கவலைகளுக்கான தீர்வு!

கவலைகளுக்கான தீர்வு!
Updated on
1 min read

பெருந்தொற்றுக் காலம் நாம் தனிமையாக இருப்பதைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது. தனிமை எல்லோருக்கும் இனிமையாக இருப்பதில்லை. குடும்பமாக, சமூக மாகக் கூடியிருப்பதையே நாம் விரும்புகிறோம். குடும்பத்துடனும் சகாக்களுடனும் இணைந்திருந் தாலும், தனிமைப்படுத்தப்பட்டதாகப் பலரும் உணர்கிறார்கள். தன்னைப் பிறர் ஒதுக்குவதாகக் கருதும் எண்ணத்தி லிருந்து கவலைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அது மாறிவிடுகிறது. கவலைகள் வந்தடையும் இறுதி இடம், ‘நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன்’ என்கிற அன்றாடத்தின் அவநம்பிக்கையாக மாறிவிடுகிறது. விவிலியத்தின் சங்கீதப் புத்தகத்தில் 102ஆவது பாடலின் இரண்டு வரிகள் இவை:
‘07. தூக்கம் இல்லாமல் படுத்துக்கிடக்கிறேன். கூரைமேல் தனியாக உட்கார்ந்திருக்கிற பறவைபோல இருக்கிறேன்.
08. எதிரிகள் நாளெல்லாம் என்னைப் பழித்துப் பேசுகிறார்கள். என்னைக் கிண்டல் செய்கிறார்கள், நான் புல்போல வாடி வதங்குகிறேன்’.

நீங்கள் உணரும் தனிமை இப்படிப்பட்டதாக இருக்கலாம். அல்லது எப்படிப்பட்டதாக இருப்பினும் அது உருவாக்கும் அவநம்பிக்கையிலிருந்து மீண்டுவரவும், கவலைகளைச் சமாளிக்கவும் பைபிள் சிறந்த ஆலோசனைகளைத் தருகிறது. யேசு கிறிஸ்து தன்னுடைய மலைச் சொற்பொழிவில் தன்னைத் தேடி வந்து குழுமியிருந்த திரளான மக்களுக்கு அறிவுறுத்திய வார்த்தைகளை, விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில், அவருடைய சீடர் மத்தேயு எழுதிய நற்செய்தியில், 6வது அதிகாரம் 25வது வசனத்தில் இப்படி வருகிறது:

“அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தந்தை அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியைக் கூட்ட முடியுமா? காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்;

அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த மாமன்னன் சாலமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை. நம்பிக்கையில் குறைவுபட்டவர்களே... இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்கமாட்டாரா? அதனால், ‘எதைச் சாப்பிடுவோம்?’, ‘எதைக் குடிப்போம்?’, ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.

இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தந்தைக்குத் தெரியும். அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்”.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in