

யாரையும் பாவி என்று கூறக் கூடாது. பாவிகளையும் கடவுள் என்றே கூறுங்கள். ஒரு சாத்தானை நீங்கள் பார்க்க நேர்ந்தால்கூட, நாம் கடவுளைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாத்தானை அல்ல என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இது குறித்து அமெரிக்காவிலிருந்து சென்னையில் உள்ள தனது சீடர்களுக்கு. 1884-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
“தென்னிந்தியாவில் மிகச் சிறந்த ஞானிகளான சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோர் அவதரித்தனர். உலகில் உள்ள ஒவ்வொரு வைஷ்ணவனும் மகா விஷ்ணுவுக்குக் கடமைப்பட்டவன். ராமானுஜர் அடித்தட்டு மக்களையும் அரவணைத்து அவர்களை ஆழ்வார்களாக்கிய பெரு மகான். இந்தியா முழுக்கத் தனது போதனைகளைப் பரப்பியுள்ள கிருஷ்ண சைதன்ய பெருமானின் பக்தர்கள்கூட, ஸ்ரீ மத்வரைக் குருவாக ஏற்கும் அளவுக்கு மத்வர் சிறந்த மகான். இப்பேர்பட்ட மகான்களை இந்தியாவிற்குத் தந்ததற்காக வட இந்திய மக்கள் தென்னிந்தியாவிற்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள்.
இன்றுகூட வாராணசியிலும் (காசி) தென்னிந்தியாவே முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. தென்னிந்திய மக்களின் தொண்டு இந்தியாவில் தொலை தூரத்தில் இமயமலையில் உள்ள கோயில்களில்கூட எதிரொலிக்கிறது. இதனால், தென்னிந்திய மக்களின் ரத்தநாளங்களில் ஆன்மிக எண்ணங்கள் ஆக்கிரமித்துள்ளதில் வியப்பேதும் இல்லை.
பகவான் ராமகிருஷ்ணரின் செய்திகளை முதலில் ஏற்றவர்கள் ஆச்சார்யர்களே. தென்னிந்தியா வேத சாத்திரங்களைக் கற்பதற்குத் தகுந்த இடமாகும்.
கடவுளை அறிய நீ முதலில் கடவுளாக மாறு’ என்று கூறுகிறது அத்வைதம். எனவே, நாம் முதலில் கடவுளாக மாறுவோம். அதன்பின் மற்றவர்களையும் கடவுளாக மாற்றுவோம். இதுவே நமது நோக்கமாக இருக்கட்டும்.
மனிதனை ஒரு பாவி என்று கூறாதீர்கள். அவனிடம் நீயே கடவுள் என்று கூறுங்கள். ஒரு சாத்தானை நீங்கள் பார்க்க நேர்ந்தால்கூட, நாம் கடவுளைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டுமே தவிர சாத்தானை அல்ல.
ஓர் அறை இருட்டாக இருந்தால், அறை இருட்டாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருந்தால் இருட்டு அகலாது. எனவே, இருட்டைப் போக்க ஒரு விளக்கை ஏற்றுங்கள். எல்லா எதிர்மறை எண்ணங்களும், அழிவுகளும், விமர்சனங்களும் நம்மைக் கடந்து போய்விடும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்வோம். உண்மை, உடன்பாடு, நீதி நெறிகள் மட்டுமே உலகில் நிலைத்து நிற்கும்.
அறியாமை இருளை உண்மை விளக்கால் ஏற்றுங்கள். வேதங்களைச் சிங்கம்போல் கர்ஜிக்க விடுங்கள், ஊளையிடும் நரிகள் அதன் பொந்துக்குள் ஓடி ஒளிந்து விடும். ஆன்ம சக்தியினை வெளிக்கொணர்ந்து இந்தியா முழுக்கப் பரவவிடுங்கள். இந்தியா வீறிட்டு எழுந்துவிடும். ஆனால், உடற் திறனால் அல்ல; ஆத்ம சக்தியைக் கொண்டே இந்தியா பிரம்மாண்டமாக எழும்.
அன்பு, அமைதி ஆகிய கொடிகளை உயர்த்தி இந்தியா உயருமே தவிர, அழிக்கும் சக்திகளை நம்பி அல்ல. நீ ஒருபோதும் உன்னை வலிமையற்றவன் என்று எண்ணாதே. உன்னுள் இருக்கும் புனித சக்தியை நீயே அழைத்துக்கொள். அச்சக்தி உனது பசி, தாகம், வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்.
ஆடம்பரமான வீடுகளில் அமர்ந்துகொண்டு சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, பொழுதுபோக்கிற்காக மதப் பணிகளில் ஈடுபடுவது அயல்நாட்டினருக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், அது இந்தியாவிற்குப் பொருத்தமானதல்ல. நாம் அனுபவிக்கும் வசதிகள், மகிழ்ச்சி, பெயர், புகழ், பதவி ஆகியவற்றை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தியாகம் செய்யாமல் எந்த ஒரு சிறப்பான பணியையும் செய்துவிட முடியாது. நீ யாருடைய தலைமையின்கீழ் வேலை செய்கிறாய் என்று நினைக்க வேண்டியதில்லை. உனது நிறம் என்ன? சிவப்பா, கறுப்பா, பச்சையா, நீலமா என்று நிறத்தைப் பற்றியெல்லாம் நினைக்க வேண்டாம். நம்முடையது வேலை மட்டுமே. அது மனித சமுதாயத்தின் நன்மைக்காக இருக்கட்டும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: nilaranicbe@gmail.com