

வாழுமிடம், மூலாதாரம், சொர்க்கம்,கருப்பை, அடைக்கலம், விடுதலை என ‘வீடு’ என்ற அந்தச் சின்னச் சொல் குறிக்கும் அர்த்தம் பெருகிக்கொண்டே போவது. கருவிலிருந்து வெளிவருவதற்கு முன்பே வீட்டைத் தேடத் தொடங்கியவர் கிறிஸ்து. கடவுளின் மைந்தனாயினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே பாலைவெளியில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து அந்த இடத்தையும் அங்குள்ள எளிய வாழ்க்கையையும் ஒரு மகத்துவமான குறியீடாக்கிக்கொண்டவர்.
மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, சிலுவைப்பாட்டை எதிர்கொண்டு அவர் மரித்திருக்காவிடில் உலகில் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைப் புறங்களில், நட்சத்திர விளக்குகளுடன் இன்றும் நினைவுகூரப்பட முடியுமா? கிறிஸ்துவை மையமாகக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வீடென்ற ஒன்றை அதன் எல்லா பரிமாணங்களிலும் தேடி அலைந்த தமிழ்க்கவிஞன் பிரமிள் எழுதிய கவிதை இது.
சுவர்கள்
பிரமிள்
மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்பவிடாது தடுத்துக்கொண்டிருக்கின்றன. இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது. வீடு திரும்பும் வழி தெரியவில்லை. அன்று - ஒரு மாட்டுக்கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கித் திறந்த பாலைவெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில் அழைத்து வழிகாட்டிற்று.
நான் சக்கரவர்த்தியுமல்லன். சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்தவெளியுமல்ல, பாலையாயினும் வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும், வீடு ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன். இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல. கருவாகி புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.