Published : 10 Feb 2022 11:51 AM
Last Updated : 10 Feb 2022 11:51 AM

உள்ளம் பெருங்கோவில்

கோவில்கள் மனிதர்களின் வடிவமைப் பைக் கொண்டிருக்கின்றன. மனிதர்களைக் கோவிலோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் திருமூலர்.

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பாலயம்

வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

இப்பாடல் வரிகளில் இறைவழிபாட்டில் ஒளிந்திருக்கும் உண்மைத் தன்மை தொட்டுக் காட்டப்படுகிறது. மனிதமும் இறைமையும் வேறு வேறல்ல என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. திருமூலர் வரிகளில் கடவுளை ஏற்பதும் மறுப்பதுமான ஞான தாண்டவத்தைக் காணலாம்.

குனிந்தே பார்த்துப் பழகிய மானிட வம்சத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும் ஏற்பாடாக இந்தக் கோவில்கள் இருக்கலாம். எத்தனை லட்சம், எத்தனை கோடி அண்ணாந்த தலைகள். தன் காலின்கீழ் சுழித்தோடும் மானுட வெள்ளத்தை ஒன்றல்ல, இரண்டல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கின்றன கல்லின் விஸ்வரூபங்கள்.

தட்சிணேஸ்வரக் கோவிலின் படிகளில் ஏறிக்கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அவரது சீடர் கேட்டார்.

“கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகச் சொல்கிறீர்களே. கோவில்கள் எதற்கு? கடவுளின் அருளைப் பெற கோவிலுக்குத்தானா போக வேண்டும்?”

ராமகிருஷ்ணர் சிரித்தார்.

“அப்பனே! பசுவின் உடம்பில்தான் பால் இருக்கிறது. பால் வேண்டுமானால் மடியில்தான் கைவைத்துக் கறக்க வேண்டும். கொம்புகளில் அல்ல. இறைவனின் பெருங்கருணை சுரக்கின்ற பசுவின் மடியாகக் கோவில் இருக்கிறது. அவன் அருளை அங்கே வைத்துத்தான் பெற வேண்டும்.”

கல்வடிவங்களில் கற்பனைகள்

மண்டப விதானங்கள், மாபெரும் பிரகாரங்கள் வானைத் துழாவும் கோபுரங்கள், சிற்பங்களில் உறைந்து நின்றுவிட்ட பழங்காலத்துப் பக்திச் சுவடுகள், கற்றும் கற்பித்தும் காட்டும் ஆய கலைகளின் ஆரோகண அவரோகண வெளிச்சங்கள், யாளியாய்ச் சீறும் ஒரு கல், கருடனாய்க் காலூன்றும் ஒரு கல், யானையாய்ப் பிளிறி மௌனத்தில் மருட்டும் மற்றோர் கல், புரிந்தும் புரியாததுமாய் புதிர்களால் நின்றுவிட்ட கற்களும் உண்டு. கடவுள் உள்ளிட்ட கோவிலின் கற்சிற்பங்களில் சிற்பியின் கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது.

கடவுளின் பாதம்

கடவுளின் - பாதம் கோபுரம், முழங்கால் - முன் மண்டபம், தொப்புள் - பலிபீடம், மார்பு - மகாமண்டபம், கழுத்து - அர்த்த மண்டபம், தலை - கருவறை, செவிகள் - விமானத்தின் வலமும் இடமுமாய் செதுக்கப்பட்ட கற்கள். கழுத்தின் மையம் - நந்தி, புருவத்தின் நடு - சிவலிங்கம் என்கிற விளக்கங்கள் அர்த்தச் செறிவு மிக்கவை.

அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான ஆனந்தமயம் என ஐந்து கோசங்களால் ஆனது சீவன். இந்தக் கணக்கை அடியொற்றியே ஆனந்தமயமான இறைவனின் கருவறையைச் சுற்றி ஐந்து திருச்சுற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தைச் சுற்றிவரும்போது நம்மை நாமே வலம் வரும் உணர்வை வருவிக்கவே இந்த ஏற்பாடு.

குடைவான இடைவெளியுள்ள விமானத்தை அமைத்துச் சிகரத்தில் செம்பு மற்றும் பொன்னாலான தூபி போன்ற அமைப்பும் மாவிலை, விசிறி போன்ற செதுக்கலும் மின் ஒளியையும் ஒலியையும் பரப்ப தற்கால ரேடியோ கோபுர ஏரியல் தொழில்நுட்பத்தை ஒத்திருக்கிறது. நீரில் மந்திர சக்தியைப் பாய்ச்சிட அந்நீரைச் சிலை வடிவின்மீது அபிஷேகமாக இட்டால் அந்நீரிலிருந்து பாய்ந்தோடும் சக்தி தாமிரம் போன்ற உலோகப் பொருளின் வடிவத்திலிருந்து நேர்குத்தாக மேல் எழும்பி விமான கலசத்தின் விசிறிகள் வழியே வானிலே விசிறுண்டு பரவும்.

