

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில், ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் ஒரு வேடன் சிற்பம் இது. இந்தச் சிற்பத்தின் முகத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அழகிய நீண்ட புருவங்கள், எடுப்பான நாசி, கொஞ்மாகத் திறந்து புன்னகைக்கும் உதடுகள், பெரிய கண்கள், முறுக்கி விடப்பட்ட மீசை என எல்லாமே கச்சிதம். உதட்டின் மேல் மெல்லிதாகவும் முறுக்கி விட்ட பகுதி உயர்ந்தும், தடித்தும் காணப்படும் மீசை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.
சவரம் செய்த பின் காதோரம் உள்ள கிருதா மெலிதாகக் கோடுபோட்டது போல் தெரிவது கச்சிதமாக உள்ளது. தலையில் வித்தியாசமான அணிகலன், அதில் பறவையின் மெல்லிய இறகுகள், காதில் அழகிய குண்டலங்களும், காதின் மேலே மலரும் சூடியுள்ளார். மார்பிலும் கைகளிலும் கை விரல்களிலும் வித்தியாசமான அணிமணிகளை அணிந்துள்ளார். கையில் உள்ள ஈட்டியின் மேல் பகுதி புதுமையாக இருக்கிறது. வேடனின் உடம்பில் உள்ள விலா எலும்புகள் தெரிவதுபோல் அமைத்த சிற்பியின் கலைத்திறன் பாராட்டுதலுக்கு உரியது. இந்தச் சிற்பம் பொ. ஆ. 1569இல் அரியநாத முதலியார் காலத்தில் உருவாக்கப்பட்டது.