

எம்பார் என்பவா் ராமாநுஜருடைய சிற்றன்னையின் மகன். பெயர் கோவிந்தபட்டர். இளையாழ்வாரை யாதவப் பிரகாசர் செய்த சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றியவர் இவர்தான். காளஹஸ்தி கோயிலை நிர்வாகம் செய்தவர்.
ராமாநுஜரும் கோவிந்தபட்டரும் அண்ணன் தம்பியாக தன் தாய் மாமனான பெரிய திருமலைநம்பிக்கு, திருமலை திருப்பதியில் கைங்கரியத்திற்கு உதவியாக இருந்தனர். இருவரும் பெரிய திருமலை நம்பியிடம் ராமாயண கதாகாலட்சேபங்களை, சுமார் ஒரு வருட காலம் கேட்டார்கள். ராமாநுஜர், தன் தம்பியான கோவிந்தபட்டர் செய்யும் கைங்கரியங்களை தவறாமல் கவனித்தார். அவரின் தொண்டின் சிறப்பைப் பார்த்து ஆனந்தப்படுவார்.
தோட்டம் அமைப்பது, மலர் பறிப்பது, நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை திருமலையைச் சுற்றி செய்துகொண்டே இருப்பார். ஒருநாள் குளத்தில் நீர் எடுத்து வரும்போது வழியில் நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டிருப்பதைப் பார்த்து குடத்தைக் கீழே வைத்துவிட்டு பாம்பை நெருங்கிப் பரிசோதித்தார். பாம்பின் வாயில் முள் குத்தியிருப்பதைக் கண்டார். உடனடியாக பாம்பைப் பிடித்து அதன் வாயில் உள்ள முள்ளை எடுத்தார். அங்கே அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ராமாநுஜர் என்னவென்று வினவினார். பாம்பின் நாக்கில் முள் தைத்து அதனால் வாயை மூட முடியவில்லையென்றும், அந்த உயிரின் துக்கத்தைத் தீர்க்க அதைப் பிடித்து முள்ளை எடுத்தேன் என்று பகன்றார். என்ன அபரிமிதமான தயை உனக்கு என்று ராமாநுஜர் கொண்டாடினார்.
எம்பாரின் கருணை உள்ளம் தன்னலம் கருதாமல் நாகத்தின் வலியைப் போக்கியது. சகல சீவராசிகளிடமும் இப்படிப்பட்ட காருண்யம் உடையவளாக பரம சாத்விகப் புத்தியுடன் பரமஹம்சராக விளங்கிய எம்பாரைப் போல அடியாள் இல்லையே சுவாமி என்று அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ராமாநுஜரிடமே புலம்பி அழுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com