

ஆகச்சிறந்ததென்று கூறப்படும் இந்த மானுடப் பிறவியில் தாவர சங்கமம் சூழ வாழக் கிடைத்த பேறு பெரும்பேறாகும். நவரசமும் மிகையோ எனத் திகைக்கவைக்கும் அரிதாரம் பூசிய கணங்கள், காட்சிகள் எண்ணில் அடங்காதவை. அறிதலுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவை. எனினும், அறிதலுக்கும் புரிதலுக்குமான ஆயத்தங்களில்தானே உயிர்கள் பயணிக்கின்றன.
பாதையில் சந்திக்கும் திடீர்த் திருப்பங்கள்,அரவமற்ற நீள்வெளிகள், அதிரவைக்கும் பேரோசைகள், ஒலியும் ஒளியும் குடித்து நெளியும் இருள் அரவங்கள் எனத் தனித்துவம்மிக்க அனுபவங்களே வாழ்வின் பயணியை முக்தனாகவும் பித்தனாகவும் ஆக்குகின்றன. பாதைகளின் புதிர்கள் ஒருபோதும் தீரப்போவதில்லை. அதனால்தான் அனுபவசாலிகளின் பயணக்குறிப்புகள் தீர்வுகளாக அன்றி திசைகாட்டிகளாக அறியப்படுகின்றன.
உண்டு உடுத்தி இங்கு இருப்பதிலும் இடையூறு பல செய்து பிறரை இகழ்வதிலும் எத்தனை ஆனந்தம். கணக்கு தீர்க்கக் கிடைத்த வாய்ப்பில் புதுப்புது கணக்குகளை வரவு வைக்கிறோம். காலில் குத்திய முள்ளை வலிக்காமல் எடுக்கச் செய்த முயற்சி பிழையாகி தசையாழத்தில் முள் பொதிந்து புறத்தே மருந்திட்டு பொறுத்து இருந்தால் புரையோடிப் போகாதோ. வேர் இருக்க கிளை ஒடித்து நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்கிறோம்.
இதைத்தான் மாணிக்கவாசகர்
“திணியார் மூங்கில் அணையேன் வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே” (திருச்சதகம்:89) என்கிறார்.
மனத்தின் நெளிவு சுளிவுகளையும் உருக்கம் இன்மையையும் காட்டவே வலிமையான மூங்கில் அணையேன் என்று சுட்டுகிறார். வினைகள் பொடியானால் அன்றோ, பொய் தீர்ந்த மெய்யின் தரிசனமும் தண்ணிழலும் கிட்டும்.
எண்ணியமட்டில் எல்லாமும் கிடைக்கும் எனில் நாளும் கோளும் வினையும் நமக்குப் பொருட்டு ஆகுமோ. ஒன்றல்ல இரண்டல்ல ஆறு கோடி மாயாசக்திகள் ஆட்டிப் படைப்பதால் மண்ணோடும் பொன்னோடும் பெண்ணும் போர்களுக்குக் காரணம் ஆகிறாள்.
“ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின”
(போற்.திரு:44,45)
என்று மாணிக்கவாசகர் கூறுவதுபோலவே திருமூலரும்
“மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே”
(திருமந்திரம்:1045) என்று பேசுகிறார்.
கைகூடுவது இல்லை
மயக்க மருந்தின் தாக்கம் உடலில் இருக்கும்வரை வலியை உணரமுடிவது இல்லை. போலவே மாயையின் பிடியில் இருக்கும்வரை வாதைகள் வாதைகளாகவும் தெரிவதில்லை. அவைதரும் வலிகள், துயரங்கள், இழப்புகள், மரணத்தின் துர்மணம் என நம்மை அசைக்கும் எதுவுமே கவனத்துக்கு வருவதும் இல்லை. ஆங்காரம் தவிர்த்து ஆண்டவனை அடிபணியும் ஞானமும் கைகூடுவது இல்லை.
