Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

வைகறைக் கடவுளே வருக!

புதுவை கடற்கரை. புலர் காலைப் பொழுது. அலைகள் கரும் பூதங்களாய் எழுந்து பாறைமீது மோதுகின்றன. ஏகாந்தமாய் நிற்கும் பாறைமீது ஒரு முண்டாசு கட்டிய உருவம். நெஞ்சின் குறுக்கே கைகளைச் சேர்த்து கீழ்த்திசையில் உற்றுநோக்குகிறது.

அவர் பாரதி.

திடீரென்று கீழ்வானில் மெல்லிய வெளிச்ச ரேகை. கறுப்பு வெல்வெட் துணி மீது தங்கச் சங்கிலி விழுந்ததுபோல் ஒரு பொற்சரடு மின்னுகிறது வானிலே!

அலைகளின் இரைச்சலை மீறிப் பாடுகிறான் பாரதி.

‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருட்கணம் போயின யாவும்!’

பாரதியைப் போலவே உலகம் ஒவ்வொரு நாளும் வைகறையின் வருகையில் மகிழ் கிறது. காத்திருக்கிறது. கீழை வானில் மஞ்சளும் செந்தூரமும் பிசைந்து தோன்றும் மெல்லிய வெளிச்சக்கீற்று கடவுளின் புன்னகையாகவே தோன்றுகிறது.

வேதங்களும் உபநிடதங்களும் விடியலைத் தெய்வமாகவே கொண்டாடுகின்றன.

பொய்யிலிருந்து மெய்க்கு

இருளிலிருந்து ஒளிக்கு

சாவிலிருந்து சாகா நிலைக்கு

என்னை இட்டுச்செல்

என்கிறது ரிக்வேதம்.

‘பொழுது விடிந்தது! என் உள்ளமென் கமலம் பூத்தது! பொன்னொளி பொங்கியது எங்கும் தொழுது நிற்கின்றனன் செய்பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே’ என்று திருப்பள்ளியெழுச்சி பாடு கிறார் வள்ளலார். நிலம் தெளிந்தது. கண மழுங்கின. சுவண நீடொளி தோன்றிற்று என்ற வள்ளலாரின் வைகறை வர்ணிப்பு ஒரு சொற்சித்திரம்.

உபநிடதங்கள் வைகறையைப் பலவாறு வர்ணிக்கின்றன. பக்தியை மீறிய பரவச நிலையில் கவித்துவத்தின் சரடுகொண்டு நெய்யப்பட்டிருக்கின்றன இவ்வரிகள்.

வைகறைப் பெண்ணே

நீ கதிரவனின் தங்கை

வருணன் உள் தமையன்

நீ இருளின் சோதரி

உன்னைப் போற்றுகின்றோம்.

நன்கு அலங்கரித்துக்கொண்டு

செல்லும் யுவதியைப் போல

நீ கதிரவனிடம் செல்கிறாய்

தேவர்கள் உன்னைப் போற்றுகின்றனர்

உன்னை கதிரவனுக்குத்

திருமணம் செய்துவைக்கின்றனர்!

வைகறைக் கடவுளாக மந்திரங்களில் உஷை வர்ணிக்கப்படுகிறாள். ரிக்வேதப் பாடல்களில் திரும்பத் திரும்ப உஷை உச்சரிக்கப்படுகிறாள். உஷா தேவி இருட்டை விரட்டுகிறாள். தீய சக்திகளை ஓடச் செய்கிறாள். உயிரைப் புதுக்கி உலகெலாம் இயக்கத்தை தூண்டிவிடுகிறாள். உயிரினங்களின் உள்ளே உயிர்க்காற்றை ஊதி விடுகிறாள்.

உஷையின் சகோதரி

உஷை, தங்கமாய் ஜொலிக்கும் செந்நிறக் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரில் வருகிறாள். அவள் மகன் சூரியனுக்கு வழிவிடுகிறான். வேத வரிகளில் உள்ள அற்புதமான வரிகள் அனைத்தும் உஷா தேவியைப் போற்றி புனையப் பட்டுள்ளன. அவள் சகோதரி ‘ராத்திரி’ எனப்படும் பெண் ஆவாள்.

உள்முக எழுச்சியின் வடிவமே வைகறை என்று அரவிந்தர் கூறுகிறார். தெய்விக தரி சனத்தின் முதற்படியாக உஷை இருக்கிறாள். வைகறை அனைத்து தெய்வங்களின் தாயாகவும் திகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

உஷை, மனிதர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு உறுதுணையாகிறாள். ஞானத்தை கனிய வைக்கிறாள். பூரணத்தைச் சமைக்கிறாள். ஆகவேதான் வைகறை வேளை அமைதியின் தருணமாக யோகம் கைகூடும், பிரம்ம முகூர்த்தமாகக் கருதப்படுகிறது.

உஷை வானிலே தோன்றும் வெறும் பெளதிகத் தோற்றமன்று. அவள் யோக சாதனையில் ஈடுபடுவோர்க்கு ஆழ்மன விழிப்பை தோற்றுவிப்பவள். வைகறை அதன் குறியீடு. அகத்தைத் தேடி ஆழ் மனத்துக்கு அப்பாலும் சாதகனைக் கொண்டு செலுத்து பவள். வானத்தின் விடியலைக் காண வெறும் கண்ணே போதும். மரணமிலா பெரு வாழ்வின் உன்னதநிலை கொண்ட உஷாவை தரிசிக்க யாரால் ஏலும்? அவளது மங்கிய மந்தஹாசத்தை புரிந்துகொள்ள யாரே வல்லவர்?

விடியட்டும்

மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா. ‘விடியுமா?’ என்றொரு கதை எழுதியிருப்பார். இதில் சென்னையில் உள்ள பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் உறவினருக்காக ஒரு குடும்பமே கும்பகோணத்திலிருந்து ரயிலில் பட்டணம் செல்கிறது. இரவு நேரப் பயணம். எல்லோர் மனத்திலும் மருத்துவமனையில் அந்த மனிதர்க்கு என்ன நேருமோ என்று நினைத்து பதைத்தபடி பயணிக்கிறார்கள்.

பொலபொலவென்று விடியும்போது ரயில் சென்னை சேர்ந்துவிடும். அவருக்கு என்ன ஆயிற்று என்ற முடிவும் தெரிந்துவிடும். தவித்தபடியே இரவைக் கடக்கிறார்கள். விடியும்போது ரயில் பட்டணம் சேர்கிறது. வாசகர் மனதிலும் அவருக்கு என்ன ஆயிற்று என்ற ஆவல் துடிக்கிறது. கதையில் அதைச் சொல்லாமல் கு.ப.ரா. ஒரு மாயம் செய்கிறார். அப்புறம்...அப்புறம்... என்ற கேள்விக்கு விடையாக அவர் அப்புறம்… விடிந்துவிட்டது என்று கதையை முடிக்கிறார். புதிரே வாழ்வாக மருட்டுகையில் விடிந்ததே போதும் என்று சொல்வதுபோல விடியலே விடையாக முடிகிறது கதை.

(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x