

ஆண்டுதோறும் குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) அன்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளைப் பிடித்தவண்ணம் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியை நினைவுகூருவது அது.
இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேம் நகருக்குச் செல்லும் வழியில் பெத்பகு எனும் ஊரை அடைந்தபோது தனது இரண்டு சீடர்களிடம், “நீங்கள் எதிரே இருக்கும் ஊருக்குள் நுழைந்த உடனே, ஒரு வீட்டின் முன் கழுதை ஒன்று கட்டப்பட்டு இருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். அதன் உரிமையாளரோ, வேறு யாருமோ ஏதாவது கேட்டால், “எங்கள் தலைவர் இயேசுவுக்கு இன்று இது தேவைப்படுகிறது. தேவை முடிந்ததும் இதைத் திரும்பவும் இங்கே கொண்டு வந்து ஒப்படைத்து விடுவோம் எனச் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பினார்.
அவர் சொன்னது போலவே அவர்கள் செய்தனர். அந்தக் கழுதையின் மீது சீடர்கள் தங்கள் மேலாடைகளைப் போட்டு இயேசுவை அமரச் செய்தனர். இயேசு, கழுதையின் மீது அமர்ந்து வர, சீடர்களோடு பெரும் திரளான மக்கள் கூட்டமும் சேர்ந்து அவரை வாழ்த்தி, புகழ்ந்து வரவேற்றனர். துணிகளையும் மரக்கிளைகளையும் அவர் வந்த வழி எங்கும் கம்பளம் போல விரித்து வரவேற்றனர். இந்த மரக்கிளைகளை நினைவூட்டுபவைதான் குருத்தோலைகள்.
இறைத்தந்தையின் இல்லம்
எருசலேம் நகரத்து மக்கள் தன்னை அறிந்து ஏற்றுக் கொள்ளாத சோகத்தை நினைத்து இயேசு அந்த நகரத்தைப் பார்த்து மௌனமாய் அழுதார். பின்பு எருசலேம் பேராலயத்திற்குள்ளே நுழைந்து அங்கே விலங்குகள், பறவைகளை விற்றவர்களையும், நாணயம் மாற்றியவர்களையும் ஆலயத்திலிருந்து துரத்தினார். “இறைவேண்டல் மட்டுமே நிகழ வேண்டிய என் இறைத்தந்தையின் இல்லத்தை திருடர்களின் குகையாக ஆக்காதீர்கள்!” என்று முழங்கினார். பேராலயத்தில் அவர் இருந்தபோது, இயேசுவை அணுகி வந்து, தங்களைக் குணமாக்குமாறு கேட்ட பார்வையற்றோர், நடக்க இயலாத அனைவரையும் அவர் குணமாக்கினார். குணம் பெற்ற அனைவரும் இன்னும் மிகுதியாக இயேசுவை வாழ்த்திப் போற்ற, இதனைக் கண்ட யூதத் தலைவர்களுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது.
‘மன்னர் தாவீதின் வழிமரபில் வரவிருந்த மீட்பரே! வாரும், வந்து எங்களைக் காத்தருளும்! எங்களை மீட்டருளும்!' என்று குரல் உயர்த்தி முழங்கும் கூட்டத்தினரை, அமைதியாக இருக்கச் சொல்லுமாறு யூதத் தலைவர்கள் அவரிடம் கூறினர். இயேசு அதனைப் பொருட்படுத்த வில்லை. அவர்கள் சினம் கொண்டு அவரை ஒழித்துவிடத் திட்டமிட்டு அதற்கான வழிகளைத் தேடினர்.
மக்களுக்கு உணர்த்திய இயேசு
இந்நிகழ்ச்சி நமக்குச் சொல்லும் செய்தி என்னவாக இருக்கலாம்? இத்தகையதொரு நிகழ்ச்சிக்கு என்ன தேவை? மக்களுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்ல இயேசு விரும்பியிருக்கலாம். இயேசுவே நாட்டின் அரசராக வேண்டும் என்று பலர் விரும்பினர். ஒரு முறை அதற்கான முயற்சியையும் செய்தனர். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து விலகி, அவர்களைத் தவிர்த்து விட்டார்.