குழந்தை விளையாடுகிறது என்பதற்காக தாய் அதன் பசி நேரத்தை மறந்துவிடாமல் பரிந்து ஊட்டுவாள். அதுபோலவே உயிர்களும் மாயையின் பிடியில் சரணடைவதை ஈசன் அனுமதிப்பது இல்லை. தாயினும் பரிந்து ஆட்கொண்டு அழியவிடாமல் அருள் ஆட்சி புரிவான். இறைவனின் கடைக்கண் படும்போதுதான் வினையின் பிடியில் இறுகிக் கிடப்பதை உணர்கிறோம். நம் மீது கல் விழுந்தாலே கலங்குகிறோம். மலை விழுந்தால் நிலைக்க முடியுமோ. ஆனால், மலைகள் வந்து மோதுகின்றனவே. நாம் செய்த வினைகள் அல்லவா காரணம்.
“வரை சேர்ந்து அடர்ந்தென்ன வல்வினைதான் வந்து அடர்வனவே” (நீத்தார் விண்ணப்பம்:37)
மலைகளை மாவாக்கும் வல்லமை அவனன்றி வேறு யாரிடமும் இல்லை. அடுத்து அடுத்து வரும் தொடர் துன்பங்களை வல்வினைக் காடு என்கிறார். அதனை எரித்து அருளி பிறவி வேர் அறுக்க வேண்டுகிறார்.
“மடங்கலென் வல்வினைக் காட்டைநின் மன்னருள் தீக்கொளுவும்
விடங்க என் தன்னை விடுதிகண்டாய் என்பிறவியை வே
ரொடுங் களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைகு அரசே” (நீத்.விண்:19)
வினைப்பிறவி எனும் வேதனையில் அகப்பட்டு துயரத்தை நினைத்து நினைத்து அதுவேயாகி அவலம் எய்தி ஆள்பவனை நினைக்காமல் தளர்ந்தபோதும்கூட மீட்டுவிடும் கருணை வள்ளல் அல்லவா தில்லை அம்பலவாணன்.
ஐம்புலன்களும் வாழ்வதற்கான வரம் என்று எண்ணாமல் மரணத்தின் கருவிகள் என எண்ணி மதிமயங்குவதைவிட வேறு நரகம் இல்லை. அப்போதும் அஞ்சேல் என்று சிந்தையைத் தெளிவாக்கி சிவமாக்கும் பெருங்கருணையாளன் ஈசன். அதனைக் கண்டுகொள்ளும் துணிவும் பற்றிக்கொள்ளும் பணிவும் வாய்த்தவருக்கு இறைவன் தோழன் ஆவான். துணைவன் ஆவான். ஆடை நழுவும்போது ஓடிவந்து உதவும் கைபோல உற்ற நட்பினும் வாழ்வு அரண் வேறு உண்டோ. துணை நின்று தோள்கொடுக்க எனையன்றி யார் வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி அசையாது அருளி நிற்கும் பேராளன் என்பதால்
”தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி” (போற்.திரு:120,121)
என்று வாழ்வும் வாழ்வின் முதலும் ஈசன் என்று துதிக்கிறார்.
இந்தப் பேறுபெற நீட்டலும் மழித்தலும் செய்து உருமாறி கடுந்தவம் செய்ய வேண்டுமோ? காடு, மலை, நாடு, நகரம் என அலைந்து திரிய வேண்டுமோ? காற்றைப் புசித்துக் கல்லிலும் முள்ளிலும் யாக்கைக் கிடத்தி அல்லலுற வேண்டுமோ? சுற்றமும் பற்றும் அற்றதென விலக்கி தொலைந்துபோக வேண்டுமோ? வேண்டாம். மனம் கசிந்து உள்ளுருகி சிவாயநம என்று உச்சரித்தால் போதும். எதையும் கடந்துசெல்லும் வன்மையும் திண்மையும் நமக்கு வாய்க்கும்.
“நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதூள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்” (திருவேசறவு:10)
என்கிறார் மாணிக்கவாசகர்.
“கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே”
என்று நான்காம் திருமுறையில் அப்பரும் பாடுகிறார். அவன் நாமத்தை அன்போடு சொல்வது அன்றி ஆபத்தில் காப்பாற்ற நாம் சேர்த்துவைக்கும் உறுபொருள் வேறில்லை. அதனால்தான் “காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க” (திருவண்ட:105) என்று அழியாப் பெரும்பொருளை, அரிய பரம்பொருளை மாணிக்கவாசகர் வாழ்த்துகிறார்.