

‘இது என் பிறவிக் குணம். இதை நான் மாற்ற இயலாது. கூடப் பிறந்ததை எப்படி மாற்ற முடியும்?' என்று சொல்வார்கள்.
பிறந்து வளர்ந்தபோதெல்லாம் கூடவே இருந்து, இயேசுவின் சீடர்களாக ஆன பிறகும், அவ்வப்போது தலைகாட்டி பயமுறுத்திய சில தீய குணங்களை முழுவதும் விட்டொழித்த இரண்டு முக்கியமான சீடர்களைப் பற்றி வேதாகமம் பேசுகிறது. இவர்கள் ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சகோதரர்கள். மூத்தவரின் பெயர் யாக்கோபு. இளையவரின் பெயர் யோவான். ஆங்கிலத்தில் ஜேம்ஸ், ஜான். இவர்களின் தந்தை மீனவர் செபதேயு. தாய் சலோமி.
செபதேயுவோடு அவரது மகன் கள் இரண்டு பேரும் தங்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண் டிருந்தபோது, இயேசு வந்து நின்று, “என் பின்னே வாருங்கள்!” என்று யாக்கோபையும் யோவானையும் அழைத்தார். அவர்கள் தங்கள் தந்தை யைப் படகில் விட்டுவிட்டு இயேசுவோடு சேர்ந்து அவரின் சீடர்களாக மாறினர்.
இயேசுவைத் தேடிவந்த தாய்
இயேசு விரைவில் அந்நியர்களின் ஆட்சியை அகற்றிவிட்டு, தனது அரசைத் தோற்றுவிப்பார் என்றே பலரும் நம்பினர். அவரது ஆட்சி தொடங்கும்போது தன் மகன்கள் இருவரும் மிக உயர்ந்த பதவிகளில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்களின் தாய் சலோமி ஒருநாள் இயேசுவைத் தேடி வந்தார்.
வந்து இயேசுவைப் பணிந்து, “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவரில் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் மற்றவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டுகிறார். இன்னொரு நற்செய்தியில் இவர்கள் இருவருமே இயேசுவிடம் வந்து இதே வேண்டு கோளை முன் வைக்கின்றனர்.
எதுவாக இருந்தாலும், தாய்க்கும் இரண்டு மகன்களுக்கும் இந்தப் ஆசை இருக்கிறது என்றால் இது அவர்களின் தந்தை செபதேயுவுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே குடும்பமே எதனையோ ஏங்கி எதிர்பார்க்கிறது? இயேசுவின் ஆட்சி தொடங்கும் வேளையில் அவருக்கு அடுத்த இரண்டு உயர்பதவிகள் இவர்கள் இருவருக்கும் வேண்டும்.
பேராசை மட்டுமன்றி, அதோடு கைகோத்துச் செல்லும் இன்னொரு குணமும் இந்த இரண்டு சகோதரர் களுக்கும் இருந்தது. எருசலேம் நோக்கிப் போகும் வழியில் சமாரியா மாநிலத்தில் இருந்த ஒரு ஊரில் இயேசு தங்குவதற்காக அவரது சீடர்கள் ஏற்பாடு செய்யச் சென்றபோது, அந்த ஊர் மக்கள் அவரை வரவேற்க மறுத்தனர்.
அந்த ஊர்க்காரர்கள் இயேசுவை வரவேற்க மறுப்பதைக் கேள்விப் பட்ட இந்த இரு சகோதரர் களுக்கும் கடும் கோபம் வந்தது. இயேசுவிடம் வந்து “வானத்திலிருந்து நெருப்பு வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்கின்றனர். இயேசுவுக்கு ஒரு நாள் தங்க இடம் தர மறுத்ததற்காக அந்த ஊரையும் அதன் மக்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு இந்த இருவருக்கும் கோபம் வருகிறது.
இன்னொரு சமயம் இயேசுவின் சீடராக இல்லாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, யோவான் இயேசுவிடம் வந்து, “அவரை நாங்கள் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்கிறார்.
இதனால்தானோ என்னவோ இவர்கள் இருவருக்கும் இயேசு ‘இடியின் மக்கள்' எனப் பட்டப் பெயர் சூட்டுகிறார்.
