

அரிதான ஒரு பேரானந்த அனுபவத்தை இயேசு தனது சீடர்கள் மூவருக்கு வழங்கிய நிகழ்வு ஒன்று பைபிளில் உள்ளது.
இயேசுவின் எழுபத்தியிரண்டு சீடர்களில் அவர் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, தான் செய்யும் பணிகளை அவர்களும் செய்யுமாறு அறிவுறுத்தினார். திருத்தூதர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தப் பன்னிருவரில் மூன்று பேரை, தனது செய்தியைப் பரப்புவதற்கான பிரதான சீடர்களாகக் கருதினார். இயேசுவின் வாழ்க்கையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் இந்த மூவரும் உடனிருந்தனர்.
இவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூவர். பேதுரு, சீடர்களின் தலைவர் என்று கருதப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவர். யாக்கோபும் யோவானும் உடன்பிறந்த சகோதரர்கள்.
இயேசுவின் மனத்துக்கு அணுக்கமான வர்கள் என்பதால் இந்த மூவரும் அவருக்கு நிகழப் போகும் துன்பங்களை எண்ணி மற்றவர்களைவிட அதிகமாகக் கலங்கியிருக்க வேண்டும். ஒருநாள் இந்த மூவரையும் அழைத்துக்கொண்டு இயேசு ஒரு மலைக்குச் சென்றார்.
சீடர்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருக்க, தன் தோற்றத்தை மாற்றி இயேசு காட்சியளித்தார். அவரது முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது. அவரது ஆடைகள் ஒளிமயமாக மிளிர்ந்தன. யூதர்களின் வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு பேர் என்று கருதப்பட்ட மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு உரையாடினார்கள்.
மனிதராகவே பார்த்துப் பழகிப்போன இயேசுவின் இறைமாட்சியைக் கண்ட அந்த நிகழ்வு சீடர்கள் மூவருக்கும் இயேசு காட்டிய சொரூபம், ஒரு பேரானந்த அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.
மெய் மறந்த நிலை
அரிதான இந்தப் பேரானந்த அனுபவங்களின்போது, அன்றாட வாழ்வில் எளிதாக நிகழாத ஒன்று நிகழ்ந்துவிடுகிறது. அது தன்னை மறப்பதாக- மெய் மறப்பதாக உள்ளது. தன்னையும் தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் பற்றிய உணர்வை இழப்பதுதான் அது. தொலைக்கவே முடியாமல், எப்போதும் நம்முடனே இருக்கும் காலம், இடம் பற்றிய உணர்வு, இந்த மெய்மறந்த நிலையின்போது மறைந்துவிடுகிறது.
எளிதில் விடுபட முடியாத தன்னுணர்வி லிருந்து இந்த அனுபவங்கள் நமக்கு விடுதலை அளிப்பதால், இதுவரை நம்மைத் தரையோடு பிணைத்திருந்த சங்கிலிகள் தகர்ந்து, நாம் மிதப்பது போன்று, உயரே பறப்பதுபோன்று உணர்கிறோம். அன்றாட வாழ்வில் வாய்க்காத அருஞ்சுகத்தை, இந்த அனுபவங்கள் தருவதால் அவை விரைவில் முடிந்துவிடாமல் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். காலம் துளியும் நகராமல் அப்படியே உறைந்துவிடாதா என்று ஏங்குகிறோம்.
இவ்வேளையில் பேசத் தோன்று வதில்லை. பேச மறந்து சிலையாக, சிலைபோல இருந்து விடுகிறோம். அல்லது என்ன பேசுகிறோம் என்று அறியாமல் ஏதேதோ பிதற்றுகிறோம்.
அனுபவம் முடிகிறது
இந்தப் பேரானந்தம் முடிய வேண்டாம் என்ற பேராவலில் பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் உம்மோடு பேசிக்கொண்டிருக்கும் மோசேவுக்கும் எலியாவுக்கும் ஒன்றுமாக மூன்று கூடாரங்களை இங்கேயே, மலை மேலே அமைக்கட்டுமா?” என்று கேட்கிறார். ஒளிமயமான மேகம் ஒன்று தோன்ற, குரல் ஒன்று கேட்கிறது. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவி சாயுங்கள்” என்று கூறிய இறைத்தந்தையின் குரலைக் கேட்டு அவர்கள் நடுங்குகின்றனர். விரைவில் இந்த அனுபவம் முடிகிறது.
