

இவ்வுலகம் நேர்த்தியாகவும் நிகரிலியாகவும் திட்டங்கள், தரிச னங்கள், திட்டமின்மைகளால் உரு வாக்கப்பட்டது. ஒழுங்கு, குழப்படி என்ற இரண்டு கயிறுகள் கட்டப்பட்ட ஊஞ்சல் நமது வாழ்வு. பெருவெளியில் பல்வேறு குணமுடைய முகமூடிகளை யாரோ இறைத்துப்போட்டி ருக்கின்றனர்.
தன்னியல்பில் தேர்வுசெய்ய அனுமதிப்பது போல அனுமதித்து தேர்வு செய்வதைப்போல நம்மைத் தேர்வு செய்யவைத்து, அதுவாகவே இயல்பாக மாறும் விசித்திர வரத்தைத் தருவது நாம் வாழும் பூமி. வாதைகள் உண்டு; குணமும் உண்டு; குணமூட்டிகளும் உண்டு. நாம் இணங்குகிறோம் இயக்கப்படுகிறோம். இயங்குகிறோம் என்றும் கருதுகிறோம்.
பேரின்ப பெரும்பேறு கிட்டும் என்று நம்பிக்கை ஊட்டப்பெற்ற மாணிக்கவாசகர், அது எட்டாதபோது வெட்டென மறக்காமல் தன்னைப் பரிசீலிக்கத் தொடங்குகிறார். நூறு பாடல்களைக் கொண்டு அவர் எழுதிய திருச்சதகத்தில் 19 முறை நாயோடு ஒப்பிடுகிறார். நாய், தன்னைப் பேணுபவன், தன்மீது வேலை எறிந்தாலும் வாலைக் குழைக்கும் நன்றியுடையது. சீர்கெட்ட உடலை உண்ணாநோன்பின் மூலம் சீராக்கவல்லது. எனினும் கக்கியதையே நக்கவும் பழகியது.
தனக்கு ஒன்றை ஈயும் தன்மை உடையவர் அல்லது இடத்திலிருப்பவர் எனில் நயந்து செல்வது, எத்தனை முறை தெளிந்தாலும் கீழானவற்றில் செயலாலோ நினைவாலோ தோய்ந்து தோய்ந்து ஆன்மாவைக் களங்கப்படுத்திக் கொள்வது,மேலானவற்றோடு பிணைவதற்கான வழிகளைத் திடமாகப் புறக்கணிப்பது போன்ற மானுடக் குணங்கள் நாயின் குணங்களை ஒத்திருப்பதாக மாணிக்கவாசகர் கருதுகிறார்.
“ஈசனே!நான் உன் நினைவில் திளைத்திருக்க ஊரார் மனக்களிப்பு மிக்கப் பித்தன் இவன் என்று தத்தம் உள்ளக் கருத்திலே தோன்றியவற்றை எல்லாம் ஊர்தோறும் திரிந்து பேசுகிறார்கள். இவர்களது குறைகளுக்காக வருந்தாமல் செருக்கற்று செயலற்று இருப்பது எப்போது” என்று கேட்கிறார்.
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே (திருச்சதகம்:3)
ஆனால் மீண்டும் உன் அடியவர்களுள் பேசப் பட்டேன். இவ்வுலகத்தவரால் ஏசப்பட்டேன். இனி இவ்வுலகில் வாழ்வது இயலாது என்று மரணம் வேண்டி மனம் நலிவதன் காரணம் என்ன?
பேசப் பட்டேன் நின்னடியாரில் திருநீறே
பூசப் பட்டேன் பூதல ராலுன் அடியானென்
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே
(திருச்சதகம்:82)
இவ்வுலகில் நான் ஓர் அங்கம்.போலவே எனக்குள்ளும் எனக்கென்றும் ஓர் உலகம் இருக்கிறது. நான் எதை நினைக்கிறேன்,எதை நினைக்க நிர்பந்திக்கப்படுகிறேன் என்பதில் விழிப்புநிலை வேண்டும். மழை நீரில் கரையும் அழுக்கைப்போல உருகிப் பெருகும் கண்ணீரில் அகமும் புறமும் விளைவிக்கும் அழுக்குகள் கரைய வேண்டும். உண்ணாதிருக்கும் நோன்பை விட இயலாதவர்கள் முயலாதவர்களின் இன்னா சொல் பொறுக்கும் தியாக நலம் வேண்டும்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (குறள்:160)
உய்வதற்குக் காத்திருப்பது நோன்பென்றால் அக்காலத்தில் வாதைகளைச் சகிப்பது பெரும் நோன்பு. ஆன்மவிடுதலையின் சூட்சுமம் பிறரை மாற்றுவதில் இல்லை. தன்னை மாற்றிக்கொள்வதில் உள்ளது.அதைத்தான் மாணிக்கவாசகர், ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்று திருச்சதகத்தில் பாடுகிறார். நாமும் பெறுவோம்.