

குரு பூசை என்பது சமயம் சார்ந்து திருவடி தீட்சை எனவும் போற்றப்படுகின்றது. சைவத்தில் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி குருவாகவும், வைணவத்தில் மகாவிஷ்ணு ஹயக்ரீவர் குருவாகவும், பௌத்தத்தில் புத்தபிரான் குருவாகவும், கெளமாரத்தில் முருகப் பெருமான் குருவாகவும் (அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனாக), காணாபத்தியத்தில் விநாயகப் பெருமான் ஆதிகுருவாகவும் உள்ளதைப் புராணங்கள் சொல்கின்றன.
மாதா, பிதா, குரு, தெய்வம்... இந்த வரிசை ஏன்? முதன்முதலாக மாதாதான் நம்மை கருவறை இருளில் இருந்து வெளிக்கொண்டு வருகிறாள். இதையடுத்து அறியாமை எனும் இருளில் இருந்து நம்மை பிதாவும், கல்லாத இருளில் இருந்து நம்மை குருவும் வெளிக்கொண்டு வருகிறார்கள். இறைவன் ஒருவனே ஞான இருளில் இருந்து நம்மை மீட்க வல்லான் என்பதால்தான் இந்த வரிசை.
சமயம் சார்ந்த திருவடி தீட்சை என்பது என்ன? இறைவனே குருவாக வந்து சீடனை ஆசிர்வதிப்பதாகவும், அவ்விதம் வரும் அவரை குருமூர்த்தம் எனவும் அழைக்கிறார்கள்.
திருநல்லூர் இறைவன் அருள்மிகு பஞ்சவர்ணேசுவரர் - பருவத சுந்தரி சமேதராக வந்து தனக்கு அருளியதை ‘நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் ஆதாரப்படுத்தியுள்ளார்கள்.
திருவடியைப் போற்றுவதால் என்ன கிடைக்கும் என்பதற்கு சுந்தரரே சாட்சி. தான் உலா போகும் முகமாக திருவதிகை (பண்ருட்டி) செல்கிறார். தனது முன்னோரான திருநாவுக்கரசர் அங்கு வாழ்ந்தவர் என்பதால் அக்கோயிலுள் செல்வதை தவிர்த்து, சித்தமடம் என்ற இடத்தில் தங்குகிறார். திருநாவுக்கரசரின் பாதம் பட்ட பூமியில் தன் பாதம் பட்டால் மரியாதை குறைவு என பணிவுடன் இருந்திருக்கிறார். அதற்கான பரிசாக திருவதிகை இறைவனான வீரட்டேசுவரர், சுந்தரர் படுத்துறங்கும் சித்த மடத்துக்கே சென்று இருமுறை திருவடி தீட்சை வழங்கியதை கீழ்க்கண்ட தேவாரப் பாடல் உறுதிசெய்கிறது.
‘அம்மான் தன்அடி கொண்டு என்முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே’ என்று இறைவன் தானே வந்து அருளியதை அறியாது நான் அவரை இகழ்ந்து பேசி விட்டேனே என வருந்துகிறார் சுந்தரர்.
திருவாசகத்தைப் பாடப்பாட நமது அகம் வசமாகிவிடும். மாணிக்கவாசகர் அருளிய ‘திருவாசகம்’ பத்துப் பத்தாக பல முத்துக்களாய் முதிர்ந்தவை. அந்தப் பத்துக்களில் ‘சென்னிப்பத்து’ம் ஒன்று. திருப்பெருந்துறை இறைவன் ஆத்மநாத சுவாமி தனக்கு திருவடி தீட்சை வழங்கினார் என்பது திருவாசகத்திலே உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே’ என்றும் ‘பொங்கு மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி பொலியுமே’ என்றும் பதிகம் சொல்கிறது. குதிரை வாங்கப் போய் கொண்டிருந்த தலைமை அமைச்சரை அழைத்து, குருந்த மரத்தடியில் அமர்ந்த குரு தீட்சைக் கொடுத்ததை திருவாசகம் உணர்த்துகிறது.
‘குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்து திரம் இது பொருளென’ - விநாயகப் பெருமானே குருவாக வந்து இப்பூவுலகினில் தனக்கு திருவடியாக பாதம் மூலம் திறம்தந்து அருளினார் என பதிவிடுகிறார் ஒளவையார்.
மாவலி சக்கரவர்த்தியின் கதை ‘திருமாலே குள்ள அந்தணர் தோற்றம் தந்து மூன்று அடி நிலம் கேட்டு கடைசி அடியை அவர்தம் தலைமேல் வைத்து ஆணவம் அழித்து அருளியதாக’ கூறுகிறது.
காஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாக அவதரித்த கருடன், ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுவதை பத்ம புராணம் விரிவாக பதிவிடுகிறது. வாயு புத்திரனான அனுமன் ‘சிறிய திருவடி’ என போற்றி வணங்கப்படுகிறார். இப்படி எல்லாருடைய ஆன்மிகப் பயணமும் திருவடியை நோக்கியே நகர்கின்றன.
ஆறு திருமுறைகளை அருளிய வள்ளலார் பெருந்தகையும் தன்னுடைய முதல் பதிவாக, திருவடிப்புகழ்ச்சியையே பாடுகிறார்கள். நூற்று இருபத்தெட்டு முறை ‘திருவடிச்சரண் புகல்’ என்று திருவொற்றியூரிலே சரணடைகிறார்.
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்கிற வள்ளல் பெருந்தகையின் வாக்கினை நிறைவேற்றும் மார்க்கமே ‘குரு பூர்ணிமா!’. இளம் வயதிலேயே ‘மரியாதை தருதல்’ கற்றுத் தரப்படுகிறது. நல்ல போதனைகளை சிறுவயதிலேயே விதைத்திடல் வேண்டும். ஒழுக்கம், பணிவு, கனிவு, மரியாதை மூலம் வளமான சமுதாயத்தை வளர்ப்பதில் குரு பூர்ணிமாவின் பங்கு அளப்பரியது.
‘ஒரு விளக்கால் ஆயிரம் விளக்கை ஏற்றலாம்’ என்றார் ரவீந்திரநாத் தாகூர். ஆசிரியர்களும், குருமார்களும், பெரியோரும்... தனது அனுபவ ஞானத்தால் அறிவின் சுடரை ஏற்றி வைக்கும் உயர்ந்தோர் ஆவர்.