அகத்தைத் தேடி 62: உடம்பை அல்ல,உயிரைச் சிங்காரிக்கவும்!

அகத்தைத் தேடி 62: உடம்பை அல்ல,உயிரைச் சிங்காரிக்கவும்!
Updated on
2 min read

ராமநாதபுரம் கடலோரம் மணல்வெளியில் திக்குத் தெரியாமல் அலைந்து திரிந்தான் ஒரு சிறுவன். அவனைச் சுற்றிலும் பனை விடலிகள் கூச்சலிட்டன. தன் வறுமையைப் போக்கிக்கொள்ள சிறுவயதிலேயே பனைமரங்களில் ஏறி பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட நேர்ந்தது. மேலே ஆகாயம்; கண்ணுக்கெட்டிய தொலைவில் வங்கக் கடல். பார்வை படும் இடமெல்லாம் மணல், மணல். எதிர்காலம் கானல்நீராய் ஏச்சுக்காட்டியது. பசிப்பிணி நீக்க பனையேறிய சிறுவனின் பிறவிப் பிணி நீக்க பிரபஞ்சப் பேராற்றல் திருவுளம் பற்றியது. சிறுவனை சித்ரமுத்து அடிகளாக ஆக்கியது. தன் பசிநீக்க வழியறியாது தவித்த அவனை உலகத்தோரின் பசி நீக்க உத்தரவிட்டது.

இவர் பிறந்த உடனேயே குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு தாயார் கருப்பாயம்மா வீட்டை விட்டு வெளியேறியபோது குடியிருந்த குடிசை பற்றி எரிந்தது.

குழந்தையுடன் உறவினர்கள் குடியிருந்த பக்கத்து ஊருக்குள் நுழைந்தபோது அங்கிருந்த குடிசைகள் பற்றி எரிந்தன. ஊரார் குழந்தையை 'சித்திரைச் சுழியன்' என்ற அவப்பெயரிட்டு அழைத்தனர். போகுமிடம் எல்லாம் எரிக்கின்ற சுழி அமைப்பு கொண்டவன் என்று சுட்டிய அப்பெயரை எனக்குப் பிறந்த முத்து அவன் என்று கூறி 'சித்ரமுத்து' என்றே பெயரிட்டார் அவன் தாய்.

சைதன்யக் காட்சி

பாட்டியின் இல்லத்தில் இருந்தபடி வடதிசை நோக்கி ஆலய கோபுரத்தை கண்டமாத்திரத்தில் உலகக் காட்சிகள் மறைந்து எங்கும் பரவெளியாக ஒன்றிலிருந்து ஒன்று ஊடுருவி எங்கு திரும்பினாலும் ஜோதிமயமாகக் காட்சியளிக்கும் அனுபவத்தில் லயித்து விடுவார். பாட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது அத்தை சீனியாயி சித்ரமுத்துவை ஓலைப்பாய் முடைந்து விற்று காப்பாற்றி வந்திருக்கிறார்.

தாயின் மறைவுக்குப் பின்னர் சித்ரமுத்துவின் தந்தை மறுமணம் செய்துகொண்டார். சிற்றன்னையின் ஏச்சும் பேச்சும் சிறுவனை வாட்டி வதைத்தன. இக்காலத்தில்தான் சித்ரமுத்து திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மலேசியா செல்வதற்காக மகனைத் தயார்படுத்த விரும்பிய தந்தை, மலேசியாவுக்குக் கப்பல் ஏறியவுடன் சிற்றன்னையின் கொடுமை அதிகரித்தது.

மலேசியாவுக்கு கப்பல் ஏறினார்

சித்ரமுத்துவின் அத்தான், சித்ரமுத்துவை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் மரமேறும் தொழில்தான். ஆறாண்டுகள் கழித்து ஊர்த் திரும்பியபோது அவர் கையில் இருந்தது பத்து ரூபாய் மட்டுமே. ஆனால் மலேசியாவில் இருந்து திரும்பிய பணக்கார மைனராக ஊரை வலம் வந்தார் சித்ரமுத்து. தெம்மாங்குப்பாடல், பளபளக்கும் சொக்காய், அடாவடிப் பேச்சு, பலரும் இவருக்குப் பெண் கொடுக்க முன்வந்தனர். சீக்கிரமே இவர் குட்டு வெளிப்பட்டது. கையில் காசில்லை. ஆதரிப்பார் யாருமில்லை. அவ்வூரில் காளப்ப நாடார் சித்ரமுத்துவின் மீது இரக்கம் கொண்டு தனது இளையமகள் சிவகாமி அம்மையாரைச் சிக்கனமாக மணம்முடி;தது வைத்து மலேசியாவுக்கு அனுப்பினார்.

