

பராந்தக சோழனின் திருப்பணிகளால் உருவான தில்லை ஆடல்வல்லான் ஆலயத்தில் மூலநாதர் சன்னதிக்கும் நவகிரகங்களின் சன்னதிக்கும் நடுவே தனிச் சிற்பமாகக் காணப்படுகிறார். ‘சங்கு ஊதிப் பிள்ளை’ என்று இவருக்குப் பெயர். சிறுகுழந்தையைப் போல் கொழுக்மொழுக்கென்று, குள்ள வடிவில், குத்துக் காலிட்ட கோலத்தில் அமர்ந்துகொண்டு, இரண்டு கைகளாலும் சங்கைப் பிடித்துக்கொண்டு ஊதும் பாவனையில் உள்ளார்.
பூக்களால் ஆன மாலையை தலையைச் சுற்றி நெற்றியின் மேல் அணிந்துள்ளார். அழகான கொண்டையும், அதில் பூக்களை சொருகிக்கொண்டுமுள்ளார். இரு காதுகளின் ஓரங்களும் குழந்தைகளுக்கு சடை பின்னி ‘ரிப்பனால்’ முடிச்சிடுவது போல் காணப்படுகிறது. பின்புறத்தில் சுருண்ட முடிக்கற்றை அழகாகக் காட்சியளிக்கிறது. காதுகளில் குண்டலங்களும், கரங்களில் தோள்வளைகளும், காம்பும், இடுப்பில் ஒட்டியாணம், கால்களில் தண்டை, தோளில் முப்புரி நூலும் அணிந்துள்ளார்.
இவரைப் பார்த்தபோது, ஆண் குழந்தைகளுக்கு தலைவாரி விதம்விதமாக கொண்டை போட்டு பூ முடித்து அழகு பார்க்கும் வழக்கம் ஞாபகத்துக்கு வந்தது. இவருக்கு இனிப்பு பண்டங்களை படைத்து ஆராதனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் இவரை “சங்கு ஊதிப் பிள்ளையார்” ( நரமுக பிள்ளையார்) என்றே அழைக்கின்றனர். இதேபோல் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதியில் கொடி மரத்திற்கும் பலி பீடத்துக்கும் முன்பு அழகாகக் காட்சியளிக்கும் சிற்பத்துக்கும் “சங்கு ஊதிப் பிள்ளை” என்று பெயர்.