

ஆந்திராவில் தரிகொண்டா என்னும் கிராமத்தில் பிறந்த மாத்ருஸ்ரீ வேங்கமாம்பாவுக்கும் தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் உள்ள ஒற்றுமைகள் வியக்க வைப்பவை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தந்தையின் மடியில் சிறுமியாய் கண் மலர்ந்தபோதே கண்ணனைக் கனவாய் ஆண்டாள் கண்டாள். குழந்தைமையில் உண்டான இத்தகைய குறும்பு, பின்னாளில் பருவம் எய்தியபோது எழுந்த தீர்மானத்தின் முன் நிழலாய் அவள்மீது படிந்துவிட்டது. அவள் இயற்றிய பாசுரங்கள் தமிழில் காதலாகிக் கசிந்தன. தமிழின் தனிப்பெருங்கவியாக உயர்ந்து இன்றும் நிற்கிறாள்.
இதுவே வேங்கமாம்பாவுக்கும் நிகழ்ந்தது. ஒரே ஒரு வேறுபாடு அறியாப் பருவத்திலேயே அவரும் திருமலை வேங்கடவனை, தனது காதல் கணவனாய் வரித்துக் கொண்டாள். தனக்கு பால்ய விவாகம் நடந்ததே தெரியாமல் அவள் வேங்கடவன் நினைவிலேயே மூழ்கிவிட்டாள். கணவரின் பெயரும் வேங்கடாசலபதிதான். வெகுவிரைவிலேயே கணவனை இழந்து பால்யத்திலேயே விதவையாக ஆனார். ஆனாலும், மாங்கல்யத்தையும் மஞ்சள் குங்குமத்தையும் அகற்றவில்லை. அவள் கணவன் அந்த வேங்கடவனே என்கிறபோது அவள் விதவைக் கோலம் பூணுவதாவது? வேங்கமாம்பா தெலுங்கு மொழியில் வேங்கடவன் மீது இயற்றிய பாசுரங்கள் தெவிட்டாத பக்தியும் காதலும் ஒன்றாய்க் கூடிய தித்திப்பாகும். ஆந்திராவில் அவர் பாடல்கள் பாடியோர் நாவிலும் மனதிலும் இந்தத் தித்திப்பு கரைந்தது.
திருமலையில் குடியேறியவர்
வேங்கடவன் மீது கொண்ட காதலால் திருமலையிலேயே குடியேறினார் வேங்கமாம்பா. அங்கிருந்த அன்னமாச்சாரியாரின் வாரிசுகள் அவரை வரவேற்றனர். தினமும் கோயிலில் நடை சாத்தியவுடன் வேங்கடவன் முன்னர் பாடுவது இவர் வழக்கம். ஒரு சமயம் திருவேங்கடவனின் நகை காணாமல் போய்விட்டது.
வேங்கமாம்பாவின் மீது பழி விழுந்தது. வேங்கமாம்பா கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை விதித்து விட்டனர். தடை விதித்தோடு நிற்கவில்லை. அவரைச் சற்று தொலைவில் இருந்த தும்புரு குகையில் கொண்டுபோய் அடைத்தனர். வேங்கமாம்பாவின் வயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய ஏக்கமும் அழுகையும் பாசுரங்களாக வெளிப்பட்டன. பாசுரங்களுக்கு முன்னால் பாறைகள் தெறித்து விழுந்தன. தும்புருக் குகையில் இருந்து சுரங்கப்பாதை உருவாகி வேங்கடவன் கருவறைக்கே அவரைக் கொண்டு சென்றன. ஆறு வருடங்கள் இத்தகைய வழிபாடு தொடர்ந்தது. வேங்கமாம்பாளின் வழிபாடு நடப்பதை அங்கே சிதறிக் கிடந்த முத்துகள் காட்டிக் கொடுத்தன. ஆம் தமது வழிபாட்டில் முத்துக்களை காணிக்கையாகச் சமர்ப்பிப்பது இவர் வழக்கம்.
திருவேங்கடவன் அருள் அன்றி இவ்வாறு சுரங்கவழி வந்து வழிபாடு நடத்துவது இயலாது என்பதை திருமலை வேங்கடவனுக்குச் சேவை செய்யும் பட்டர்கள் உணர்ந்தனர். வேங்கமாம்பாளை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வந்து ஏகாந்தசேவை செய்ய அனுமதித்தனர். நடை சாத்துவதற்கு முன் செய்யப்படும் ஏகாந்த சேவையில் மீண்டும் எல்லோரும் கேட்கும்படியாக இவர் பாடல் ஒலித்தது. கற்பூர ஆரத்தியில் மின்னிய திருவேங்கடவன் இதழ்களில் புதியதோர் புன்னகை பூத்தது. ஏகாந்த சேவையில் வேங்கமாம்பாளின் பாடல்களுடன் கற்பூர ஆரத்தி இன்றளவும் நடைபெறுகிறது. இது வேங்கமாம்பாள் கற்பூர ஆரத்தி என்றே அழைக்கப்படுகிறது.
திருமலையில் அன்னதானத்தைத் தொடங்கியவர்
தும்புரு குகையிலிருந்து திருமலைக்கு வந்தவுடன் வேங்கமாம்பா விஷ்ணு பாரிஜாதம், செஞ்சுநாடகம் ஸ்ரீ பாகவதம், வசிஷ்ட ராமாயணம் முதலான பக்திப் பனுவல்களை இயற்றினார். வேங்கமாம்பாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு 2009-ல் வெளிவந்தது. வேங்கமாம்பாவின் கிருதிகளுக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இத்திரைப்படமும் வேங்கமாம்பா பற்றிய தொலைக்காட்சித் தொடரும் ஆந்திர மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. தமிழிலும் வேங்கமாம்பா என்ற பெயரில் திரைப்படம் (2014) வெளி வந்துள்ளது. தரிகொண்ட வேங்கமாம்பாவின் கீர்த்தனைகள் ‘பாவ’த்தோடும் இனிமையாகவும் பாடப்பட்டு அவை ஒளி ஒலிப் பேழைகளாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் ராதை கோபிகைகளிடம் கண்ணன் செய்த குறும்புகளை விவரிக்கின்றன.
இது, ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துப் பாடுவதோடு ஒப்பு நோக்கத்தக்கது. ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் இறைபக்தியை அரங்கன் மீதான காதல்ரசம் சொட்டும் பாடல்களாகப் பாடியிருப்பதைக் காணலாம். திருப்பதியில் முதல்முதலாக அன்னதானத்தைத் தொடங்கி நடத்திய பெருமை வேங்கமாம்பாளுக்கு உண்டு. 230 ஆண்டுகளுக்கு முன்பே வசதிகள் அற்ற சூழலில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க வேங்கமாம்பாள் முற்பட்டார்.
இன்று திருமலையில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய அன்னதானக் கூடத்துக்கு மாத்ருஸ்ரீ வேங்கமாம்பாள் அன்னதானக் கூடம் என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.
தரிகொண்ட வேங்கமாம்பாளின் பெயரும் உருவமும் பொறித்த பிரத்யேகத் தபால்தலையை வெளியிட்டு அரசு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com