புத்த கதைகள்

புத்த கதைகள்
Updated on
2 min read

மரித்த கோப்பை

ஜென் குரு இக்கியு ஒரு மடாலயத்தில் மாணவனாக இருந்தபோது நடந்த கதை இது. அவரது குரு புராதனமான தேநீர் கோப்பை ஒன்றை அரும்பொருளாக வைத்திருந்தார். ஒரு நாள் சிறுவன் இக்கியு அந்தக் கோப்பையை உடைத்துவிட்டான். தனது குரு வரும் காலடிச் சத்தத்தைக் கேட்டவன், கோப்பையின் துண்டுகளைப் பொறுக்கி கையில் வைத்துக்கொண்டான். குரு அந்த அறையில் தோன்றியவுடன், மனிதர்கள் ஏன் மரிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டான் இக்கியு.
அது இயற்கையானது என்றார் குரு. நன்றாக வாழ்வது எத்தனை அவசியமோ அதைப் போலவே ஒவ்வொன்றும் மரிப்பதும் அவசியம் என்றார். இந்த புராதனக் கோப்பைக்கு சாகும் நேரம் வந்துவிட்டது என்று கையைத் திறந்து காண்பித்தான் இக்கியு.

மன்னிக்க மறுத்த புத்தர்

புத்தரின் ஆசிரமத்துக்குள் நுழைந்த ஒரு வியாபாரி அவர் கன்னத்தில் அடித்தான். தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்துகளை விட்டுவிட்டு, தனது குழந்தைகள் புத்தரின் ஆசிரமத்தில் சேர்ந்ததே அவனது கோபத்துக்குக் காரணம். புத்தர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். ஒரு வார்த்தையோ, ஒரு எதிர்வினையோ காட்டவில்லை. அந்த வியாபாரியோ அதிர்ச்சியுடன் வீடு திரும்பினான். அவனால் இரவு உறங்கவே முடியவில்லை. அந்த வியாபாரிக்கு அவன் இதுவரை கண்டுவந்த உலகமே தலைகீழாக மாறிவிட்டது.

அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் ஆசிரமத்துக்குப் போனான் அந்த வியாபாரி. புத்தரிடம் நேரடியாகச் சென்று புத்தர் கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டான். தன்னால் அவனை மன்னிக்கவே முடியாதென்றார் புத்தர். என்ன தவறு செய்தாய், மன்னிப்பதற்கு என்று வியாபாரியிடம் கேட்டார். முந்தின தினம் நடந்ததை வியாபாரி நினைவுகூர்ந்தார். “ஓ, அந்த நபர் இப்போது இங்கே இல்லை. நீ அடித்த நபரை நான் எப்போதாவது சந்தித்தால் அவனிடம் நீ மன்னிப்பு கேட்டதாகச் சொல்கிறேன். இப்போது இங்கேயிருக்கும் இந்த நபருக்கு எந்தத் தவறையும் நீ இழைக்கவில்லை.” என்றார் புத்தர்.

எனக்கு அந்த லட்டு வேண்டாம்

ஒரு நாள் புத்தர் வீதியில் பிச்சை எடுத்துச் சென்றபோது ஒரு வீட்டில் அவருக்கு லட்டு ஒன்றை பிச்சையாகப் பாத்திரத்தில் இட்டனர். அதைக் கவனித்த ஒரு சிறுவன் லட்டைப் பார்த்த ஆசையில், “ஹே கௌதமா, அந்த லட்டை எனக்குக் கொடு" என்று கேட்டான். புத்தரோ அவனைத் திரும்பிப் பார்த்து. "குழந்தாய், நான் உனக்கே லட்டைத் தருகிறேன். ஆனால், எனக்கு அந்த லட்டு வேண்டாம் என்று ஒரே ஒருமுறை சொல்" என்றார். அந்தச் சிறுவனும் அவர் சொன்னபடியே செய்தான்.

புத்தரும் அந்தச் சிறுவனுக்கு வாக்குறுதி அளித்தபடி, அந்த லட்டைத் திருப்பித் தந்துவிட்டார். புத்தருக்கும் அந்தச் சிறுவனுக்கும் நடந்த உரையாடலை ஒரு குடும்பஸ்தர் ஒருவர் கண்டார். ஒரு நாளைக்கு ஒரேயொரு முறை தான் புத்தர் பிச்சையெடுப்பார் என்பதையும், இந்த லட்டும் இல்லாமல் போனால், அவர் அன்றைக்குப் பட்டினி கிடக்க நேரிடும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் அந்தச் சிறுவனிடம் சென்று லட்டுக்குப் பதிலாக ஐநூறு பொற் காசுகள் கொடுப்பதாகவும் லட்டைத் திருப்பிக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார். அந்தப் பையன் அதற்குச் சம்மதித்து லட்டையும் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

‘எனக்கு அந்த லட்டு வேண்டாம்’ என்று ஏன் அந்தச் சிறுவனிடம் சொல்லச் சொன்னீர்கள் என்று சீடர்கள் புத்தரிடம் கேட்டனர்.
“பல ஆயிரக்கணக்கான பிறவி களாக, அந்தக் குழந்தை ஆசைகளால் பீடிக்கப்பட்டு அடிமையாகி, மேலும் மேலும் அவற்றை விழைவதில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. பொருட்களைச் சேர்ப்பதில் இருக்கும் கவலையிலிருந்து சில நொடிகள் அவன் நீங்கியிருப்பதற்கு லட்டைக் காட்டியே அவனுக்கு ஆசை காட்டினேன். அவனைப் பற்றிப் பீடிக்கும் உணர்வுகளிலிருந்து சற்றே முன்வந்து முழுதுணர்ந்த அனுபவத்தை அதனால்தான் அவன் பெறமுடிந்தது.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in