இப்படி பேராசை, பெரும் கோபம், இரக்கமில்லாமை போன்ற குணங்கள் கொண்ட இந்த இரு சகோதரர்களையும் இயேசு நிராகரிக்கவில்லை. அவர் களைத் தனது முக்கிய மூன்று சீடர்களில் இருவர் ஆக்கி, அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியதைக் கற்பித்து, கடிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் கடிந்துகொண்டு, அவர்களை மெல்ல மெல்ல மாற்றினார்.
மாறும் அற்புதம்
மனிதர்கள் நாம் உண்மையிலேயே மாறுவது எப்போது? நம்மிடம் உள்ள தீமைகளைப் பார்த்து நம்மை வெறுத்து ஒதுக்காமல், ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அன்பு செய்யும் நபர் ஒருவர் நம் வாழ்வில் இருந்தால் நாம் மாறுவோம். நிபந்தனையின்றி நம்மை அன்பு செய்து அக்கறையோடு அவர் நம்மிடம் உள்ள தீமையை, நம் மனத்தில் உள்ள இருளை இதமாகச் சுட்டிக்காட்டி, கடிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் சிறிது கடுமை காட்டி, “நீ கேட்பது நியாய மில்லை. நீ நினைப்பது சரியல்ல. அதை நீ விட்டுவிட்டு இப்படி வாழ வேண்டும்” என்று அன்போடு அறிவுறுத்தினால், நாம் மாறி முற்றிலும் புதிய மனிதர்களாக வாழும் அற்புதம் நிகழும்.
இந்த இரண்டு சகோதரர்களின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. ‘என்னிலிருந்த தீய குணங்களுக்காக என்னை இயேசு வெறுக்கவில்லை. மாறாக என் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார்’ என்பது யோவானுக்கு விரைவில் புரிந்தது. அது புரிந்ததால் பெருமிதத்தோடு தன்னை 'நேசத்துக்குரிய சீடர்' (beloved disciple) என்று குறிப்பிட்டார். யோவானும் யாக்கோபும் பேதுருவும் இயேசுவின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளில் உடன் இருந்திருக்கின்றனர்.
பிறவிக் குணங்கள் எல்லாம் போய் ஒழிந்து, எந்த அளவுக்கு தியாகமும் வீரமும் கலந்த பேரன்பு கொண்டவராக யோவான் மாறினார் என்பதை கல்வாரி மலையில் நிகழ்ந்த நிகழ்ச்சி நமக்குக் காட்டுகிறது. இயேசுவின் பகைவர்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி, சிலுவையில் அறைந்தபோது சிலுவையின் அடியில் நின்ற அவரது ஒரே சீடர் யோவான்தான். கணவர் இறந்து விட்டதால் விதவை ஆகிவிட்ட தனது தாயைத் தனிமரமாக விட்டுவிட்டுப் போகிறோமே என்பதை உணர்ந்து இயேசு தன் தாயைக் கண்காணிக்கும் பொறுப்பை யோவானிடமே தருகிறார். துன்புற்றுத் துடித்த அந்த வேளையில் சிலுவையில் இருந்தே யோவானைப் பார்த்து, தன் தாயைக் காட்டி, “இதோ உன் தாய்!” என்கிறார்.
யாக்கோபும் மாறினார். இயேசுவின் நற்செய்தியை அறிவித்து அவரின் சீடர்கள் உருவாக்கிய ஆதித் திருச்சபை யில் முக்கியமானதொரு தலைவராக யாக்கோபு விளங்கினார். தன் உயிரையே தியாகம் செய்யுமளவுக்கு இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார்.
நம் குறைகளைக் கண்டு நம்மை நிராகரிக்காமல் நம்மை ஏற்று அன்பு செய்து, புண்படுத்தாமல் நம்மைப் பண்படுத்தும் நல்லோர் நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இறைவன் நம் மீது கொண்ட பேரன்பை உணர்ந்து மறைநூலில் உள்ள அறிவுரைகளைப் பின்பற்றினால் நாமும் மாறலாம்.
மாற்றவே முடியாத கூடப் பிறந்த குணங்கள் என்று சொல்லி, தீமை நம்மில் நிரந்தரமாகக் குடியிருக்க விடாமல், இந்த இரு சகோதரர்களைப் போல அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு முற்றிலும் மாறிய மனிதர்களாக நாமும் நல்வாழ்வு வாழ முடியும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com