்போல் விளங்கிக் கொள்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் மகிமை மாதாவுக்கு செய்யும் ஒறுத்தல் முயற்சியில் சொல்லப்படும் விதிமுறைகள் இவை – ‘கிறிஸ்தவர் அல்லாதாரும் விரதமிருக்கலாம். இதை அனுசரிக்கிறவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முறை மற்றவர்க்குத் தொண்டு செய்யவேண்டும். இது பண உதவியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உடல் உழைப்பு, அறிவுரை, சுமை தூக்கி உதவுதல், கடிதம் எழுதிக்கொடுத்தல், ஆறுதல் சொல்லல், தாகத்தில் இருப்பவர்களுக்கு நீர், மாணவர்களுக்கு படிக்க உதவி என பட்டியல் நீள்கிறது.
“அவரவர் மத சம்பந்தமான வேதப் புத்தகங்களை வாசித்தல், யோகாப்பியாசம் செய்தல் நலம். வேதாகமம், திருக்குர்ஆன், பகவத் கீதை, திருக்குறள், புனிதர் வரலாறு வாசிக்கலாம்" எனச் சொல்கிறது முகையூரின் பக்தி முயற்சி நூல். கிறிஸ்தவத் தவசு காலத்தின் அடிநாதம் தொண்டு, அதை எப்படிச் செய்தாலும் நலமே!
கட்டுரையாளர், ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: niveditalouis@gmail.com