சித்திரப் பேச்சு: வாகனம் மாறிய ரதி தேவி!

சித்திரப் பேச்சு: வாகனம் மாறிய ரதி தேவி!
Updated on
1 min read

இந்த ரதி தேவியைப் பாருங்கள். எவ்வளவு வேகமாகச் செல்கிறாள். அதுவும் தனது வாகனமான அன்னப் பறவையைத் தவிர்த்துவிட்டு, மன்மதனின் வாகனமான கிளியின் மீது அமர்ந்துகொண்டு புறப்படுவதற்குத் தயாராகிவிட்டாள். வலது கரத்தில் நாண் பூட்டிய கரும்பு வில்லும், இடது கரத்தில் மலர் அம்புமாக விரைந்து அவள் செல்வது ஏனோ? அவள் விரைந்து செல்கின்றாள் என்பதைக் காட்ட, ரதியின் ஆடை காற்றில் பறப்பதும், கிளியின் கால்களில் ஒன்று நன்கு அழுத்தியபடியும், இன்னொரு காலைச் சற்றுத் தூக்கியபடியும் காட்டி இருப்பது சிற்பியின் அபாரமான திறமையை வெளிப்படுத்துகிறது. ரதி தேவியின் கொண்டையும், காதில் குழையும், மார்பிலும் கைகளிலும் அணிந்துள்ள அணிகலன்களும் அற்புதம். கிளியின் வாயில் கடிவாளமும், ரதியின் கால்களில் அங்கவடியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அத்தனையும் ஓரடி அகலத்திலும், ஒன்றரை அடி உயரத்திலும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆற்றில் குளிக்கச் சென்ற மன்மதன் யார் மீதோ அம்பு விட வேண்டும் என்று நினைத்த உடன், ரதி சகல ஆயுதங்களுடன் கிளி மீது ஆரோகணித்துப் பறப்பதுபோல் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் கி.பி. 1550-ல் சின்ன பொம்மி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தின் தென்கோடியில் இருக்கும் தூண் ஒன்றில் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in