

இந்த பூதகணம் சிலைக்கு கோமுகம். பசுவின் முகவடிவாக அபிஷேக நீர்விழும் வாய் வடிவமைக்கப் பட்டுள்ளது. நீண்ட, சுருண்ட தலைக் கேசமும், இடையிலும், மார்பிலும் அணிமணிகளும் , கைகளில் வளையும், கால்களில் தண்டையும் சிறப்பு. இடுப்பில் கட்டியிருக்கும் பஞ்சகச்ச வேட்டியும் , அதை பின்புறமாக கொண்டு வந்து சொருகி இருக்கும் கச்சத்தின் பாங்கும் மிகவும் துல்லியம். குப்புறப் படுத்துக்கொண்டு இருப்பதுபோல் காணப்படுகிறது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்த கோவில் , பின்னாளில் விஜய நகர மன்னன் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் விரிவுபடுத்திக் கட்டியுள்ளார். இத்தலத்தின் பெயர் திருவூறல் என்கிற தக்கோலம் ஆகும். இந்தவூர் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சோழன் ராஜாதித்தனுக்கும் ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் எனும் கன்னர தேவனுக்கும் போர் நடைபெற்ற இடம் இது. யானை மேல் இருந்து போரிட்டபோது வீர மரணம் அடைந்தார் ராஜாதித்தன் . இதையே அமரர் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில், தக்கோல பெரும் போராக எழுதியுள்ளார். யானை மேல் துஞ்சிய தேவர் என்று சோழன் ராஜாதித்தன் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார்.