மலேசியாவில் தென்காசி ரங்கூன் சடகோபாலாச்சாரியாரின் பிரதம சீடர் இருசப்ப முதலியாரைச் சந்தித்த பின்னர் சித்ரமுத்துவின் வாழ்க்கை அடியோடு மாறியது. “இதுவரை பனைமரம் ஏறி பதநீர் இறக்கிவந்த உன்னை மக்களுக்கு ஞானப் பதநீர் தருகின்ற தவயோகியாக மாற்றிவிட்டோம்” என்று அறிவித்தார். தவசிரேஷ்டரான இவர் முக்காலமும் உணர்ந்தவர். இவரிடம் தீட்சைபெற்று ரகசியமான யோகசாதகங்ளையும் கற்றார் சித்ரமுத்து சுவாமிகள். தமக்கு நேரவிருக்கும் துன்ப துயரங்களை முன் உணர்ந்த சுவாமிகள் அவற்றை எதிர்கொள்ள மீண்டும் நாடு திரும்பினார்.

துயரமும் வலியும் மிகுந்த வாழ்க்கை

நாடு திரும்பிய அடிகளாரை கொடிய நோய் ஒன்று பற்றி அவர் இருவிழிகளின் பார்வையையும் பறித்தது. மனைவியும் மக்களும் உற்றாரும் அவரைக் கைவிட்டனர். பல சமயங்களில் பிச்சை எடுத்து உண்ணும்படியும் ஆயிற்று. வீண் அபவாதங்கள் சூழ்ந்தன. அப்போது அவர்மீது இரக்கப்பட்ட கிராம முன்சீப் மருத்துவ சிகிச்சைக்காக துறவி ஒருவரிடம் அனுப்பினார். துறவி தந்த பச்சிலையால் நள்ளிரவில் படீரென்று கண்பார்வை தெளிந்தது. மீண்டும் மலேசியா சென்றார். இம்முறை நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். ஈராண்டு ராணுவத்தில் பணியாற்றி மலேசிய அன்பர்களிடம் விடைபெற்று தாயகம் திரும்பினார் சித்ரமுத்து அடிகள். பின்னர் ஆன்ம ஞான போதனைகளில் ஈடுபடலானார்.

சித்த திடமும், திரேக ஆரோக்கியமும், புலன் ஒடுக்கமும், புத்தி சாதுர்யமும், புனித மொழிகளும் மக்களுக்குப் புரியும்வண்ணம் எடுத்துரைக்கும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

குருமதிமாலை, திருப்புகழ் திரவியம், பேரின்பக் குறள், மௌனானந்த மொழிகள், மரண சிந்தனை, ஞானபண்டிதன், நிறைநெறி மொழிகள், கருணைக் கண்ணீர், கிருபைப் பிரகாசப் பொக்கிஷம், திருவருட் புலம்பல், அருளொளி மலர் ஆகிய நூல்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

திருநீற்றுப் பிரசாதம் வழங்கி ஆசீர்வதிக்க சித்ரமுத்து அடிகள் இன்று இல்லை. தாய்வீடு என்ற பெயரில் அவர் சமாதி அடைந்த பனக்குளம் ஆத்ம சாந்தி நிலையத்தில் அவரது சமாதித் திருமண் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தாய்வீட்டில் பரிமாறப்படும் அன்னதானத்துக்கு தனி ருசி உண்டு.

அரூபமாக நின்று சித்ரமுத்து அடிகளார் இன்றளவும் அங்கே உணவு பரிமாறி வருகிறார்.

(தேடல் தொடரும்) கட்டுரையாளர்,தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in