ஒருவிதத்தில் தான் அரசர் என்பது உண்மைதான் என்றாலும், மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறான அரசர் என்ற உண்மையை இந்நிகழ்ச்சியின் மூலம் இயேசு மக்களுக்கு உணர்த்த நினைத்திருக்கலாம்.
பல்லாண்டுகளுக்கு முன் செக்கரியா எனும் இறைவாக்கினர், “மகளே, எருசலேம், மகிழ்ந்து ஆர்ப்பரி. இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர். எளிமையானவர். கழுதையின் மேல் ஏறி வருகிறார். அவர் தேர்ப்படை, குதிரைப்படைகளை ஒழித்து விடுவார். உலகனைத்துக்கும் அமைதி அறிவிப்பார்” (செக் 9: 9, 10) என்று முன்னுரைத்திருந்தார்.
போருக்குச் செல்லும் போதும் போரில் வென்று திரும்பும்போதும் அரசர்கள் குதிரை மீதமர்ந்து வந்தனர். ஆனால் இயேசு ஒரு கழுதையின் மீது அமர்ந்து வருவதன் மூலம் என்ன சொல்ல விழைந்தார்?
‘நான் உங்களின் நிலத்தை அபகரிக்க வரவில்லை. உங்கள் மனத்தையே தேடி வந்திருக்கிறேன். உங்கள் நாட்டை அல்ல, உங்களின் வாழ்க்கையை ஆள விரும்புகிறேன். எனவே போரையும் பகையையும் அல்ல, நான் அமைதியையே அளிக்க வந்தேன்.’
'எருசலேம் எதிரிகளால் துன்புறும் என்பதைவிட இங்கு வாழும் மக்கள் இறைவனையும் அவர் அனுப்பிய வரையும் ஏற்க மறுக்கின்றனர் என்பதே என் கண்களில் நீரை வரவைக்கிறது. ஆலயத்தை நிர்வகிப்பவர்கள் அல்ல, அதன் தூய்மையையும் நோக்கத்தையும் முறியடிப்பவரே எனக்கு மனத்துயர் ஏற்படுத்துகின்றனர். எனவே நான் அரசன்தான். ஆனால் நீங்கள் அறிந்த அரசர்களைப் போல் அல்ல நான். அவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட அரசன்.
எது முக்கியம்?
‘என்னை வாழ்த்தி வரவேற்கும் நீங்கள் இதைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் மேலாடைகளையும் மரக்கிளைகளையும் என் பாதையில் போட்டு என்னை வரவேற்பதை விட, நான் யார், எத்தகையவன், நான் இவ்வுலகுக்கு கொண்டுவந்த செய்தி என்ன என்பதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வதே எனக்கு முக்கியம்' என்பதே இந்நிகழ்வின் மூலம் இயேசு சொல்ல விரும்பிய செய்தியாக இருக்கலாம்.
அவரைக் கொல்ல விரும்பிய யூதத் தலைவர்களால் கைது செய்யப்பட்டு, ரோமானிய ஆளுநர் பிலாத்துவின் முன்னர் கைதியாக இயேசு நின்றபோது, அவன், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க, இயேசு சொன்னார்: “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாக இருந்திருந்தால், யூதத் தலைவர்கள் என்னைக் கைது செய்வதைத் தடுக்க என் போர் வீர்ர்கள் போராடியிருப்பார்கள்” என்றார் (யோவான் 18: 36).
மக்கள் அவரை அரசனாக்க விரும்பியபோது விலகிச் சென்ற இயேசு, தன் சீடர்களிடம் “உங்களுள் தலைவராக இருக்க விரும்புவோர் அனைவரின் தொண்டராக இருக்க வேண்டும்” என்றார்.
எனவே குருத்தோலைகளைப் பார்க்கும் போதெல்லாம், இயேசு எத்தகைய அரசர், எத்தகைய தலைவர் என்பது நம் நினைவுக்கு வர வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com