சித்திரப் பேச்சு: கிளியை அணிகலனாகக் கொண்ட மன்னன்

சித்திரப் பேச்சு: கிளியை அணிகலனாகக் கொண்ட மன்னன்
Updated on
1 min read

நான்கடி உயரத்தில் கம்பீரமாகவும் மீசை இல்லாமலும் பக்திப் பரவசத்துடன் தனித்து நின்ற கோலத்தில் மேற்குத்திசை நோக்கிக் கைகூப்பிய வண்ணம் காட்சிதரும் இந்த மன்னனின் சிலை இருப்பது ரங்கம் அரங்கநாதசாமி திருக்கோவில் ஆகும். கருட மண்டபத்தில் உள்ள சிலை இது. தலையில் வித்தியாசமான மகுடம் உள்ளது. கிளியின் உருவம் தனித்து தெரிகிறது. இடுப்பில் உள்ள கட்டாரியின் கைப்பிடியில்கூட கிளியின் உருவம் அணி செய்கிறது. இவற்றை பார்க்கும் போது இந்த மன்னனுக்கு கிளியின் மீது அதிகம் பிரியம் போலும். கழுத்தில் முத்து மணிமாலைகளுடன், தாமரை மலர்களாலான மாலையும் கூட அணிந்துள்ளார். வலதுதோளில் வங்கியும், இரு கைகளிலும் கட்கமும் அணிந்து இருக்கிறார். இடதுதோளில் வங்கி இல்லை. ஆனால் முழங்கையில் முத்துமணி மாலையைச் சுற்றிக் கொண்டுள்ளார். இடுப்பில் கட்டியுள்ள பட்டு பீதாம்பரத்தில் உள்ள சிறிய பூக்கள் மற்றும் வேலைப்பாடுகளை மிகவும் துல்லியமாக சிற்பத்தில் கொண்டுவந்திருக்கிறார் சிற்பி. மற்ற தூண்களில் அரசர்கள் ராணி களுடனும், மந்திரி பிரதானிகளுடனும் இருக்கும்போது இந்த மன்னன் மட்டும் தனித்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை. விபீஷணனுக்காக தர்மவர்ம சோழன் கட்டிய இக்கோவில் மணலால் மூடப்பட்டதால் , பின்னாளில் வந்த சோழ மன்னன் ஒரு கிளியின் உதவியுடன் இக்கோவிலைக் கண்டுபிடித்து, திருக்கோவிலைப் புனரமைத்து அரங்கநாதனுக்கு பிரம்மாண்டமாக பெரிய ஆலயத்தை நிர்மாணித்தான். அதனால் அவன் கிளி சோழன், கிள்ளிவளவன் என்று அழைக்கப் பட்டான். பின்னாளில் வந்த நாயக்க மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து விரிவுபடுத்தி பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். ஒருவேளை அந்த மன்னன் நினைவாகத்தான் இந்த சிலை எழுப்பப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in