

இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் இருப்பது தஞ்சை -கண்டியூர் அருகே திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தின் திருமதிலில் காணப்படுகிறது.
அர்த்தநாரீ ஸ்வரரும் முன்பு கோஷ்டத்தில் பார்க்கும் அர்த்தநாரீஸ்வரரைப் போலவே ரிஷபத்தின் மீது கையை ஊன்றியபடி இடுப்பை சற்று ஓசித்து ஒய்யாரமாக சாய்ந்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறார். ஆணும் பெண்ணும் சரிசமமாகக் காணப்படுவது சிறப்பு.
தலையில் சிவனின் ஜடாமுடியும், அம்மையின் கிரீடமும் வித்தியாசமான வடிவில் உள்ளன. இறைவனின் காதில் மகர குண்டலமும், இறைவியின் காதில் குழையும் மிளிர்கின்றன. மார்பிலும், தோளிலும் மற்றும் கைகளிலும் வித்தியாசமான அணிகலன்கள் அலங்காரமாக உள்ளன. இறைவனின் காலில் சிலம்பும், இறை வியின் காலில் தண்டையும், சிலம்பும் சிறப்பாக உள்ளன. இடையில் உள்ள ஆபரணங்கள் பார்ப்பதற்கு புதுமையாக இருக்கின்றன. சிவனின் தொடை முழுவதும் தெரியும்படி உள்ளது. ஆனால் அம்மையின் ஆடையோ பாதம் வரை இருக்கிறது. சிவனின் வலது மேல் கரத்தில் மழுவும், அம்மையின் கரத்தில் நீலோற்பலமும் உள்ளன.
நீலோற்பலம் மலரின் ஒரு இதழ் மட்டும் விரிந்து கீழ் நோக்கி மடங்கி இருப்பது போல் காணப்படுவதுதான் இயற்கையாக உள்ளது. தலை முதல் பாதம் வரை ஓவ்வொரு அங்குலமும் சிற்பியின் தனித்தன்மையை அபாரமாக எடுத்து காட்டுவதாக அமைத்து இருக்கிறது. பெயர் தெரியாத அந்தச் சிற்பியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தோன்றியது. இந்தச் சிற்பம் ராஜராஜ சோழன் காலத்தைச் சார்த்தது என்கிறார் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.