

புதிதான ஓர் இடத்துக்கு புதியதொரு பணிக்காகச் செல்லும் மகனுக்கோ மகளுக்கோ, பெற்றோர் ஆழ்ந்த அக்கறையோடு பல அறிவுரைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம்.
தமது சீடர்களில் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, இருவர் இருவராக, அவர்களை வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பும் முன்பு, இயேசு அவர்களிடம் சொன்னவற்றில் சில நம் அனைவருக்கும் நலம் பயக்கும் குணம்கொண்டவை.
வெவ்வேறு ஊர்களுக்குப் பணியாற்றச் செல்லவிருக்கும் சீடர்களிடம், “கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்” என்றார் இயேசு. ‘இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட ஆற்றல்களைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யும்போது அதை வணிகமாக்கி விடாதீர்கள். நோயுற்றோருக்குக் குணமளிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி குணம் அளிப்பதன் மூலம் அவர்கள் நோயினால் இதுவரை பட்ட துன்பத்தில் இருந்து அவர்களை விடுவியுங்கள். ஆனால் அதற்காக பணம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள். கொடையாகப் பெற்றதைக் கொடையாகவே வழங்குங்கள்' என்றுதான் இயேசு சொல்ல விழைந்தார்.
காசு எதுவும் எதிர்பார்க்காமல் நற்பணி செய்தால் சீடர்கள் உண்பது எப்படி? அவர்கள் செய்யும் நற்பணிகளைப் பார்க்கும் மக்களே அவர்களுக்கு உணவளிப்பார்கள். “வேலையாள் தான் செய்யும் வேலைக்கு ஈடாக உணவு பெற உரிமையுடையவரே” என்றார் இயேசு.
இயேசு சொல்ல வருவது
“நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள்” என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொன்னார். அதாவது எந்த வீட்டில் தங்குவது என்பதைத் தீர்மானிக்கும் முன்னர் யார் தகுதியுடையவர் என்று விசாரித்து அறியுங்கள் என்றார் அவர்.
தீர விசாரிக்காமல் தவறான நபரோடு தங்க நேரிட்டால் நாம் அங்கு தங்கும் நாட்களில் நம் மகிழ்வை, நிம்மதியைக் கெடுக்கும் பல காரியங்கள் நிகழலாம்.
‘உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள்' என்கிறாரே இயேசு, இந்தத் தகுதி என்பது என்ன? நாம் அங்கே அவர் இல்லத்தில் தங்க வேண்டும் என்ற விருப்பம்தான் முதல் தகுதி. ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்று நம் முன்னோர் சொன்னது இதற்காகத்தான்.
விருந்துக்கு அழைக்கப்பட்ட தனக்கு அழைத்தவர் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறிய சீமோன் என்ற பரிசேயரிடம் இவற்றை ஏமாற்றத்தோடு, வருத்தத்தோடு இயேசு சுட்டிக்காட்டியது ஒருமுறை நடந்தது.
பரஸ்பரம் விருந்தோம்புங்கள்
எனவே மனம் கோணாமல், முகம் கோணாமல் நம்மை இன்முகத்துடன் வரவேற்று, நம் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குத் தாராள குணம் கொண்டவராக, விருந்தோம்பும் பண்பு கொண்டவராக அவர் இருப்பது அவசியம். “முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் விருந்தோம்புங்கள்” என்று இயேசுவின் தலைமைச் சீடரான பேதுருவும், “அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள்” (எபிரேயர் 13:2) என்று இயேசுவின் நற்செய்தியை பிற நாடுகளுக்குக் கொண்டு சென்ற பவுலடியாரும் சொன்னது குறிப்பிடத்தக்கது.
யாருடன் தங்குகிறோமோ அவர் நம்மை மதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல அவர் மக்களால் மதிக்கப்படும் நபராக இருப்பதும் முக்கியம். உண்மையில் நல்லவர்கள்தான் உண்மையாக, உளமார மதிக்கப்படுவர். எனவே நல்லவர்கள், நற்பண்புடையவர்களே நம்மை ஏற்கும் தகுதி உடையோர்.
“எந்த வீட்டில் தங்கினாலும் வீட்டுக்குள் நுழையும்போதே வீட்டார் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள்” என்றும் இயேசு சொன்னார். ‘ஷலோம்' என்ற எபிரேய மொழிச் சொல்லைக் கூறியே யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தினார்கள். அமைதி, நிறைவு, முழுமை, செழுமை, வளமை, நலம் என்று பல்வேறு பொருள் கொண்ட செறிவான, அரிய சொல் அது.
நமக்கு என்ன கேட்கத் தோன்றலாம்? ‘சரி, கேட்டு விசாரித்து, நல்லவர் என்று நம்பிப் போய் அவர் வீட்டில் தங்கிய பிறகே, அவர் எவ்விதத்திலும் தகுதியற்றவர் என்பது தெரிய வந்தால் என்ன செய்வது? இயேசு சொன்னார், ‘அந்நேரமே அனைத்தையும் உதறிவிட்டு, உங்கள் பாதங்களில் படிந்துள்ள தூசியைக்கூட உதறிவிட்டு, கிளம்பி விடுங்கள். மற்ற யாவையும் இறைவன் பார்த்துக் கொள்வார்.'
அப்படியானால் நாங்கள் கூறிய வாழ்த்து? ‘அவர் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்த்து பயனுள்ளதாக அமையும். நீங்கள் வாழ்த்தியபடி நிகழும். இல்லாவிட்டால் சென்ற இடம் சரியில்லை என்று உங்கள் வாழ்த்தும் உங்களிடமே திரும்பி விடும்.'
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com