

துருவன், நம்மாழ்வார், வள்ளலார் போன்று மிக பால்ய வயதி லேயே ஆன்மிக விழிப்பைப் பெற்றவர் பாலயோகி. ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி பகுதியில் மும்முடிவரம் கிராமத்தில் 1930ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பிறந்தார். தந்தை கடிகிதல கங்கையா. தாயார் வெங்கம்மா. பாலயோகி பிறக்கும்போது, அவரது பெற்றோர் வசித்த சேரியில் குடிசையைத் தவிர வேறு சொத்து இல்லை.
பாலயோகியின் இயற்பெயர் சுப்பராயடு என்பதாகும். பாலயோகி தமது மூன்றாவது வயதில் தாயை இழந்தார். பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படவில்லை. தகப்பனாருடன் சேர்ந்து மாடு மேய்ப்பதில் காலம் கழிந்தது. வயல் பக்கம் தனி இட மொன்றில் தியானத்தில் மூழ்குவார். வாயில்லாப் பிராணிகள் மீது வாஞ்சை அதிகம்.
உடம்பெல்லாம் எறும்புகள்
நாட்கள் செல்லச் செல்ல உட்புற எண்ணங்களின் அலைகள் இவரைத் தற்கொலைக்குத் தூண்டின. ஆனால் அதே எண்ணங்களில் மோதுண்டு, தெய்விக நிலையில் திவலைகளாகச் சிதறியது அவரது மனம். பல மணிநேரம் வயல்களின் நடுவே மெளனத்தின் ஆழங்களில் மூழ்கி வீற்றிருப்பார். ஒரு முறை வயலுக்குப் போனார். மூன்று நாட்கள் மெளனமாக உட்கார்ந்துவிட்டார். தகப்பனார் பல இடங்களில் தேடி பிறகு சணல் பயிர் இடையே தனது குழந்தை உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் உடல் முழு வதும் எறும்புகளால் சூழப்பட்டிருந்தது.
தகப்பனார் இவரை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துப் போனார். தாகமில்லை, பசியில்லை, களைப்புமில்லை. சுப்பராயடு உடம்பெங்கும் களிப்பே தாண்டவமாடியது. கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பு அது.
இவருக்கு 16 வயது ஆனபோது ஊரில் அம்மன் திருவிழா நடந்தது. பக்தர்கள் கையில் கோயில் பூசாரி ஒரு படத்தைக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு பூபோட்டு பூஜை செய்யவேண்டும். அதுவரை தெய்விகப் புருஷர்களின் படம் எதையுமே பார்த்தறியாத சுப்பராயடு கையில் நாரதர் படம் கொடுக்கப்பட்டது. படத்துடன் தென்னந்தோப்பு ஒன்றில் தவத்தில் ஈடு பட்டார் சுப்பராயடு. திருவிழா முடிந்தும் தென்னந்தோப்பிலிருந்து அவரை அகற்ற முடிய வில்லை. திரிலோக சஞ்சாரியான நாரதருடன் அவர் அண்ட பகிரண்ட மெல்லாம் சுற்றுவதுபோல சுகாசனத்தில் வீற்றிருந்தார். பேய் பிடித்து விட்டதோ என்று தகப்பனார் மாந்திரீகர் களை அழைத்து வந்தார். மாந்திரீகர்கள் அவரை நெருங்கவும் அஞ்சிப் பின்வாங்கினர்.
உருவானது தியான நிலையம்
வெயில் அடித்தது; மழை கொட்டியது. தியானம் கலையாது வீற்றிருந்த பாலயோகியைக் கண்டு கிராமத்தார் பயபக்தியுடன் அவரைச் சுற்றி கூரை வேய்ந்தனர். பக்தர்கள் வரலாயினர். சுப்பராயடு என்று அவரைக் கூப்பிடவும் கூசினர். பாலயோகி என்று உதடுகள் உச்சரிக்க அவர் முன்பு விழுந்து வணங்கினர். பக்தர்கள் காணிக்கை குவிந்தது. அவரைச் சுற்றி ஒரு பெரிய தியான நிலையமே உருவானது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தியானம் தொடர்ந்தது. கறுப்பு நிறமான அவர் உடல் பொன்னிறமாகச் சுடர்விட்டது. உணவு உண்பதில்லை, குளிப்பதில்லை. ஆனால் தோற்றப் பொலிவோ கூடிக்கொண்டே போயிற்று.
வள்ளலார் வழியில்
இரண்டாண்டுகள் எட்டு மாதங்கள் இவ்விதம் சென்றபின் காக்கிநாடாவில் சுங்கவரி அதிகாரியாகப் பணிபுரிந்த சத்தியராஜூ என்பவர் யோகியைக் காண வந்தார். அவரிடம் யோகி வாய்திறந்து பேசினார். மக்களால் தன்னுடைய தவத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தமக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்க தாம் தவமியற்றும் அறைக்குப் பூட்டுப்போட வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சத்தியராஜூ பாலயோகியின் அறைக்கு ஒரு பூட்டைப் போட்டார். இதனை ஊர் மக்கள் எதிர்த்தனர். காவல் துறைக்கும் ரெவின்யூ அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். அவர் தியான அறைக்குப் பூட்டுப் போடுவதற்கு தடைவிதித்து 144 சிஆர்பி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
26.10.1949-ல் மாவட்ட கலெக்டரும் உதவி கலெக்டரும் உண்மை அறிய மும்முடிவரம் வந்தனர். அவர்களிடம் பாலயோகி தன் விருப்ப்படியே கதவு பூட்டப்பட்டதாகவும் சைகைகளால் தெரிவித்தார்.