ஆனால் இந்த மூன்று சீடர்களும் அந்த அனுபவத்தை இறுதிவரை ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள். அதனை நினைவுகூர்வதே அவர்களுக்குப் புதியதொரு ஆற்றலையும் உற்சாகத்தையும் அளித்திருக்கும்.
வெறும் நினைவாக, கனவாக இருக்கும்போது கிளர்ச்சி ஏற்படுத்தும் காரியங்கள்கூட நிஜமாகி சிறிது காலம் கடந்துவிட்டால், அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே அன்றாட வாழ்வில் எளிதில் கிடைக்காத இந்த ‘பறந்து, மிதந்து, மறந்து, மகிழ்ந்தி ருக்கும் அனுபவங்களை’ மனிதர்களான நாம் தேடுவதில் வியப்பில்லை.
ஆனால் இந்த அனுபவத்தை அடைய எந்த வழியைத் தேடுகிறோம் என்பது முக்கியம். மூன்று வழிகள் உள்ளன.
முதல் வழி இது போன்றதொரு அனுபவத்தை ஏற்படுத்தும் பொருட்களைத் தேடுவது. மது, போதை மருந்துகள் போன்றவை இத்தகைய அனுபவத்தைச் சிறிது நேரம் தந்துவிட்டு, மிகக் கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பேராபத்தை முழுவதும் உணர்வதற்கு முன்பே பலர் இவற்றுக்கு அடிமையாகி விடுகின்றனர். மிகச் சிலரே குணமடைந்து, இந்தப் பொருட்கள் பற்றிய பயங்கரமான உண்மையை உணர்ந்து, அவற்றை விலக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.
இரண்டாவது வழியின் மூலம் சிலருக்கு இந்தப் பேரானந்த அனுபவம் கிடைக்கிறது. அழகு, கலை, எழுத்து, இசை, அன்பு, அன்பில் முகிழ்க்கும் உறவு, பெரும் வெற்றி போன்றவற்றின் மூலம் சிலருக்கு இந்தப் பேரானந்தம் வாய்க்கிறது.
இயற்கைப் பேரழகு, இசை, எழுத்து போன்றவற்றில் தீவிரமாக மூழ்கி, பேரானந்த உச்சங்களை அடைவோர் உண்டு. இவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே. இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதில் ஐயமே இல்லை. “மனிதர் நம்மில் தோன்றக்கூடிய உணர்வுகளில் மிகச் சிறந்தது மெய்மறக்கச் செய்யும் பேரானந்தமே” என்றார் பேரறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
இறைவனால் ஆட்கொள்ளப்படுவது
இந்த மூன்று சீடர்களைப் போன்று சிலருக்கு இறை அனுபவம் இந்தப் பேரானந்தத்தைத் தருகிறது. இதுவே மூன்றாவது வழி. இறைவனால் ஆட்கொள்ளப்படுவது, இறைவன் தன்னை வெளிப்படுத்துவதை உணர்வது, இறைவனோடு இரண்டறக் கலப்பது போன்ற அனுபவங்கள் மிகச் சிலரை இந்த உயர்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. ‘பரவச நிலை' என்ற சொல்லே இறைவன் வசப்படுவது, இறைவனால் ஆட்கொள்ளப்படுவது என்பதைத்தானே குறிக்கிறது?
குறுக்குவழியான முதல் வழியில் உள்ள பேராபத்தை உணர்ந்து அதை முற்றிலும் தவிர்க்கும் கவனம் நமக்கு அவசியம். நாம் தேர்ந்துகொண்ட வாழ்க்கைமுறை, நமக்கு அருளப்பட்ட திறன்களின் அடிப்படையில் இரண்டாவது, மூன்றாவது வழிகளில் இந்த அரிதான ஆனந்த அனுபவத்தை நாம் தேட வேண்டும்.
மூன்றாவது வழி இறைவனிடம் ஆழ்ந்து அன்பு செலுத்தும் சீடருக்கே சாத்தியம் ஆகும். இந்த அடியார்கள், பக்தர்கள் இரண்டாம் வகையினரைவிடப் பேறு பேற்றவர்கள்.
“நாம் இங்கேயே, இப்படியே இருப்பது நல்லது” என்று பேதுருவைப் போன்று நாமும் பேசும் பேரானந்தத் தருணங்கள் நமது வாழ்விலும் வாய்க்க வேண்டாமா?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :majoe2703@gmail.com