Published : 17 Mar 2022 10:48 AM
Last Updated : 17 Mar 2022 10:48 AM

சமயத்தில் சமூகநீதி கண்ட மகான் சித்பவானந்தர்

சமயமும் சமூக நீதியும் தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்கள். சமயத்தையும், சமூக நீதி யையும் ஒருசேரப் பரவச்செய்த சித்தர்கள் பலர் தோன்றிய பூமி இது. நந்தனாரும், திருப் பாணாழ்வாரும், ராமானுஜரும், ராமலிங்கரும் உலவிய தமிழ் மண்ணில் 125 ஆண்டுகளுக்கு முன் சுவாமி சித்பவானந்தர் தோன்றினார்.

‘சாதியைப் பார்க்காதே, சாதியைக் கேட்காதே, சாதியை நினைக்காதே’ என்பதே சித்பவானந்தர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். தாழ்த்தப்பட்ட தனது மாணவரைச் சாதி நோய் பிடித்தவர்கள் தாக்கியதைக் கண்டு மனம் வருந்திய சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனத்தை 1942-ம் ஆண்டில் தொடங்கினார். இன்றைக்கு 70 ஆண்டுகளைக் கடந்திருக்கும் தபோவனம், தமிழகம் முழுவதும் ஏழு கல்லூரிகள், நாற்பது பள்ளிகள், நூற்றுக்கணக்கான மையங்கள் எனப் பரந்துவிரிந்து ஆன்மிகப் பணியாற்றுகின்றது.

1898 மார்ச் 15 அன்று கோவை மாவட்டம் செங்குட்டபாளையம் என்னும் சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் சின்னு. இவரே பின்னர் சுவாமி சித்பவானந்தர் என்னும் தவயோகியாக உயர்ந்தார். தவயோகியானதற்குப் பின்னும் நிலத்தை உழுபவராகவும், சுத்திகரிப்புத் தொழிலாளியாகவும், கால்நடைகளைப் பராமரிப்பவராகவும், தோட்டக்காரராகவும், சலவை செய்பவராகவும், கட்டிடத் தொழிலாளியாகவும், சுமை தூக்குபவராகவும் உடல் உழைப்பை தெய்வத் தொண்டாகத் தொடர்ந்து செய்தார் சித்பவானந்தர்.

மாநிலக் கல்லூரியில் மாணவராக இருந்த சின்னுவிற்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளுடன் மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சின்னு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரின் ஆசியுடன் ராமகிருஷ்ண மடத்தில் 1923-ம் ஆண்டு இணைந்தார். அவரை லண்டன் நகருக்கு அனுப்பி ஐ.சி.எஸ். படிக்க வைக்க முயன்ற அவரின் குடும்பத்தினர் ஏமாந்து போயினர்.

தனது குருநாதர் சுவாமி சிவானந்தரின் கட்டளைப்படி ஊட்டியில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் செய்தியைப் பரப்பிடும் பொறுப்பினை ஏற்றார் சித்பவானந்தர். ராமகிருஷ்ண மடத்தின் கிளையை ஊட்டியில் தொடங்கவேண்டும் என்னும் முனைப்பில் இருந்தார் சித்பாவனந்தர். இந்தப் பணிக்கான நிலத்திற்காக அலைந்தபோது, திருவேங்கடம் என்னும் சலவைப்பணி செய்துவந்த பெரியவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தை ராமகிருஷ்ண மடம் தொடங்குவதற்குக் கொடையாக அளித்தார்.

ஊட்டியில் எத்தனையோ செல்வந்தர்கள் ஏராளமான நிலம் வைத்திருந்தபோதும் மடத்திற்கு நிலம் கொடுத்திட எவரும் முன்வரவில்லை. திருவேங்கடம் என்னும் ஓர் ஏழை சலவைத் தொழிலாளி தனது ஒரே சொத்தையும் கொடையாகக் கொடுத்தது சித்பவானந்தரின் மனத்தில் நீங்காத பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது சமயப்பணி இருந்திட வேண்டும் எனத் தனக்கு ராமகிருஷ்ணர் கட்டளையிட்டதாகவே சித்பவானந்தர் உணர்ந்தார்.

‘எல்லோரும் ஆனந்தமாயிருங்கள்’

ஊட்டியில் அவரது ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தியும் ஸ்ரீநாராயண குருவும் வருகைதந்து அவரைச் சமூகப்பணியில் வழிநடத்தினர். அவர்களின் வழிகாட்டுதல் சித்பவானந்தரின் ஆன்மிகப் பணியை, சமூகநீதித் தொண்டுடன் இணைத்து மேம்படுத்தியது. காந்தியடிகளின் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டால் தனது இறுதி நாட்கள் வரை கதர் உடையை மட்டுமே சித்பவானந்தர் உடுத்திவந்தார். தேசபக்தி அவரின் பணிகளில் இணைந்திருந்தது.

பின்னர் 1942-ம் ஆண்டில் திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனம் என்னும் சமூக நலனுக்கான, சமயக் கல்வி நிறுவனத்தை சித்பவானந்தர் தொடங்கினார். ‘எல்லோரும் ஆனந்தமாயிருங்கள்’ என்பதே சித்பவானந்தரின் செய்தி.

