

காசியில் சிங்கன் என்னும் பெயருடைய நாராயண பக்தன் வாழ்ந்துவந்தான். அவன் ஒரு நீச்சல் வீரன். அவனுக்கு அன்றன்று மலர்ந்த தாமரை மலர்கள் மீது அதிகம் விருப்பம். அந்த மலர்களைத் தேடிச் சென்று பறித்து விஷ்ணு பகவானுக்குச் சூட்டுவதை தன் நித்திய பூசையாகக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நீர்நிலையிலும் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் நீந்திச் சென்று மலர் கொய்வான். காசியைச் சுற்றியுள்ள நீர்நிலையில் உள்ள பூக்களைப் பறிக்க தாமரைக் கொடியினைப் பற்றி வேகமாக நீந்திச் செல்வான். நாளுக்கு நாள் தனது நீச்சல் திறமை குறித்த அகம்பாவம் மேலோங்கி தற்பெருமை கொண்டவனாக, ஆழமான கங்கை நதியில் இக்கரையிலிருந்து அக்கரை செல்ல பந்தயம் வைத்துக்கொண்டு பலருடன் நீச்சல் விளையாட்டில் இறங்கினான்.
கங்காதேவி அத்தனைப் பேர் பாவங்களையும் அழுக்குகளையும் இறந்த சடலங்களையும் சுமந்து இம்மண்ணுலகைத் தூய்மை செய்பவள்; தன் வற்றாத கருணையினால் பூமியெங்கும் வளங்கொழிக்கச் செய்கிறாள். மனிதர்கள் கொள்ளும் கர்வத்தையும் அழிக்க முடிவுசெய்தாள். நதியில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டு சுழல் வந்தது. சிங்கனை அந்த வெள்ளம் ஆழத்தில் சுழலில் அழுத்தியது. தன்னுடைய வலிமையையும் தைரியத்தையும் பற்றாகக் கொண்டு சிங்கன் கங்கையுடன் போராடினான். ஆனால் அவனால் வெளியேறி நீந்தி வரமுடியவில்லை. தான் கொண்டிருந்த அகம்பாவம் தவறு என்பதை உணரத் துவங்கினான்.
“நாராயணா என் மணிவண்ணா, நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய்” என்று மனமுருகிப் பிரார்த்தித்தான்.
சுழல் மெதுமெதுவாக நின்றது. சிங்கன் சுழலிலிருந்து விடுபட்டு கரைசேர்ந்தான். அவன் கண்களில் ஆனந்தம் பெருக, தாமரை மலர்களைப் பறித்து பெருமாள் திருவடிகளில் இட்டு வணங்கினான்.
இப்படி சிங்கனைப் போல ஒரு புஷ்ப கைங்கரியத்திலேகூட ருசி இல்லாதவளாக அடியாள் இருக்கிறேனே என்று விதவிதமான மாலைகள் கட்டி பகவானுக்கு சாற்றி அழகு பார்க்கும் அந்த ராமாநுஜரிடமே தன்னுடைய குறையைக் கூறி வருத்தப்படுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com