

வீதியெங்கும் பொன்னை உருக்கி வார்த்ததுபோல் வெயில் துலங்கும் சித்திரை மாதம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. ஆக்கும் கடவுளான பிரம்மன் இந்த உலகைச் சித்திரை மாதத்தில் படைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பல்வேறு கடவுள் அவதாரங்களும் சித்திரை மாதத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அக்னி நட்சத்திரம் சுட்டெரித்தாலும் காணும் திசையெங்கும் பல வண்ணப் பூக்கள் சித்திரை மாதத்தில்தான் மலர்ந்து சிரிக்கின்றன. சித்திரையோடு இளவேனில் காலம் தொடங்கும். சித்திரை மாதத்துக்கென ஏராளமான சிறப்புகள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றை ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் இங்கே காண்போம்.
மீனாட்சி கல்யாண வைபோகமே!
சித்திரை பிறந்துவிட்டாலே மாமதுரையில் கொண்டாட்டம் களைகட்டிவிடும். தமிழ் மாதங்களின் பெயர்களையே வீதிகளின் பெயராகக் கொண்டிருக்கும் மதுரை வீதிகளில் சித்திரைத் திருவிழா அமர்க்களப்படும். சித்திரை மாத வளர்பிறையில் தொடங்கும் சித்திரைத் திருவிழா பௌர்ணமியோடு நிறைவடையும். மனிதர்களின் திருமணத்தையே ஊர்கூடி கொண்டாடும்போது, தங்கள் மாநகரை ஆளும் மீனாட்சியின் கல்யாணத்தை மதுரைவாசிகள் சும்மா விட்டுவிடுவார்களா? சித்திரைத் திரு விழாவாகக் கொண்டாடித் தீர்ப்பார்கள். மீனைப் போல உறக்கமின்றி ஊரை யாளும் மீனாட்சிக்கும் அழகே வடிவமான சுந்தரேஸ்வரருக்கும் சித்திரைத் திருவிழா வின் ஒன்பதாம் நாளன்று திருக்கல் யாணம் நடைபெறும். பட்டாடை அணிந்து மணமக்கள் மேடையை அலங்கரிப்பார்கள். திருமணம் முடிந்ததும் ஆயிரக் கணக்கான சுமங்கலிப் பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொள்வார்கள்.
காதலர் போற்றும் காமன் பண்டிகை
சப்தரிஷிகள் ஓராண்டை ஆறு ருதுக்கள் கொண்ட பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்தனர். ஆறு ருதுக்களில் வசந்த ருது முக்கியமானது. பனியால் வாடிக் கிடந்த தாவரங்கள் அனைத்தும் வசந்தம் வந்ததும் உயிர்பெற்று பூத்துக்குலுங்கும். காதலர்கள் கூடிக்களிக்கும் மாதமாகவும் வசந்த ருது கருதப்படுகிறது. உலகக் காதலின் அடையாளமாக ரதி - மன்மதன் திகழ்கிறார்கள். மன்மதன், இன்பத்தின் வடிவம் என்றால் ரதியோ பேரெழில் தேவதை. மன்மதனின் தென்றல் தேரைக் கிளிகள் இழுத்துச் செல்லும். புராணங்களில் கரும்பு இன்பத்தின் குறியீடு.
அத்தகைய கரும்பை வில்லாகக் கொண்டவன் மன்மதன். முல்லை, மா, நீலம், அசோகம், தாமரை ஆகிய ஐந்து மலர்களால் ஆனது அவனது அம்பு. அந்தக் காலத்தில் கோயில் வசந்த மண்டபங்களில் மன்மதனும், ரதியும் தூண் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருப்பர். மன்மதனின் தனிக் கோயில் காமவேள் கோட்டம் என்றழைக்கப்படும். மன்மதனின் ஆட்சி வசந்த காலத்தில் உச்சத்தை அடையும் என்பதாலேயே மன்மதன் வசந்தன் என்றும் அழைக்கப்படுகிறான். ரதி - மன்மதன் இணையைப் போற்றும்வகையில் தமிழகத்தின் சில பகுதிகளில் காமன் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
சக்ரவர்த்தித் திருமகன்
உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் இம்மண்ணையும் மக்களையும் காக்க தான் அவதரிப்பேன் என்று கீதா உபதேசத்தில் மகாவிஷ்ணு கூறியிருக்கிறார். மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக ராம அவதாரம் கொண்டாடப்படுகிறது. ரகு குலத்தில் தசரதனின் மகனாகப் பிறந்த ராமன், சக்ரவர்த்தித் திருமகன் என அழைக்கப்படுகிறார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று வாழ்ந்ததாலேயே ராமனை ஏக பத்தினி விரதன் என்பர். வசந்த காலத்தில்தான் ராமன் அவதரித்த நிகழ்வு நடந்தது.
சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் ராமன் அவதரித்த நாளை ராம நவமியாக இந்துக்கள் கொண்டாடுவர். கோடைகாலத்தில் பிறந்த தன் மகனைக் காண வந்தவர்களுக்கு நீர்மோரும் பானகமும் தந்து தசரதர் உபசரித்ததாகச் சொல்லப்படுகிறது. சிலர் ராம நவமியன்று விசிறி தானமும் செய்வர். ராம நாமத்தைச் சொல்வது இதயத்தைச் சுத்தப்படுத்தி, இன்பத் தீயை அழித்து, ஞானத்தை நோக்கிச் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க ‘இந்து தமிழ்திசை சித்திரை மலரை’ வாங்கிப் படியுங்கள்.