அவரின் தபோவனத்தில் அனைத்துச் சமூகத்தினரும் துறவிகளாக சாதி வேறுபாடில்லாது ஆன்மிகத் தொண்டு செய்தார்கள். சித்பவானந்தரும் அவருடைய துறவிகளும் சமயப் பணியைப் போலவே சமத்துவப் பணியிலும் ஈடுபட்டனர்.

நான்கு தலையாய பணிகள்

தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளில் குருகுலக்கல்வி, அந்தர்யோகம், சமயத்துள் சமூகநீதி, தமிழ்வழிச் சமயம் என்னும் நான்கும் முதன்மையானவை. ஆங்கில முறை கல்விக்கு மாற்றாக குருகுலக் கல்வியை அவர் முன்வைத்தார். அறிவும், ஆன்மிகமும், தொண்டும் கலந்ததாக கல்வி இருந்திடும் வகையில் குருகுலக் கல்வியை சித்பவானந்தர் வடிவமைத்தார். உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் தொண்டின் வாயிலாகவே ஒழுங்கும் உயர்வும் பெறும் என்பது அவரின் கோட்பாடு. கல்வி, வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான சாதனம். பண்டைய குருகுல முறையே அதற்குப் பொருத்தமானது என அவர் நம்பினார். திருப்பராய்த்துறை, திருவேடகம், சேலம், திருநெல்வேலி, கரூர் எனப் பல இடங்களில் அத்தகைய நவீன குருகுலங்களை நிறுவினார்.

அந்தர்யோகம்

உழவர்கள், அலுவலர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், பெண்கள் எனப் பல தரப்பட்ட வர்களுக்கும் அந்தர்யோக முகாம்கள் மூலம் கர்மயோகம் என்னும் வாழ்வியல் யோகத்தைக் கற்றுத்தந்தார். ஆயிரக்கணக்கான முகாம்களின் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் அந்தர்யோக பயிற்சி பெற்று தங்கள் வாழ்வினையும், பணிகளையும் செம்மைப்படுத்திக் கொண்டனர். செய்யும் தொழிலை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக மாற்றிட வேண்டும் என்பதே சித்பவானந்தரின் செய்தி.

சமயத்துள் சமூகநீதி

வர்ணாசிரமக் கொள்கையில் நம்பிக்கை யில்லாத புதுமையான துறவி அவர். சமயத்துள் சமூகநீதி அவரின் கொள்கையாய் இருந்தது. ஆன்மிக வழிகாட்டிகள் பெரும்பாலோர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தபோது, உழைக்கும் வகுப்பைச் சார்ந்த சித்பவானந்தரின் சமயத் தொண்டு, எப்போதும் சமூகத்தின் அடித்தள மக்களைச் சார்ந்தே இருந்தது. அவரின் ஆசிரமங்களில் உழைக்கும் சமூகங்களைச் சார்ந்த துறவிகள் நிறைந்திருந்தனர். அவருடைய கல்வி நிறுவனங்கள் உயர்ந்த பண்புகளையும், நெறிகளையும் ஏழை எளிய, கிராமப்புற பிற்பட்டவர்களுக்கு அள்ளித்தந்து மேம்படுத்தின.

தமிழ்ப் பணி

தமிழ்மொழியில் கொட்டிக்கிடந்த ஆன்மிகச் செல்வத்தைத் தமிழ் மக்களுக்கு அவர் அள்ளி அள்ளி வழங்கினார். ‘தினசரி தியானம்’ என்கிற அவரின் ஆன்மிகக் கையேடு அவர் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் மிகச்சிறந்தது. ஆன்மிகத்தின் சாரத்தை அமிர்தமாக அந்நூலில் சித்பவானந்தர் வழங்கியுள்ளார். நவீன தமிழ் நூல்களில் மிக அதிகமாக நாற்பது பதிப்புக்களில் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது இந்நூல்.

பகவத் கீதைக்கு எளிய தமிழில் விளக்கம் எழுதி லட்சக்கணக்கான பிரதிகளைக் குறைந்த விலையில் விநியோகித்தார். அவரின் தபோவன அச்சகம் தமிழில் நூற்றுக்கணக்கான பக்தி நூல்களை வெளியிட்டுத் தமிழின் மூலம் உலகெல்லாம் ஆன்மிகத்தை பரவச் செய்தது.

பகவான் ராமகிருஷ்ணரின் பணியைத் தமிழ்நாட்டில் மேலும் சிறப்பாகச் செய்யும் தூய நோக்கத்துடன் பேலூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து விலகி ராமகிருஷ்ண தபோவனத்தைத் தனித்துவமாய் நிறுவினார் சித்பவானந்தர். தமிழ் மரபுக்கும் தமிழ்ச் சூழலுக்கும் ஏற்றவகையில் ராமகிருஷ்ணரின் ஆன்மிக மரபைத் தமிழகத்தில் பரவச் செய்தார்.

‘சமயங்களின் சங்கமமே ஆன்மிகம்' என்னும் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தே நவீன இந்தியாவின் அடித்தளம் ஆகும்.

சித்பவானந்தரின் நூற்று இருபத்து ஐந்தாம் ஆண்டினை கொண்டாடும் வேளையில் சமூக நல்லிணக்கம், சமூகநீதி ஆகிய கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியம் ஆகும்.

கட்டுரையாளர், பேராசிரியர், தொடர்புக்கு: ragugri@rediffmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x