

(வைணவ இலக்கியத்தில் அதிகம் அறியப்படாத ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ சரணாகதியின் பெருமையையும் பக்தி, சிரத்தை, கைமாறு கருதாத கைங்கரியம், பொறுமை, அர்ப்பணிப்பின் பெரும்பலனையும் எல்லாரும் உணருமாறு சொல்லும் அரும்படைப்பு இது. இடையர் குலத்தில் பிறந்து, கதியில்லாமல் திருக்கோளூரை விட்டுச் செல்லும் வழியில் ராமாநுஜரைப் பார்க்கிறாள் பெண்பிள்ளை. அவளிடம் ஊரின் பெருமையைச் சொல்லி நீ இப்படிப் போகலாமா? அவசியம் உண்டா? என்று கேட்கிறார் ராமாநுஜர். கேள்வி கேட்பவர் ராமாநுஜர் என்று அறியாமல் தனது இயலாமையைக் கூறுவது போல, திருக்கோளூர் பெண்பிள்ளை அவளைப் பிரமிக்க வைத்த கடவுளின் அற்புத விஷயங்களை எண்பத்தொரு வாக்கியங்களாக உரைக்கிறாள். ‘பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்’ என்னும் நூலில் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்’ என்ற பெயரில் உள்ள இந்த 81 கதைகளை ஆனந்த ஜோதி இணைப்பிதழில் தொடர்ந்து எழுதியபோது அபூர்வமான ஆதரவை வாசகர்கள் மத்தியில் இந்தச் சிறுதொடர் ஏற்படுத்தியதை அவர்கள் எழுதிய கடிதங்களின் மூலம் உணர்ந்தேன். எளிய அந்தப் பெண்பிள்ளை காட்டும் ரகசியங்கள் நம்முடன் எப்போதும் உடன்வரட்டும்.
- உஷாதேவி)
திருவகீந்தபுரம் என்னும் ஊரில் வில்லிபுத்தூர் பகவர் என்ற வைணவர் வாழ்ந்து வந்தார். அங்கே உள்ள ஆற்றின் படித்துறையில் ஊர் மக்கள் இறங்கித் தத்தமது கடமைகளைச் செய்துகொண்டிருந்தனர். பகவர், வேறொரு படித்துறைக்குப் போனார். அதைப் பார்த்த பிராமணர் ஒருவர், பகவரிடம் ஏன் தனியாக இன்னொரு படித்துறைக்குப் போகிறீர் என்று கேட்கிறார்.
சந்தி, மாத்யாநிகம், சாயம், சந்த்யை என்று தர்மத்தை உத்தேசித்து அனுஷ்டானங்களைச் செய்பவர்கள் என்று கேள்வி கேட்டவரின் பின்னணியைக் குறிப்பிட்டு, தம்மைப் போன்ற ராமாநுஜ தாசர்களோ பயனை எதிர்பார்க்காமல் பகவத் கைங்கரியமாக, பகவான் உகப்புக்காக, பகவான் முகோல்லாசத்துக்காக மட்டுமே நியமனம் செய்பவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
இப்படி நித்திய அனுஷ்டானத்தில் பகவத் விஷயத்தின் வித்யாசத்தைத் தெரியாதவளாக இருக்கிறேனே என்று சொல்லி புலம்புகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
ராமாநுஜர், தனது சீடர்களை அழைத்து, திருக்கோளூர் பெண்பிள்ளை இருக்கும் வீட்டைக் கேட்டு தளிகைக்கு வேண்டிய திரவியங்களை வாங்கித்தருமாறு கூறுகிறார். திருக்கோளூர் பெண்பிள்ளை வீட்டில் அமுது சுவீகரிக்கவும் போகிறேன் என்று கூறி, அவளிடம், ‘அடி பெண்ணே! நான் ஆளவந்தார் சிஷ்யன் ராமாநுஜன்’ என்று கூறினார்.
ஆஹா! காரேய் கருணை ராமாநுஜரா! அவரிடத்திலா அடியாள் இவற்றையெல்லாம் பேசினேன். அஹோ பாக்கியம் என்று ஆனந்தம் அடைந்து, தான் பெற்ற கிருபையை நினைத்து உருகினாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
ராமாநுஜர் போன்ற மகானின் தரிசனத்தைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் திருக்கோளூர் பெண்பிள்ளை அவரோடு சம்வாதம் செய்த பாக்கியத்தையும் பெறுகிறாள். இப்படி பகவத் பாகவத அனுபவங்களையும் கிட்டச் செய்தார். ராமாநுஜருடைய வரத்தால் ஊரைவிட்டுப் போக இருந்த திருக்கோளூர் பெண்பிள்ளை, அங்கேயே வாழ்ந்து மறைந்தாள்.
(ரகசியம் நிறைந்தது)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com