இனி யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதபடி கதவைத் தாமே பூட்டிக்கொள்வதாகவும் தானே கதவு திறக்காதவரை அதை வலிந்து கஷ்டப்பட்டோ கடினமாகவோ யாரும் திறக்கக் கூடாது என எச்சரித்தார். சிவராத்திரி தினத்தில் மட்டும் வெளியே வருவதாகவும் கூறினார்.
பாலயோகி தரிசனம் தருவதற்காக புதிய மண்டபம் கட்டப்பட்டது. சிவராத்திரி அன்று 15.02.1950இல் லட்சக்கணக்கில் பக்தர்கள் அவர் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூடினர். அவரது தியான நிலையத்தின் கதவுகள் படீலென்று திறந்தன. பாலயோகி பாதம் தரையில் பாவாமல் மின்னல் வேகத்தில் மண்டபம் வந்து சேர்ந்தார். காலை 5 மணி முதல் 6 மணி வரையும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையும் தரிசனம் தந்தார். மற்ற நாள்களில் பூட்டிய அறைக்குள்ளிருந்து ஊதுபத்தி வாசனையும், கற்பூர வாசனையும், புதிய பூக்களின் சுகந்தமும் வீசும்.
அவர் மக்களுக்குச் சொன்ன உபதேசங்கள் அப்பாராவ் என்பவரால் குறித்துக் கொள்ளப்பட்டன.
இலங்கையில் பிறந்து தமிழகத்துக்கு வந்து உயிர்நீத்த கவிஞர் பிரமிள் எழுதிய ‘பிக்ஷாடனன்’ சிறுகதையில் மும்முடிவரம் பாலயோகியின் நிஷ்டை பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பு விசேஷ மானது. “இளைஞர்கள் இருவரும் மும்முடிவரம் என்ற கிராமத்தை நோக்கி ஒரு நீண்ட நாளைய சர்ச்சைக்கு முடிவு தேடிச் சென்றார்கள். முடிவு. எந்த சமூக அமைப்பையும் அனுமதிக்காமல் எவனையும் எதற்காகவும் சுரண்டாமல் பிச்சைகூட ஏந்தாமல் ஏன் சமூகம் தரும் உணவைக்கூட உட்கொள்ளாமல் உட்கார்ந்திருந்தது.
அதாவது தமது பதினாறாவது வயதில் தியானம் கைகூடிய ஒருவர் இன்றுவரை நாற்பது வருஷங்களுக்கு மேலாக அன்ன ஆகாரம் எதுவுமின்றி ஆனால் உடலின் செழிப்போ, ஸ்தூலத் தூய்மையோ கலையாமல் நிரந்தர நிஷ்டையில் உட்கார்ந்திருந்தார்.”
ஆந்திர மாநிலம் கோதாவரி நதியின் கிளை நதியான விருத்தா கெளதமி நதிக்கரையோரம் உள்ள மும்முடிவரம் பாலயோகி ஆசிரமத்தில் இயற்கை அழகும் அமைதியும் நிலவுகின்றன. பிரமிளைப் போன்று நமது மனத்திலும் அதுபோன்ற எண்ணங்கள் ஆசிரமத்தின் கோபுரத்திலிருந்து நம்மை வந்தடைகின்றன.
பாலயோகியின் அருள்மொழிகளில் சில
எந்தப் பொருளுக்கும் உரிமை பாராட்டக் கூடாது.
உடல் நிலையானதல்ல. பணமும் நிலமும் நிலையானவையல்ல. எவையும் நிலையானதல்ல எல்லாம் கடவுளுக்குச் சொந்தம்.
கடவுள் நமக்குத் தந்த அறிவுக்கூர்மைக்கு அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
உங்கள் தகப்பனார் செயற்கையாகச் சேர்க்கப்பட்டார். உண்மையான தகப்பனார் கடவுளே ஆவார்.
கடவுளுக்கும் பக்தர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.
ஐம்புலன்கள் மாயையில் கொண்டு தள்ளுகின்றன.
குறைந்த அளவே உண்ணுக.
ஐம்புலன்களை வெற்றிகொண்டால் உணவும் தேவையில்லை. தண்ணீரும் வேண்டாம்.
உலக விவகாரங்களில் மகிழ்ச்சி கொண்டு இந்த மனிதப் பிறவியை வீணே கழித்து விடாதீர்கள்.
நல்ல எண்ணங்களை மனத்தில் கொள்க.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு, thanjavurkavirayar@gmail.com