இறையையும் இயற்கையையும் போற்றும் பிள்ளைத்தமிழ்!
செம்மொழியான தமிழின் இலக்கிய வகைமைகளுள் சிற்றிலக்கியங் களுக்குத் தனிப் பெருமை உண்டு. பள்ளு, தூது, உலா, கலம்பகம், கோவை, குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் உள்ளிட்டவை சிற்றிலக்கியங்களுக்குள் அடங்கும். இதில் பிள்ளைத்தமிழ் எனப்படுவது அரசனை, இறையைக் குழந்தையாகப் பாவித்து பாடக்கூடியது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், பொன்னூசல் பருவம் எனப் பத்துப் பருவங்களுக்குத் தலா பத்துப் பாடல்கள் பாடப்படும்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரபாண்டிய புலவர் என்று அழைக்கப்பட்ட சங்கரமூர்த்தி புலவர், தூத்துக்குடியில் அருளும் பாகம்பிரியாள் அம்மையைத் தாயின் நிலையிலிருந்து குழந்தையாக பாவித்து, ‘ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்' இயற்றியிருக்கிறார். இந்தப் பிள்ளைத்தமிழின் 101 பாடல்களுக்கு இசையமைத்திருப்பதுடன், இன்றைய தலைமுறை படிப்பதற்கு உகந்த முறையில் பாடல்களுக்கான விளக்கத்தைப் புலவர் சங்கரலிங்கம் என்பவரிடமிருந்து பெற்று நூல் வடிவிலும் கொண்டுவந்திருக்கிறார் தூத்துக்குடியில் ‘சாரதா கலைக்கூடம்' எனும் இசைப் பள்ளியைப் பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ம.இசக்கியப்பன்.
இறையைக் குழந்தையாகப் போற்றிப் புகழ்வதோடு, தூத்துக்குடி யைத் திருமந்திர நகர் என்று அழைப்ப தற்கான புராண காரணம், அந்தப் பகுதிவாழ் பரதவ மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணவு முறை, அணிகலன்கள், மகர மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள், மணற்பரப்பில் ஆமை இனப்பெருக்கத்துக்காக முட்டையிடுவது, முத்துக் குளித்தல், பனைமரக் காடு கள், அங்கு வாழும் மக்கள், மண் வளம், மலையிலிருந்து தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம் வரையிலான நதி புராணம், அதில் இருக்கும் கனிம வளங்கள், நீர் வளம் போன்ற பலவற்றைப் பற்றிய குறிப்புகளும் அந்தப் பாடல்களில் கையாளப்பட்டிருப்பது, இந்தப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஓர் ஆவணமாகக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இறையோடு இயற்கையையும் போற்றுகிறது இந்தப் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்.
முத்துக்களைவிடச் சிறந்த முத்தம்!
முத்துக்குளித்தல் முடிந்தவுடன் பருவண்டி எனும் சல்லடையைப் பயன்படுத்தி முத்துக் களை வடிவாணி, உண்மைக்காணி, சிவப்பாணி, குத்துண், கழுநீர், இருப்புக்குள் கழிப்பு, கழிப்புக் கையேறல், குறுகல் ஆணி, குறுகல்வரை, கழிவுக் குறுகல், செந்நீர், சப்பத்தி, சமதாயம், கழிவுச் சமதாயம், பால் சங்கு, வெள்ளை எனப் பதினாறு வகையாகப் பிரித்தெடுக்கும் முறையைக் கூறி, “பாகம்பிரியாளே முத்தைத் தரம்பிரிக்கின்றனர். தேவி… உன் வாய்முத்தத்தைத் தரம் பிரிக்க முடியாதே…” என்னும் முத்தப் பருவப் பாடலில் புலவரின் கற்பனையும் அந்நாளில் நடந்த முத்துக் குளித்தல் காட்சியும் கைகோக்கின்றன.
ராகங்களின் ஊர்வலம்
பல்கலைக்கழகம், அரசு சார்ந்த அமைப்புகள் போன்றவற்றால் மட்டுமே நிகழ்த்த சாத்தியமுள்ள பெரும் பணியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல உள்ளங்களின் ஆதரவோடும் தம்முடைய வருவாயிலிருந்தும் செய்துமுடித்திருக்கிறார் இசக்கியப்பன். 101 பாடல்களையும் தீபிகா, நந்திகா சகோதரிகள் பாடியிருக்கின்றனர். இவர்கள் நெய்வேலி சந்தானகோபாலனிடம் இசைப் பயிற்சி பெற்றவர்கள். பாடுவதோடு வயலினும் வாசித்தி ருக்கின்றனர். இவர்களோடு திருப்பாம்புரம் செல்வரத்தினம் (நாகஸ்வரம், தவில்), வெங்கட் (தபேலா), சிவா (வீணை), சாய் (புல்லாங்குழல்), ரோஹித் (கீபோர்ட்) ஆகிய கலைஞர்களின் இசையமைப்பில் மரபின் செழுமையையும் விடாமல் தேவைப்படும் இடங்களில் நவீனத்தின் துணைகொண்டும் துவளாத இசையைப் பாடல்களுக்கு அளித்திருக்கிறார் இசக்கியப்பன்.
“நிலாப் பாடல்களுக்கும் பிருந்தாவன சாரங்கா ராகத்துக்கும் இருக்கும் நீண்ட நெடிய பிணைப்பு அறுபடாவண்ணம், அம்புலிப் பருவத்துக்கான இசையை அந்த ராகத்தி லேயே அமைத்தேன். தாலப் பருவத்தையும், பொன்னூசல் பருவத்தையும் பொதுவாக நீலாம்பரி, ஆனந்தபைரவி ராகங்களில்தான் அமைப்பர். நானும் அந்த மரபை ஒட்டியே இசையமைத்திருக்கிறேன். தவிர சங்கராபரணம், காபி, கீரவாணி, ஆனந்தபைரவி, கானடா என 17 ராகங்களைப் பயன்படுத்தி இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன்" என்கிறார் இசக்கியப்பன்.
காப்புப் பருவப் பாடலைக் கேட்க: https://bit.ly/3GeYlPg
