

கண்டேன் சீதையை' என்று அனைவரும் மகிழும் வண்ணம் பட்டவர்த்தனமாகக் கூறிய அனுமன், அன்னை சீதாதேவி, ராமனிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று சொன்ன செய்தியை, அனுமன் ராமச்சந்திரன் மட்டுமே அறியும் வண்ணம் அவரது காதருகே சென்று பவ்வியமாக, அங்க அசைவுகளுடன் கூறும் அழகிய காட்சியே இங்கு சிற்பமாக உருவாகியுள்ளது. அனுமன், சீதையைப் பற்றி கூறிய செய்திகளை கேட்டதும் ராமபிரான் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும், கண்களில் காணும் மகிழ்ச்சியையும், அதேபோல் அனுமனின் முகத்திலும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும், துல்லியமாக அந்தப் பெயர் தெரியாத கலைஞன் காட்டியுள்ளார்.
ஸ்ரீ ராமபிரான் அமர்ந்திருக்கும் கோலமும், ராமன் மட்டுமே அறிய வேண்டும் என்பதற்காக, அவரது காதருகே சென்று பவ்வியமாகக் கூற முயற்சிக்க, உயரம் எட்டவில்லை என்பதால் ராவணன் சபையில் தனது வாலால் தானே சிம்மாசனம் அமைத்து கொண்டது போல் இங்கும் தனது வாலால் ஆசனம் அமைத்து அதன்மேல் நின்றுகொண்டு ராமன் காதருகே சொல்லும் விதம் அழகு. சாதாரணமான ஆடை அணிமணிகள் மற்றும் கிரீடம் சிறப்பாக உள்ளன. இந்தச் சிற்பம், மன்னர் திருமலை நாயக்கரின் சகோதரரான அளகாத்திரி நாயக்கன் திருப்பணி செய்த, கொங்கு நாட்டு திருத்தலமான கோவை அருகே உள்ள திருப்பேரூர் ஆலயத்தின் நடன மண்டபத் தூண் ஒன்றில் ஒரு அடி உயரத்தில் காணப்படுகிறது.