

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, ஏழாம் நூற்றாண்டு ஆலயம் இது. முத்தரையர்களால், பல்லவர்கள் பாணியில் குடவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யத்தில் உள்ளது. சத்தியமூர்த்தி பெருமாள் சந்நிதியில் அஞ்சலி வரஹஸ்தராய், இரண்டு கரங்களுக்கு இடையில் ஜெபமாலையுடன் இந்தக் கருடாழ்வார் சிலை உள்ளது.
கருடாழ்வார் தலையில் நவரத்தினங்களால் ஆன கிரீடம் உள்ளது. கிரீடத்தில் இருபுறமும் இரண்டு பச்சைக்கிளிகள் மேலிருந்து கீழ் நோக்கி காதுகளின் ஓரத்தில் இருக்கும் மலரைக் கொத்துவதுபோல் இருக்கின்றன.இது போன்ற அமைப்பு வேறு எங்கும் காணப்படவில்லை. இரு காதுகளிலும் கர்ண குண்டலங்களும், காதுகளின் பின்புறம் சுருள்சுருளான வித்தியாசமான ஜடாமுடியுமாகப் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும்படி உள்ளது.
இவரது கழுத்திலும், தோள்களிலும் கரங்களிலும் நாகம் ஆபரணமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இவரது முகத்தில் உள்ள மீசை கூட நாகத்தைப் போலவே அமைந்துள்ளது. மார்பில் முத்து மணி மாலைகளும் உள்ளன. தோள்களின் இருபுறமும் இறக்கைகள் உள்ளன. கருடாழ்வாரின் அங்கமெல்லாம் நாகராஜாக்களும், இரண்டு பச்சை கிளிகளும் இருப்பது போல் கற்பனை செய்த சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.