

கும்பகோணத்தில் இருந்து கிழக்கில் சுமார் நான்கு கி.மீ., தொலைவில் உள்ளது, பட்டுப் புடவைக்குப் பெயர்பெற்ற திருப்புவனம்.. இவ்வூரில் பொ.ஆ.1204-ல்
மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட கம்பகரேஸ்வரர் ஆலயத்தின் முன் மண்டபத்தின் வடக்குப்புறத்தின் அடித்தளத்தில் சுற்று வரிசையில் கோமுகம் அருகே இந்தச் சிற்பம் காணப்படுகிறது.
இளம் பெண் ஒருத்தி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது வலக்கையால் இடது தனத்தை எடுத்து ஒரு குட்டி யானைக்குப் பால் தரும் அற்புதமான சிற்பம் இது. யானைக் குட்டியின் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி. அதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சிற்பி. பின்னால் இன்னொரு குட்டி யானை தன் பங்கிற்குக் காத்திருப்பதும் அழகு. இளம்பெண்ணின் முகத்திலும் தாய்மையின் பூரிப்பு மிக அழகாக வெளிப்படுகிறது. அவளது கொண்டையின் அழகும், இரு காதுகளிலும் பெரிய அளவிலான குழையை அணிந்திருப்பது சிறப்பு. அவளது தோளில் உள்ள வங்கியும் வித்தியாசமாக இருக்கிறது. கழுத்திலும், கைகளிலும், இடையிலும் அபூர்வமான அணிகலன்களை அணிந்துள்ளார். வலது காலைத் தொங்கவிட்டும், இடது காலை மடித்து வைத்தபடியும் அமர்ந்திருக்கும் கோலமும் அருமை. இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்களின் மீது சுண்ணாம்பு அடித்து நம்மை ரசிக்க முடியாமல் செய்துள்ளதைக் கண்டு வேதனைதான் ஏற்படுகிறது. இச்சிற்பத்தை வடித்த சிற்பியின் திறமைக்கும், அக்காலப் பெண்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், தாய்மையுணர்வும் கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே இது விளங்குகிறது.