

புராதனக் குன்று புராதன மரம்
நெசவாளி அந்த மலையின் உச்சியில் உள்ள, அந்த மலையைப் போலவே முதிர்ந்த மரத்தின் கீழே அமர்ந்து நெய்துகொண்டிருந்தான். நெசவுப் படைப்பில் அவன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தான். நெசவின் வழியாக, படைப்புக்கு சாராம்சத்தையும் தரத்தையும் செயலையும் நேசத்தையும் உறவையும் அந்தஸ்தையும் நடத்தைகளையும் இடத்தையும் காலத்தையும் வழங்கிக் கொண்டிருந்தான்.
நடப்பது எல்லாவற்றையும் அந்த நெசவாளியால் பார்ப்பதற்கு முடிந்தது. எல்லா காலங்களின் சத்தங்களையும் குரல்களையும் அவனால் கேட்க முடிந்தது. அவன் தனது உதடுகளை அசைக்காமலேயே கிசுகிசுத்தான். எந்த வார்த்தையை அவன் கிசுகிசுத்தான்? எந்த வார்த்தை ஊமையைப் பேச வைக்கிறது? எந்த வார்த்தை காது கேளாதவனைக் கேட்க வைக்கிறது? எந்த வார்த்தை பார்க்க இயலாதவரைப் பார்க்க வைக்கிறது?
உலகில் வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும் வார்த்தையை நெசவாளி கிசுகிசுக்கிறான். அந்த வார்த்தை உங்கள் விதியை நிர்ணயிக்கிறது. அந்த வார்த்தை உங்களை நேசத்தில் வீழ்த்துகிறது.
ஆதியில் பேசப்பட்ட அந்த வார்த்தைதான் காலத்தின் அந்தத்திலும் உச்சரிக்கப்படும்.
உன்னிடமிருந்தே வருகிறது
ஒரு இளைஞன், ஞானியின் அருகில் அமர்ந்து கடவுளின் திருநாமங்கள் பலவற்றை உச்சரித்துக்கொண்டிருந்தான். ஞானி அவனைப் பார்த்துச் சொன்னார். “நீ இன்னமும் பக்குவம் அடையவில்லை. கடவுளுக்கு உண்மையாகப் பெயர்கள் இல்லை. நீ உச்சரிக்கும் பெயர் எதுவும் அவன் இல்லை. அது உன்னிடமிருந்து வருகிறது. அவனிடமிருந்து அல்ல.