கிரேக்க அறிஞரும் தமிழகக் கோவில்களும்

ஹெலியோசடாரஸ் என்கிற கிரேக்க நாட்டு அறிஞர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழகக் கோவில்கள், கோபுர அமைப்புகள் பற்றியெல்லாம் ஆய்வு செய்துவிட்டுப் போனதாக இந்திய அகழாய்வுத் துறையின் அளவியல் ஆவணக் குறிப்பேடு தெரிவிக்கிறது. பொ.ஆ.பி. (கி.பி) ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் கோவில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்குச் சங்கப் பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. ‘வாள்வரை மேனி வாலியோன் கோயிலும்’ ‘மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்’ என்கிற சிலப்பதிகார வரிகள் முதல் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இக்கோவில்கள் இருந்தன என்று குறிப்பிடுகின்றன.

பிற்காலக் கோவில்கள்

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் கோபுரங்களைவிட விமானங்கள் பெரியவை. பதி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்களும் கோபுரங்கள் கட்டினர். திருவாரூர் கீழை கோபுரம், சிதம்பரம் மேலை கோபுரம், ஆவுடையார் கோவில் கோபுரம் இவையெல்லாம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டவை. சிதம்பரம் வடக்குக்கோபுரம் திருவண்ணாமலை மேலை கோபுரம் ஆகிய பெருங்கோபுரங்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டவை. கி.பி. 17ம் நூற்றாண்டில் சிற்ப வேலைகள் கொண்ட சித்திரவிதானக் கோவில்களை நாயக்க மன்னர்கள் கட்டினர்.

கோவிலாய் வளர்ந்த மரம்

ஆதியில் மரங்களை வழிபட்ட மனிதர்கள் அவற்றின் அடியில் வடிவங்களை அமைத்தனர். வடிவங்கள் வளர்ந்து கோவில்கள் ஆயின. அவை பிறந்த மரமே தலவிருட்சம் ஆயிற்று.

பல்லவர் காலத்தில் கற்களை உடைத்துச் செதுக்கிக் கட்டிய கோவில்கள் `கற்றளிகள்’ எனப்பட்டன. தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ந்த கோவில் கட்டிட மரபின் உச்ச நிலையே தஞ்சைப் பெரிய கோவிலாகும். தஞ்சைக் கோவில் விமான அமைப்பை மாடக்கோவில் என்பர். தஞ்சைக் கோவிலில் காணும் சித்திரங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் அமைப்புகளும், சிதம்பர சிற்சபையும், திருக்குற்றால சித்திரச் சபையும் பழங்கால மண்டபக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டுகள். தஞ்சையின் அர்த்த மண்டபத்திற்கு மேல் கூரையாக வண்டிக்கூடு போல் நீண்டு வருவது அகநாசி (கிளிமூக்கு) எனப்படும்.

ஆசியாவிலேயே பெரிய கோவில்

ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்கிற பெருமை ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திற்கு உண்டு. உயரம் 236 அடி. 13 கலசங்கள் 13 நிலைகளையும் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் அது. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில் ஒன்றுதான் ஏழு சுற்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் ஆறு மைல் நீளமுள்ள மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. ஏழு பிரகாரங்கள், ஏழு மதில்கள். ஏழு பிரகாரங்கள் ஏழு உலகங்களைக் குறிக்கிறது. விமானம் பிரணவ மந்திரத்தைக் குறிக்கின்றன. ஏழு மதில்கள் ‘நமோ நாராயணாய’ என்கிற எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

பெரிய கோவிலின் நிழல்

‘மெகனாஸ் கோல்டு’ ஆங்கிலப் படத்தில் நீண்டு செல்லும் பாறை நிழல் தங்கப் பள்ளத்தாக்கில் நிலைகொள்வதைத் தேடி குதிரை மீது பாய்ந்தோடும் வேட்டைக் கும்பல். அதேபோல் கோவிலின் நிழல் தலைமுறை தலைமுறையாய் நீண்டு செல்கிறது. அதன் பின்னால் வாழ்வின் ஆசாபாசங்களை ஏற்றுக்கொண்டு ஓடிச் சலிக்கிறது மக்கள் கூட்டம். நல்ல நிலா வெளிச்சத்தில் ஹம்பி இடிபாடுகள் வேறுவிதத் தோற்றம் காட்டும் என்று யாத்ரிகர்கள் குறிப்பிடுவர். நிலவு எரிக்கிற நள்ளிரவில் பெரிய கோவில் கோபுரம் மெல்ல மெல்ல மேல் எழுந்து வானத்தில் வியாபிக்கும். ஆன்மிக ஓங்காரமும் அப்படிப்பட்டதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x