

இந்த முனிவர் வித்தியாசமான கோலத்தில் ஜடாமுடியுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இவர் உக்கிரமாகத் தவம் செய்கிறார் போலும், அதனால்தானோ என்னவோ ஜடாமுடியானது, யாகக்குண்டத்தில் பூரணாகுதி செய்து, நெய் ஊற்றிய பின் எழும் அக்னி ஜுவாலைகளைப் போன்று காட்சியளிக்கிறது.
இவர் வலது கரத்தில் ஜபமாலையையும், இடது கரத்தில் கமண்டலத்தையும் வைத்திருக்கிறார். இரண்டு கால்களையும் சேர்த்துச் சுற்றி யோகப்பட்டம் தரித்திருக்கிறார். ஒருவேளை இவர் விஸ்வாமித்திரராக இருப்பாரோ? சத்திரியனாக இருந்து, உக்கிரமாகத் தவம் செய்து பிரம்ம ரிஷி என்ற பட்டம் பெற்றவர் விஸ்வாமித்திரர்.
இப்படி அமர்ந்த நிலையில் யோகப்பட்டம் தரித்தபடி, விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, நரசிம்மர், ஐயப்பன் போன்ற தெய்வங்கள் அருள்பாலிப்பார்கள். இப்படி யோகப்பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் நிலைக்கு ஹரிவராஸனம் என்று பெயர். இவருடைய கழுத்தில் ருத்திராக்ஷமும், மணிகளால் ஆன ஆபரணமும், முப்புரிநூலும் அணிந்துள்ளார். தோள்களில் வளையும், கைகளில் கங்கணமும், இடுப்பில் பட்டையும், கால்களில் தண்டையும், சிலம்பும் அணிந்துள்ளார். இவரது இரண்டு தோள்களிலும் உள்ள மலர்களைப் பார்க்கும்போது நாயக்க மன்னர்கள் காலத்திய சிற்பங்களை நினைவூட்டுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் ஒரு தூணில் ஒன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். விநாயர் சந்நிதி, முருகன் சந்நிதி, நந்தி தேவர் மற்றும் நந்தி மண்டபம் முதலியவை, பிற்காலத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவையாகும்.