நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்
Updated on
2 min read

l விளக்கவுரை: முகவைக் கண்ண முருகனடிமை கே.ஸ்ரீராம்.

ஸ்ரீரமண பக்த ஸமாஜம், ஜி 2, ஷிர்டி க்ரஹா, 42/18, சம்பங்கி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33. அலைபேசி: 9841739090.

ஸ்ரீரமணரின் அணுக்க சீடராகத் திகழ்ந்த ஸ்ரீமுருகனார் பாடிய பாடல்களை 1939-ல் தொகுத்து நூலாக்கியவர் ஸ்ரீரமண பாதானந்தர். அதற்குப் பிறகு ஏறக்குறைய 80 ஆண்டுகள் கழித்து நூல் வடிவம் பெற்றிருப்பதிலிருந்தே ‘ஸ்ரீரமண தேவ மாலை’யின் காலம் விளங்கும். தீந்தமிழ்ப் பாடல்களுக்கான அருமையான விளக்கத்துடன் கே.ஸ்ரீராம் இந்த நூலை ரமண பக்தர்களுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கிறார். நூலின் அட்டையிலேயே ஸ்ரீரமண மகரிஷி, முதலில் நூலைப் பதிப்பித்த பாதானந்தர், ரமண தேவ மாலையை அருளிய மூல நூலாசிரியர் முருகானந்தர் ஆகியோரைக் கொண்டுவந்திருப்பது சிறப்பு.

அகத்தியரின் கமண்டலத்துக்குள் காவிரி அடைந்திருந்ததுபோல், இந்தச் சிறிய நூலில் ரமணரைப் போற்றி முருகனார் பாடியிருக்கும் 207 பாடல்களும் முருகனாரைப் போற்றி ஸ்ரீநடனானந்தர் பாடியிருக்கும் ‘முருகன் பேறு என்னும் முருக முப்பது’, ‘முருகன் சீர் என்னும் முருகன் பதினாறு’ ஆகிய படைப்புகளும் அவற்றுக்கான விளக்கங்களும் மிகவும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டபோது எழுத்தாளரும் ‘கலைமகள்’ இதழின் ஆசிரியருமான கி.வா.ஜகந்நாதன் வழங்கியிருக்கும் மதிப்புரைகளும் நூலின் செழுமைக்குக் கட்டியம் கூறுகின்றன.

ரமண தேவ மாலையின் 207 பாடல்களில், ரமணாசிரமத்தின் தனித்தன்மை, மவுன உபதேசத்தின் சிறப்பு, திருவிழிச் சிறப்பு, திருவுருவச் சிறப்பு, திருவடிச் சிறப்பு, தரிசனப் பயன், உண்மை நிலை உரைத்தல், சமயாதீத நிலை போன்ற ஸ்ரீரமணரின் அருமை பெருமைகள் ஆவணமாகியிருக்கின்றன.

காலத்தை வென்ற நன்னெறி/ஸாகித்திய இசைப் பாடகர்கள் - 3

l எஸ்.எஸ்.பாரத்வாஜ்

170, ப்ருந்தாவன் ஸீனியர் ஸிடிஸன் பௌண்டேஷன்ஸ், லக்ஷ்மி நகர், பாரதியார் யுனிவர்சிட்டி அஞ்சல், கோயம்புத்தூர் – 641046. அலைபேசி: 9443007699.

இறை அனுபூதியில் சாகித்யகர்த்தாக்களாகச் சுடர்விட்ட 21 அருளாளர்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு அவர்கள் எழுதியிருக்கும் சில பாடல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கர்னாடக இசைப் பாடகர், திரை இசைப் பாடகர் என்பதைத் தாண்டி ஒரு சாகித்யகர்த்தாவாகவும் பாலமுரளி கிருஷ்ணா இருந்ததை இந்நூல் விளக்குகிறது.

குமரகுருபர ஸ்வாமிகள், கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளிமலை ஸ்வாமிகள், கவி குஞ்சரபாரதி, ஆண்டவன் பிச்சை மரகதம்மா, பொய்யாமொழிப் புலவர் ஆகியோரை ‘முருகு ரத்தினங்கள்’ என்றும், ஸந்த பானுதாசர் தொடங்கி ஜனார்தன பக்த நரசிமேத்தா வரையிலான தாசர்களை ‘ரங்க ரத்தினங்கள்’ என்றும், ஸ்ரீவிநாயகேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் தொடங்கி மைசூர் வாஸுதேவாச்சார் வரையிலானவர்களை ‘ஸாகித்ய ரத்தினங்கள்’ என்றும் அடையாளப்படுத்தி இருக்கிறார். இசைத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பாடல் பொக்கிஷங்கள் நிறைந்த பலனையும் நிம்மதியையும் கொடுக்கும்.

மலையாளக்கரையினில் இஸ்லாம்

l செ.திவான்

வெளியீடு: ரெகான் சுலைமான் பதிப்பகம், 106F, 4A, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002. தொலைபேசி: 0462-2572665.

கேரளத்தில் இஸ்லாம் தோன்றிய வரலாற்றை ஆய்வுபூர்வமாகவும் வரலாற்று ஆசிரியர்கள், தமிழின் இலக்கியச் செல்வங்களின்வழி நின்றும் இந்நூல் விளக்குகிறது. இந்த நூல் எல்லாருக்குமான ஓர் அறிவுக்கொடை. ஏகப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளோடு அதற்கான ஆதாரமான நூல்களையும் தரவுகளையும் நூல்களின் பெயர்கள், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களோடு, நூலின் எந்தப் பக்கத்தில் இந்த நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தகவல் பதிவாகியிருக்கிறது என்பது போன்ற விவரங்களையும் மிகவும் நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் திவான்.

கடல், அரேபியா, அரேபியர் தமிழர் வணிகம், குதிரை உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் வியப்பூட்டும் வரலாற்று உண்மைகளும் நாம் நிச்சயமாக உணர்ந்துகொள்ள வேண்டிய செய்திகளும் அடுக்கடுக்காக விரிகின்றன. பன்னாட்டு ஆய்வு அறிஞர்களின் தரவுகள் நூலின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவுகின்றன. நூலாசிரியரின் அபரிமிதமான தேடலின் விளைவாகவே இந்த நூல் சாத்தியமாகியிருக்கிறது என்பது பக்கத்துக்கு பக்கம் நிரூபணமாகியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in